காட்சிப் பிழைகள் 35 - கோபி சேகுவேரா

வாசலில் நீ போட்ட ரங்கோலி
எனக்கான சிக்கு கோலம்...

தாவணியில் வருகையில்
என்னிடம் கவிதை தீர்ந்துவிடுகிறது
மொத்த உருவமாய் நீ...

அடிக்கடி நீ
மாராப்பு சரி செய்யும்போது
மனசெல்லாம் மண்வாசனை...

நீயில்லா ஊர் திருவிழாவில்
கல்லெறிந்த மண்பானை நான்...

பாவாடை சட்டையோடு
நீ திரிந்த... குளக்கரையில்...
இன்னும் சுற்றித்திரிகிறேன்
அரைக்கால் டவுசரோடு நான்...

பொங்கல் புத்தாடையோடு
நீ என்னை தேடும்... ஓரக்கண்ணில்...
எனது பொங்கல் தித்திக்கிறது...

காதலின் மலை உச்சியில்
வரையாடாய் எட்டிப்பார்த்த என்னை...
கருவாடாய் சுட்டு தின்கிறாய்
உன் கொள்ளி கண்களால்...

உன் கன்னக்குழி
எனக்கான ஆறடி...

உன் அடர் மௌனங்கள்...
வார்த்தைகள் தளும்ப தளும்ப
நீ எழுதும் தொடர்கதைகள்...

பின்னிரவில்... ராஜாவின் இசை நீ...
தென்றல் வந்து தீண்டுது
உன் நினைவின் வண்ணமாய்... மனசுல...

வார இறுதி நாட்களாய்
நான் உன்னை கண்டேன்...
திங்கட்கிழமையாய்
உங்கப்பா முறைக்கிறார்...

நிஜமற்ற பொய்யொன்றில்
நிஜமாக பொய்யொன்று இருக்கிறது
நீ என்னை மறுத்ததற்காக உண்மை...

உடல் துளைத்து... உயிர் துறந்தேன்...
உன் விழி தோட்டாக்களில்...
என் காதல் பொலிவியாவை
காப்பாற்றும் சேகுவேராவாய்...

எழுதியவர் : கோபி சேகுவேரா (15-Jan-16, 6:35 am)
பார்வை : 509

சிறந்த கவிதைகள்

மேலே