நட்பென்னும் நந்தவனம்

கோவிலூர் கிராமத்தில் ஒரு compound வீட்டில் குடி இருந்தனர் சண்முகம் மற்றும் சதாசிவம் குடும்பத்தினர். compound வீடு என்பதால் குளியலறை, சிறிய தோட்டம், முன்வாசல் முற்றம் என அனைத்தையும் இரு குடும்பங்களும் பகிர்ந்து கொண்டன. சண்முகத்தின் மனைவி கல்யாணி, அன்பும் பண்பும் நிறைந்த குணவதி. இந்த எழில் மிகு தம்பதியருக்கு "ரதி" என்ற குட்டி தேவதை பிறந்தாள். சதாசிவத்தின் இல்லத்தரசி தாமரை. பேருக்கு ஏற்றார் போல் மென்மையான தூய்மையான அழகிய மலரை ஒத்தவள். ரதி பிறந்த அதே மாதம் தாமரை "பாமா" என்ற தாரகையை ஈன்றாள்.

இரண்டு குடும்பங்களையும் compound மட்டும் அல்ல பாசமும் இணைத்தது. "அக்கா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குமே ன்னு கொண்டுவந்தேன்" என்று கல்யாணியிடம் தன் அறுசுவை உணவை அன்புடன் தினமும் தருவாள் தாமரை. பாசத்தை பொழிவதில் கல்யாணியும் சளைத்தவள் அல்ல. "இந்தா தாமரை , உனக்கு காய்ச்சல் குறையற வர நீ எந்த வேலையும் செய்யக்கூடாது. நான் சமையல், கடைக்கு போய் வரது எல்லாத்தையும் பாத்துகறேன். பாமா வுக்கும் சாப்பாடு ஊட்டி விடறேன். நீ நல்லா ரெஸ்ட் எடு" என்று கள்ளம் கபடம் இல்லா அன்பால் குளிப்பாட்டுவாள் கல்யாணி. சதாசிவம் சண்முகம் இருவரும் ஒன்றாய் சேர்ந்து தொழில் செய்யலாம் என்று முடிவு செய்து இன்னும் ஒன்னுக்குள் ஒன்னு ஆனார்கள்.

ரதி பாமா இருவரும் இரு உடல் ஒரு உயிர் போல் வளர்ந்தனர். பள்ளிக்கு போய் வருவது, விளையாடுவது, படிப்பது, உண்பது என்று அனைத்தையும் சேர்ந்தே செய்தனர். தன் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ரதி இடம் ஓடி வருவாள் பாமா. ரதியின் சரணாகதி பாமா தான். பல்லாங்குழி ஆடிக்கொண்டே அன்றைய நிகழ்வுகள் அனைத்தயும் பாமாவிடம் ஒப்பிப்பாள் ரதி. "பாமா, ரொம்ப கவலையா இருந்தது ஆனா உன் கிட்ட சொன்னப்பறம் அப்பாடா ன்னு இருக்கு" என்று நிம்மதி பெருமூச்சு விடுவாள் ரதி. விடுமுறை நாட்களில் வெளியூர் செல்கையில் ரதி இடம் சொல்ல மறந்து விடக்கூடாது என்பதற்காகவே காகிதத்தில் குறிப்பு எழுதுவாள் பாமா.

இணை பிரியா தோழிகளாய் இருந்த ரதி, பாமா வாழ்க்கையில் விதி விளையாடியது. அவர்கள் பதிமூன்று வயதாய் இருக்கும் போது, அவர்களது தந்தையர் நடுவே தொழில் ரீதியிலான விரிசல் ஏற்பட்டது.
சண்முகம் சதாசிவம் இருவரும் விட்டுக் கொடுக்காமல் முரண்டு பிடிக்கவே குடும்பங்கள் பிளந்தன. "இனி இவங்க மூஞ்சிலயே முழிக்கக் கூடாது" என்று சொல்லி சண்முகம் வேறு வீடு , வேறு தொழில் என புது வாழ்க்கை தொடங்கினான். தினமும் பள்ளியில் ரதியும் பாமாவும் தங்கள் நட்பை தொடர்ந்தனர். என்றாவது ஒரு நாள் மீண்டும் குடும்பங்கள் இணையும் என்று நம்பி வாழ்ந்தனர்.

