பொங்கல்

வாசலிலே நீர்தெளித்து கோல மிடுவோம்
வாசமிகு மஞ்சளிலை வாழை கட்டுவோம்
வாஞ்சையுடன் அரிசியிட்டு அடுப்பை மூட்டுவோம்
வாசனையும் சர்க்கரையும் சேர்த்து சமைப்போம்
வானதிர குலவையிட்டு உறவை யழைப்போம்
வாழ்த்துச் சொல்லி முகமலர்ந் துகரும்பாய் இனிப்போம்
வானவெளி புவிமுழுதும் கூடப் பெறுவோம்
வாழவைக்கும் உயிர்க்கோளம் மலரச் செய்குவோம்

குறிஞ்சிமுல்லை மருதமென நிலங்கள் வகுத்து
காடுவெட்டி கழனியாக்கி பயிர்கள் வளர்த்தோம்
மறித்தநீரை வாவிதேக்கி வரப்பை உயர்த்தியே
வாழவழி சொல்லிவைத்த உழவர் வாழ்கவே
அறிவியலை அனுபவமாய்க் கொண்டு வாழ்ந்தனர்
ஆக்கம்பல புவிக்குத்தந்து வாழ்ந்து சென்றனர்
பறிபோன தூயகாற்று மண்ணை மீட்டிட
பறைகொட்டி முழக்கிடுவோம் கூடி யெழுவோம்

புறம்பாடி களங்கண்ட வீர மறவர்
இனங்காக்க வாளேந்தி உயிரை மாய்த்தனர்
மறஞ்சார்ந்த தமிழினமே உலகோர் இகழவே
துதிபாடி அடிதொழுதல் நன்றோர் சொல்லீர்
அறவழியில் பொருளீட்டும் மாண்பைத் தள்ளியே
அரசியலார் அழிமரபில் வீழ்தல் நன்றோ
உறவுகெட பகைமூட்டும் சாதிப் பேய்களை
போகியன்று மூட்டிநாமும் புதிதாய் எழுவோம்

வள்ளுவன்சொல் லுயிரோம்பல் நமது நீதியே
பல்லுயிரைப் பாடுபடும் உழவு மாட்டினை
உள்ளுவோம்நல் லறிவினாலே உணர்வோம் நாளுமே
அணுவளவும் ஆக்கமேநம் வாழ்வில் காணுவோம்
தள்ளுவோமே பகைமையினை பாசம் வெல்லவே
பகிருவோம்நற் பொங்கலையே சுற்றம் சொந்தமே
அள்ளுவோம்பே ரன்பினாலே அகிலம் முழுவதும்
தமிழரென தமிழாலே வாழ்வோம் உண்மையே!

அ. யூஜின்
முதுகலைத் தமிழாசிரியர்
தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி
தூத்துக்குடி

எழுதியவர் : அ. யூஜின் (18-Jan-16, 7:48 pm)
சேர்த்தது : ஜெம் JANE
பார்வை : 139

சிறந்த கவிதைகள்

மேலே