தெரிந்தோ தெளிரியாமலோ
தெரிந்தோ தெ(ளி)ரியாமலோ
===========================
விடியலின் மஞ்சள் இடம் பெயர்ந்துகொண்டிருந்தது
சோம்பல்முறித்த காம்புகளில்
மலர்வாடை நறும்பவில்லை
அவன் கண்கள் திறக்கவில்லையாம்
புல்வெளி தொட்டு
பூமியின் வேர்களுக்கு மின்னூக்கி செலுத்தி
பசுமையின் நரம்புகளை
நெட்டிக்கச் செய்பவன் முன்னால்
முதலில் எந்த பூதான் போட்டியிட்டுத்தோற்பது
பின்னோக்கி பின்னோக்கி
ஒன்றன்பின்னால் ஒன்றாக ஒளிந்துகொள்கின்றன
சூரியரை கண்களாகக் கொண்டுவிட்டு
ஓசோன் மண்டலத்தை
இமைகள் செய்து மூடியிருந்தான் போல்
அவை பிரிகையில்
யூகிக்க முடியா நிறங்களோடு
அத்தனை பிரகாசம் தெறித்துக்கொண்டன
எத்தனை சாய்ந்து பார்த்தும்
நதிவிளிம்பில் அவன் கால்கள் அமிழவில்லை
கன்னிலோக தேவனாக இருப்பானோ
விரல்கள் தாவித்தாவி
அதோ நாவல் பழங்களைப் பறிக்கின்றனவே,,,
ஈரேழு கரங்கள் சுழல
செவ்விள அந்தியின் முகில் போர்வை வளைத்து
அங்கே நட்சத்திரப் பருக்கள்
பூத்ததாகச் சொல்லி
வெட்கவாடை தெளித்தவன்
வெண்மதி நிர்மலம் பருகி
வானம் நாணச் செய்துவிட்டான் ம்ம்ம்
தேடிச்சென்று தொடும் தூரத்தில் மறைந்துவிட்டு
துயில் துறந்த கண்களுக்கெல்லாம்
கனவுகளாகிறான்
தெரிந்தோ தெரியாமலோ
அவன் கால் தடங்களில் விதைந்த
மூங்கில் விதைகள்
காடுகளாகி முரளிகளாகி காற்றடைத்து
ஏகாந்த அலை வீசுகின்றன
பொய்களை திருடத் தெரியாத
உடைந்த கண்ணாடி சில்லுகளைப்போல
சிறு குழந்தையாகிக்கேட்கிறேன்
இதையாவது சொல்லுவானா
இனி பிரபஞ்ச பூக்களை ஒன்று திரட்டி
எப்போது அவன் என்னை
சித்திர லோகத்து பெண் செய்யப்போகிறானாம் ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"