15ஆதாமின் அப்துல்லா பொள்ளாச்சி அபி

அன்று மாலை மில்லில் இருந்து சுக்கூர் வீடு திரும்பியபோது, ஷரீபும் வீட்டில்தான் இருந்தான். பாய்க் கோரைகளை வண்ணங்களில் அமிழ்த்தியெடுத்து, நிழலில் உலர வைத்துக் கொண்டிருந்தாள் மெகரூன்.

“என்ன..உங்க மாமுக்கு ஒடம்பு சரியில்லையா..? இந்நேரத்துலே வீட்டுலேயிருக்காரு..?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லே..உங்ககிட்டே என்னவோ பேசணுமின்னுதான் இன்னைக்கு நேரத்துலே வந்துருக்காரு..” சுக்கூரின் கேள்விக்கு,பதில் சொன்ன மெகரூன் தனது வேலையில் கவனமாக இருந்தாள்.

கைகால் கழுவி உடைமாற்றிக் கொண்டு,தங்கள் அறைக்கு வந்த சுக்கூருக்கு வழக்கத்திற்கு மாறாக ஜுலைக்கா தேநீரை எடுத்துக் கொண்டு வந்தாள்.பின்னாலேயே வந்த ஷரீப், சுக்கூரையே பார்த்தபடி ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு,ஏதோ நீண்ட சவாரிக்குப் போகும்போது குதிரையை ஓட்ட வசதியாக ஜட்காவில் அமரும் தோரணையில் அமர்ந்து கொண்டான்.

‘என்ன..இன்றைக்கு இவர்களின் நடவடிக்கை எல்லாமே புதிராக இருக்கிறதே..?’ சுக்கூருக்கு அடிவயிற்றில் ஏதோ லேசாக கலங்குவது போலிருந்தது. தவறாக ஏதோவொன்று நடக்கப் போவதாகவும் அவனுக்குள் உறுத்தியது.

சுக்கூரின் அவஸ்தையை வெகுநேரம் நீடிக்கவிடவில்லை ஷரீப்.”பாய்..நிக்கா முடிஞ்ச பின்னாடி,பொண்ணை உங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய் குடும்பம் நடத்துறதுதான் மொறைன்னு..உங்களுக்கே தெரியும். உங்களுக்கு சொந்தமா வீடுவாசல் எல்லாம் இருக்குது. அதை யாரோ.., அனுபவிக்கவும்,அவங்களுக்கே சொந்தமாக்கிக்கவும் நாளைக்கொரு நெலைமை உருவாயிடுச்சுன்னா என்ன பண்றது..?” ஷரீபின் பேச்சில் உனது சின்னம்மா என்றோ,சித்தி என்றோ சொல்லாமல், “யாரோ..”என்று அழுத்தம் கொடுத்து பேசியது சுக்கூருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அநாதையாய் விட்டு மறைந்துபோன தாய்,
,தந்தைக்கு பிறகு,தங்களை கஷ்டப்பட்டு வளர்த்து,தனது சகோதரிகளுக்கு நிக்கா செய்து வைத்து, தனக்கொரு வேலையும் வாங்கிக் கொடுத்து..அப்பப்பா.. பாத்திமா பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்தே வளர்ந்தவனாயிற்றே., தனக்கு முன்பாகவே..தனது சித்தியை யாரோ..என்று சொல்ல,இவருக்கு என்ன துணிச்சல்..?’ சுக்கூரின் முகமும்,பார்வையும் கடுகடுவென மாறியது நன்றாகத் தெரிந்தது.

ஆனால்,ஷரீப் அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.“இங்க பாருங்க பாய்..,இப்ப என்னவோ நம்மளை வளத்தாங்க செஞ்சாங்க அவங்களை எப்படி வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்றதுன்னெல்லாம் தோணும்..! ஆனா.. பிள்ளைகுட்டினு ஆனப்புறம் காலம் போகப்போக,உங்களுக்கே இன்னும் பலவிதமாத் தோணும்..!”

‘அவர்களை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்லவா..? என்ன இந்த ஆள் ஏற்கனவே தனக்குள் ஏதோ முடிவு செய்து கொண்டு அதை தன்மேல் திணிக்கும் பாவனையிலேயே பேசிக் கொண்டிருக்கிறானே,என்ன நடக்குது இங்கே..?’சுக்கூரின் மனசுக்குள் ஆத்திரம் பொங்கியது. கட்டுக்கடங்காத கோபத்துடன்,ஏதோ சொல்ல வாயைத்திறந்த சுக்கூரை, கையமர்த்திய ஷரீப்,“இப்போ நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்.நான் சொல்றதை முழுசாக் கேட்டுட்டு அப்புறமாப் பேசுங்க..!” என்றபடி அவன் தொடர்ந்து அரைமணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக்கொண்டேயிருந்தான்.

