நன்மையளிக்கும் பொங்கல் பொங்குவோம்

அடைமழை அடித்துத் துவைத்தெடுத்தக் கோரத்தில்
==அனைத்தும் இழந்து அனாதைபோல் வாழ்கின்ற
இடைநிலை மக்கள் எதிர்கொண்ட துக்கங்கள்
==இருவிழி நீராய் எம்முன்னே பாய்ந்தோட
தடையற பொங்கும் தன்னலமாய் தானின்று
==தரணியில் அவர்கள் முன்எங்கள் பொங்களின்று
விடையிலாக் கேள்விக் குவியல்கள் குவித்தெங்கள்
==விழிக்குள் கண்ணீர் பொங்கலிட வைக்குதன்றோ?

பரம்பரை நிலத்தை பங்கிட்டு விற்றெடுத்த
=பணத்தினால் வாங்கிய மாடிமனைக் குள்ளிருந்து
சிரமத்தை அனுபவித்து சிறப்பென்று சொல்லாமல்
==சிக்கலுள் அனுதினம் சிக்கிட்டக் உள்ளங்கள்
வரமென அமைந்த விளைநிலத்துப் பயிரறுத்து
==வீட்டினில் பொங்கிட வழியற்று கடைதன்னில்
தரமிலா வகையுள தைவாங்கி மனம்பொங்கல்
==தமிழரின் பொங்கலில் தவிப்புள்ள பொங்கலாகும்

நிலங்கள் எங்கிலும் நிரந்தரமாய் என்றென்றும்
==நிறைவுடன் விளையும் அமைதியுடன் ஐக்கியமும்
பலமுடன் அறுவடை செய்கின்ற பக்குவத்தைப்
==பரிசெனக் கொண்டிடும் பல்லினமும் உலகத்தில்
கலகமும் குரோதமும் தவிர்த்தின்ப சமத்துவமெனும்
=கலயம் தனிலே அன்பென்னும் அரிசியிட்டு
நலமுடன் பொங்கும் பொங்கல்தான் நமக்கெல்லாம்
==நன்மை யளிக்கும் பொங்கலென்று பொங்குவோமே!

*தோழமைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !
வாழ்த்துகளுடன்.,
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (15-Jan-16, 2:26 am)
பார்வை : 67

மேலே