நிலாச் சோறு
கைக் குழந்தையாய் ஆறுமுகம் இருந்த போதே தன் கணவனை இழந்தாள் பாப்பாத்தி. படிப்பறிவு இல்லாத போதும், பத்து பாத்திரம் தேய்த்தாவது தன் மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற வைராக்கியதுடன் இருந்தாள்.பள்ளிக்கு போக சைக்கிள் கேட்டான் ஆறுமுகம்னு தன் கணவன் நினைவாய் இருந்த தாலியை விற்று சைக்கிள் வாங்கினாள். ஆறுமுகமோ தன் தாயின் கஷ்டங்கள் புரியாமல் தன் நண்பர்களுடன் தன்னை ஒப்பிட்டு, இது இல்லை அது இல்லை என சதா புலம்புவான்.
பல நாள் ஈரத்துணியை தன் வயிற்றில் கட்டி உரங்கினாலும், ஆறுமுகத்தை ஒரு நாளும் பட்டினி போட்டதில்லை பாப்பாத்தி. அவளது சிறு குடிசையின் திண்ணையில் உட்கார்ந்து சோற்றையும் அன்பையும் சேர்த்து உருண்டையாக்கி தன் அருமை மகனுக்குத் தருவாள். அழகிய நிலவின் ஒளியும், மெல்ல வறுடும் காற்றும்,அசைந்து ஆடும் செடிகளும், ஆருயிர் மகனின் அருகாமையும் சேர்ந்து “இது தான் சொர்க்கம்” என்று தோன்றும் பாசத்தை தவிர ஒன்றும் அறியா பாப்பாத்திக்கு.
"இன்னும் எத்தனை நாளுக்கு மா நம்ம கஷ்டப்படறது? எத்தனை நாள் தான் இப்படி வெறும் சோத்தையும் குழம்பையும் சாப்டறது? வாய்க்கு ருசியா கறி மீனோட விருந்து எப்ப சாப்டறது?" என்று புலம்பிக் கொண்டே சாப்பிட்டான் ஆறுமுகம்." அதோ பாரு கண்ணு மூனாம் பிறை நிலா. இன்னும் பத்து நாள்ல முழு நிலாவா ஆயிடும். அதே மாறி தான் நம்மளும் கொஞ்ச நாள்ல நல்லாயுடுவோம் ராசா" ஆறுதலாய் பேசினாள் பாப்பாத்தி."அடப் போம்மா நீ ஒன்னு. பௌர்ணமிக்கு அடுத்த நாளே மறுபடி தேய ஆரமிச்சுரும்" , விடியலைக் காணா விரக்தியில் குமுறினான் ஆறுமுகம். "அது தான் ராசா வாழ்க்கை. சந்தோசம், துக்கம் எதுவும் நிலைக்காது." பாப்பாத்தி பேசி முடிப்பதற்குள் "போம்மா" என்று அலுத்துக் கொண்டு போய் படுத்தான் ஆறுமுகம்.
பத்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கு செல்ல மறுத்தான் ஆறுமுகம். நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியாய் ஊர் சுத்தித் திரிந்த மகனை, தான் வேலை செய்யும் எசமானரின் கையில் காலில் விழுந்து, அவரின் சிபாரிசுடன் ஒரு பெரிய துணிக்கடையில் வேலைக்குச் சேர்த்தாள் பாப்பாத்தி. கையில் கொஞ்சம் காசு பார்த்ததும் தனி மிடுக்கு வந்தது ஆறுமுகத்துக்கு. இயற்கையிலேயே களையாய் இருந்த ஆறுமுகம், நல்ல துணி மணிகளுடன் இன்னும் ஆணழகனாய் வலம் வந்தான். "என் ராசா, என் ராசா" என்று உச்சிக் குளிர்ந்தாள் பாப்பாத்தி.
அந்த சந்தோஷம் அதிக நாள் நிலைக்கவில்லை பாவப்பட்ட பாப்பாத்திக்கு. துணிக்கடை முதலாளியின் மகள் அமுதா ஆறுமுகத்தைப் பார்த்ததும் மயங்கி, "அவரை தான் கட்டிக்குவேன்னு" ஒற்றைக் காலில் நின்றாள். தன் செல்ல மகளின் ஆசையை நிறைவேற்ற நினைத்த முதலாளி ஆறுமுகத்திடம் "வீட்டோட மாப்பிள்ளையாய் வந்து, உன் வீட்டுப் பக்கம் தலை வெச்சு படுக்காட்டி சம்மதம்" என்றார். நல்ல காலம் பிறந்தது என்று குஷியான ஆறுமுகம் அமுதாவை மணமுடித்து, துணி கடையின் முதலாளி ஆனான். பணக்கார வீட்டின் மாப்பிள்ளையாய் பந்தாவாய் சுற்றிய அவன், பாப்பாத்தியை ஒரு முறை கூடப் போய் பார்கவில்லை. புது பணக்கார மோகம் அவன் தாயை கூட மறக்கும் மாயை செய்தது.
காலம் கடந்தது. ஆறுமுகத்தின் வருகைக்காக தினமும் காத்திருந்த பாப்பாத்தி ஒருநாள் கண் மூடினாள். அமுதா ஆறுமுகத்திற்கு "நிஷா" என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. செல்வச் செளிர்ப்பில் வளர்ந்த அமுதாவுக்கு நண்பர்கள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாவற்றிலும் அதிக நாட்டம். தாயான பின்னும் துளியும் மாறாததால் வேலைப் பெண்களிடமே அதிகம் வளர்ந்தாள் நிஷா. "அம்மா வாம்மா சாப்பிடலாம்" என்று தினமும் கேட்கும் ஆறுவயது குழந்தையிடம், "சாரி மா, அம்மாக்கு ஒரு வேலையிருக்கு. நீ சாப்பிடு குட்டி" என்பாள் அமுதா.
அன்றும் சாப்பிட மறுத்த தாயிடம், "அம்மா நான் சாப்பிட்டதும் மொட்ட மாடில பொய் விளையாடலாம் வரியா. இன்னிக்கு பெரிய நிலா மேல இருக்கு" என்றாள் நிஷா குட்டி. "ப்ளீஸ் குட்டி. நீ விளையாடு." என்று அமுதா சொல்ல, "நிஷா செல்லம், அப்பா உன் தட்ட மொட்ட மாடிக்கு கொண்டு வரேன். வா போலாம்" சொல்லிக்கொண்டே நிஷாவின் தட்டுடன் மொட்டை மாடிக்கு விரைந்தான் ஆறுமுகம். அறுசுவை உணவை உருண்டையாக்கி தன் மகளுக்குக் கொடுக்கையில் தன்னை அறியாமல் அவன் கண்களில் நீர் துளிர்த்தது. முழு நிலவில் ஔவைக்கு பதில் பாப்பாத்தி தெரிந்தாள். "அப்பா உங்க கூட நிலா வெளிச்சத்துல சாப்பிடறது ரொம்ப பிடிச்சுருக்கு" என்று கள்ளம் கபடம் இல்லாமல் பேசிய நிஷா வின் குரல் பாப்பாத்தியின் குரலாய் ஒலித்தது. தந்தையின் கண்களில் நீரை பார்த்ததும், "அப்பா தூசி விழுந்துச்சா? நான் ஊதிவிடறேன் "என்று அருகில் வந்த நிஷாவை "என்ன மன்னிச்சுரு அம்மா" என்று வாரி அணைத்தான் ஆறுமுகம்.