இருப்பு கொள்ளாமல் தவித்த சுக்கூர், தனது மனைவி மெகரூன் தனக்கு ஆதரவாகவோ, ஷரீபுக்கு எதிராகவோ ஏதேனும் பேச முனைவாள் என்று அவளைப் பார்த்தான். மெகரூனோ தனக்கு சம்பந்தமேயில்லாத யாரோ இருவர் பேசிக்கொண்டு இருப்பதாக,அவள் வேலையை மட்டும் காரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.சட்டென்று அவள் மீது ஒரு அருவெறுப்பு படர்வதை தவிர்க்கவே முடியவில்லை. சொத்து என்று வந்துவிட்டால்,சொந்தங்களைக் கூட ஒதுக்கத்தான் வேண்டுமா..? இது என்ன மனநிலை..? ஷரீபும்,ஜுலேக்காவும் தனக்கு நேரடியாக சம்பந்தமில்லாத அந்நியர்களைப் போலத்தான். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால்,மெகரூன் தனது மனைவியல்லவா..? கணவனது விருப்பம் தெரிந்து அதற்குத் தகுந்தாற்போல நடந்து கொள்ள முயற்சிக்கலாமே..அவ்வளவு கூட வேண்டாம்..முதலில் தனது விருப்பம் என்னவென்றாவது அறிந்து கொள்ள முயற்சித்திருக்கலாமே.. இப்படி சம்பந்தமேயில்லாதது போல் அவள் நடந்து கொண்டிருப்பது, நடித்துக் கொண்டிருப்பது போலததான்; தோன்றியது சுக்கூருக்கு.

இவளுக்குத் தெரியாமலா ஷரீப் இப்படிப் பேசிவிடுவார்.? தனது சித்தி எவ்வளவு கஷ்டப்பட்டு தங்களை வளர்த்தார் என கதையாய் கதையாய் இவளும் கேட்டுக் கொண்டிருந்தவள்தானே, பாத்திமா இல்லாவிட்டால் தங்களது நிக்கா இவ்வளவு சுலபமாக நடந்தேறியிருக்குமா..? அழகானவள் என்பதையும் கடந்து ஒரு அபலைக்கு வாழ்வு அளிக்க ஆண்டவன் தனக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்துள்ளான் என எவ்வளவு நம்பினாள். இந்த மெகரூனுக்கு நன்றியுணர்ச்சியே இல்லாமல் போய் விட்டதே..? சுக்கூர் மனதுக்குள் குமைந்தான்.

மாலை நேரத்து சூரியன்,பொசுக்கென்று மறைந்துபோய்,இருள் மெதுவே கவியத் துவங்கியது.மேற்கிலிருந்த மேகங்கள் கண்ணீர் சிந்தியதைப் போல,காற்றில் சில்லிப்பு பரவியிருந்தது.

குழந்தை அப்துல்லாவையும்,இப்ராகிமையும் சாப்பிடவைத்துக் கொண்டிருந்தாள் பாத்திமா. “உங்களுக்கும் சாப்பிடப் போட்டுத் தரட்டுமா..?” ஏதோ யோசனையில் மூழ்கிக்கிடந்த நாகூர் மீரானை,பாத்திமாவின் குரல் கலைத்தது.

“வேண்டாம்..கொஞ்சநேரம் கழிச்சு சாப்பிட்டுக்கறேன்..”

“வந்ததிலிருந்து சரியாப் பேசக்கூட மாட்டேங்குறீங்க..என்ன பலமான யோசனை..?”

பாத்திமாவையும்,குழந்தைகளையும் சில விநாடிகள், அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த நாகூர் மீரான்,“ஷரீப் இன்னைக்கு கடைக்கு வந்திருந்தார்..” என்று சொல்லத் துவங்கினார். முடிவில், “ஏன் பாத்திமா..வாடகைக்கு வேற வீடு பாத்து,அவங்களைப் போகச் சொன்னா..அது நல்லாயிருக்குமா..?”

பாத்திமா நீண்ட சிலநிமிடங்கள் கழித்து,“அது நல்லாயிருக்காதுதான்..ஆனாலும் சுக்கூர் நம்ம பையன்தானே..அவன்கிட்டே ஒரு வார்த்தை கேட்கலாம்..!”

அன்றைய இரவு, துக்கத்தையும்,தன்னிரக்கத்தையும் அவர்கள் மேல் சுமையாய் அழுத்தியதோடு, தூக்கத்தையும் பிரித்திருந்தது.

--------- தொடரும்

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (12-Jan-16, 9:44 pm)
பார்வை : 112

மேலே