வேறென்ன வேண்டும்

ஜென்மங்கள் பல என்ற
நம்பிக்கை எனக்கில்லை
ஆயினும் வாழ்த்திருப்பேன்...,
மடி அணைக்கும் தாயாக,
தோள் கொடுக்கும் தோழியாக,
மனம் விரும்பும் காதலியாக,
மழலை தந்தே தாரமாக,
மார் சாய்ந்திடும் சேயாக,
ஒரு ஜென்மம் கொண்டு
நானுனக்காய் பல பிறவி...
வாசனை மலர்களின்
வேஷமெல்லாம் கலைந்ததோ
உன் நேச வாசம்
நாசி தொட்டு போனதிலே..
வானவில் வண்ணங்கள்
சாயமிழந்து சோர்ந்ததோ
உன் விழிகளின் வண்ணங்கள்
கொள்ளை கொண்டு போனதிலே..
அழகினில் - உ(ன்)னை
வெல்ல நினைத்திங்கே
மன்மதனும் தோற்றுவிட்டான்..
காதலில் - உ(ன்)னை
மிஞ்ச எவருண்டு - ஐயோ
கண்ணனும் களைத்துவிட்டான்..
அன்பு கொண்டு
என் உயிரினில்
யாழ் மீட்டியவன் நீ,
இன்பம் தந்து
இச் சகத்தில் - எனக்காய்
அவதரித்தவன் நீ!
மணிக் கண்களுக்குள்
வாழ்ந்திருப்பேன்..
மணித்தியாலங்கள் யாவும்
மறந்திருப்பேன்...
மயிலிறகாய் - உன்
விரலென் தலைகோத
மடி சயனித்தே
மறித்தும் போவேன்,..
மண்ணுலகில் இதை விஞ்ச
பேரின்பம் வேறுண்டோ?