தொழிலில் எதிரிகளாய் மாறிவிட்ட சண்முகமும் சதாசிவமும் பழசை மறந்து நஞ்சை கக்கினர்.ஒரு வருடத்தில் இன்னும் ஒரு பூகம்பம் வெடித்தது."கேடு கேட்ட சண்முகம் இருக்க பக்கம் தல வெச்சு படுக்க கூடாது. நம்ம வேற ஊருக்கு போயிருவோம்" என்று தாமரை, பாமா இருவரையும் கூட்டிக்கொண்டு வேறு ஊர் சென்றார் சதாசிவம். ரதியும் பாமாவும் இனி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே போவதில்லை என்பது அந்த பாசப் பறவைகளுக்கு அன்று தெரியவில்லை.

வெளியூர் குடிபெயர்ந்த பின்னும் பாமா, ரதியிடம் சொல்வதற்காக எழுதும் குறிப்புகளை நாள் தவறாமல் எழுதினாள். காகிதங்கள், புத்தகங்கள் என நாட்கள் செல்லச் செல்ல குறிப்பு மூட்டைகளால் பரண் நிறைந்தது. அம்மா அவ்வப்போது "எதுக்கு குப்பை சேக்கற?" என்று காகிதக் கிறுக்கல்களை களைந்து எரிவது தெரிந்த போதும், பாமா தன் குறிப்புகளை தொடர்ந்தாள். எழுதும் போதே, ரதியிடம் பேசுவதாய் உணர்ந்தாள் பாமா. ரதி பள்ளி, பின் கல்லுரி சென்று வீடு திரும்பியவுடன் தனியே பல்லாங்குழி ஆடுவாள். குழிகளில் சோழிகளை போட்டவாறே பாமா விடம் பேசுவாள். "தனியா பேசிட்டு பல்லாங்குழி ஆடினா பைத்தியம்னு சொல்லுவாங்க" என்று அம்மா பலமுறை எச்சரித்தும் அதை ரதி காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவள் தனக்குத் தானே பேசவில்லை, பாமா விடம் பேசுகிறாள் என்று யாருக்கு புரியும்?

நாட்கள் நகர்ந்தன. பாமா, ரதி இருவருக்கும் திருமணம் நடந்தது. பாமாவிற்கு தீபா என்ற மழலையும், ரதிக்கு ரமா என்ற மகளும் பிறந்தனர்.(ஒரு விஷயம் பாத்தீங்களா?) பாமா ரதி இருவருமே, தங்கள் மகளுக்கு தன் பெயரின் ஒரு எழுத்தையும், தன் தோழியின் பெயரின் ஒரு எழுத்தையும் சேர்த்து பெயர் சூட்டி இருந்தனர்.இதைத்தானா ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று சொல்லுவர்?

காலச் சக்கரம் நிற்காமல் சுழண்டது.கணவர் இறந்த நாளன்று இரவில் கண்களில் நீருடன் தனியே பல்லாங்குழி ஆடிய எழுவது வயது ரதியை, "பாட்டிக்கு பைத்தியம் முத்திடுச்சு. புருஷன் செத்த அன்னிக்கு யாரவது பல்லாங்குழி ஆடுவாங்களா?" என்று நகைத்தது சொந்த பந்தம்.பல நூறு பேர் வீட்டில் குழுமி இருந்த போதும், தன் ஆசை நாயகனை இழந்த சோகத்தை சொல்லி அழ, பாமா வின் மடியை நாடினாள் நரை விழுந்த மூதாட்டி ரதி.

பாமா, ரதிக்கு எழுதும் குறிப்புகளை கடைசி வரை தொடர்ந்தாள். ஒரு நாள் கண்மூடினாள். பாமா ரதி இருவரும் பார்த்து பேசி அருபது ஆண்டுகளுக்கு மேல் ஆனா போதும், அவர்களின் நட்பு அணுஅளவும் குறைய வில்லை. பாமா ரதியை விதி பிரித்தது என்று சொல்பவர்கள் தான் மூடர்கள். ஆருயிர் தோழிகளை பிரிக்க எப்பேர்பட்ட சதியாலும், மிகக் கொடிய விதியாலும் முடியாது.நினைவுகளில் நித்தமும் நட்பு தொடரும்.

உலகின் பல்வேறு மூலைகளில் வாழ்ந்தாலும், பார்த்து பல ஆண்டுகள் ஆனாலும்.. பசுமையான நினைவுகளையும், முடிவில்லாத நட்பையும் தன் நெஞ்சில் சுமந்து வாழும் அனைத்து தோழர், தோழியருக்கு இந்தக் கதை சமர்ப்பணம்.

எழுதியவர் : ரம்யா ரெங்கராஜன் (20-Jan-16, 4:15 am)
சேர்த்தது : ரம்யா ரெங்கராஜன்
பார்வை : 214

மேலே