கவிதை கோப்புகள் - சந்தோஷ்

முகநூலில் அவ்வப்போது எழுதிய வரிகள் ஒரு தொகுப்பாக....

-----

அடுப்பில் நீ சமைக்கும்
முருங்கைக்காய் சாம்பார்
கொதிக்கும் போதே
நீ வாசமாகிறாய்
நானுன் வசமாகிறேன்.
---

சமையலறையில்
நீ வெங்காயம் நறுக்கி
அழும்போதெல்லாம்
பெண்பாவம் போக்க
நான் நளப்பாகம்
பழகத்துடிக்கிறேன்.
--

அள்ளியெடுத்து முடித்த
ஈரக்கூந்தலோடு
மார்கழி அதிகாலையில்
என் ஜன்னல் எதிரில்
குனிந்து நிமிர்ந்து
பதினாறு புள்ளி வைத்து
நீ வரைந்த கோலத்தில்
பதினேழாவது புள்ளியென
உன்னிடம் நான் கண்டதை
நீ கண்டு உணர்ந்தாலும்
யாரிடமும் சொல்லிவிடாதே.
என் அத்தைப் பெண்ணே !
அது மன்மத மிச்சம்
காதல் மச்சம்..!
--


எனது கற்பனைக்கான
ஆழமென்பது
நீ ஊகம் செய்திடாத தூரம்.

எனது கவிதைக்கான
வாசமென்பது
உனது நாசி அறியா மணம்
.
எனது எழுத்தின்
வீரியமென்பது
உனது ஞானத்தில்லாத விடயம்.

எனது மாசற்றக் காதலை
உணராத
நீயெனக்கு ஒரு பிணம்.

இன்று
நீ இல்லாத
என் மனபூகோளத்தில்
நானொரு பறவை.
நானொரு காற்று
நானொரு சுதந்திரம்
நானொரு நான்
நானொரு கடவுள்.
--

காதல் தோல்வி
பிரசவிக்கிறது
பல கவிஞர்களை.
பாவம் ! இலக்கியம்
அவசரச்
சிகிச்சைப் பிரிவில்..!
--


நண்பா..
உனை விட்டுபோனவளுக்காக
எதற்கு
இத்தனை இத்தனை
பித்தளை வரிகள்.?
வந்துச் சேரும் ஒரு தேவதைக்கு
எழுது.
வர்ணனையேறும் அரியணை
பொன் தாள கவிதைகள்..!
--


எரியத் தொடங்கிய பொழுது
கிடைத்த வெளிச்சத்தை
அணைந்தப் பின்பு
தேடும் வாடிக்கையாகிறது
சிலரின் வாழ்க்கையென்பது..!
எரியும் மெழுகுவர்த்தியை
எரிந்தப் பின்பு
தேடுவதில் நியாமில்லை
தோழா..!
எரியும் போதே..
பற்றிக்கொள்
உனக்கான வெளிச்சத்தை
எழுதிக்கொள்
உனக்கான சரித்திரத்தை..
--


பழைய காதலியை
சந்திப்பது என்பது
நாம் எழுதிய
ஆகசிறந்த
பழைய கவிதையினை
மீள் வாசிப்பின் பொழுது
உணரப்படும்
புது தரிசனத்தைப் போன்றது.
--

ஐம்பது ரூபாய்க்கு
கிடைத்து விடுகிறார்
பாரதியார்.
பத்து ரூபாய்க்கு கூட
கிடைக்கப் பெறுகிறார்
கம்பர்.
ஐநூறு ரூபாய் கொடுத்தாலும்
கிடைக்க மாட்டேன் என்கிறார்
வைரமுத்து..
பழைய புத்தக கடையில்...

--

பறவைகள் தங்களுக்குள்
கடத்திக்கொள்ளும் பாஷையை
புரியத்தொடங்கும்போது
நான் உங்களிடமிருந்து விடுப்பட்டு
உங்கள் பாஷையில்
பைத்தியம் என்றாகிறேன்.

--
நதியின் பாலத்தில்
இரயில் செல்லும் போதுதான்
எவ்வித சலனமின்றி
விற்பன்னரிடம் வாங்கினேன்
இருபது ரூபாய்க்கு
ஒரு லிட்டர்
தண்ணீர் போத்தல் !
--


கடந்ததை மறந்துவிடு
வந்ததை வணக்கமிடு
போனதை போகவிடு

விட்டதை தொடாதே
தொட்டதை விடாதே

இலட்சியத்தை உருவாக்கு
வைராக்கியத்தை நிலைநாட்டு- நல்
பட்டத்தை தயாரித்து- புது
சுயவித்தை புரிந்திடு நீ..
இனி..வெற்றியின்
தேவதை வசம் நீ.!

தை பிறக்கிறது
வழி உண்டாகுது
வாகை சூடிடு...
மனமே.. வாகை சூடிடு..!

--

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (16-Jan-16, 8:10 pm)
பார்வை : 177

மேலே