மயில் இறகு

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் கடைக் குட்டி ஷ்ருதி, படு சுட்டி, படிப்பிலும் கெட்டி. மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கா என்று அனைவரையும் சொல்ல வைக்கும் நேர்த்தியான அம்சங்களுடன் விளங்கினாள் ஷ்ருதி. வாய் ஓயாமல் பேசும் வாயாடி. அவளது துரு துருவிழிகள் அவள் இதழ்களை விட அதிகம் பேசும்.

“அப்பா, நல்ல மார்க் வாங்கணும் பிளஸ் டூ ல. எல்லா சப்ஜெக்ட்ஸ்கும் டியூஷன் போகணும் ப்பா", படிக்கும் ஆர்வத்துடன் படபடத்தாள் ஷ்ருதி. மகளின் சொல்லிற்கு ஒருபோதும் தட்டாத அப்பா, "வெரி குட். நாளைக்கே பொய் செர்ந்துகோம்மா" என்றார். சூரியோதயத்தை ஒரு போதும் பார்த்திராத ஷ்ருதி, மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்து கிளம்பி டியூஷனில் ஆஜர் ஆனாள்.டியூஷன் போய்வரும் வழி எல்லாம் தோழி களுடன் பேசி சிரித்து செல்லும் ஷ்ருதி, பாடம் தொடங்கியதும் முழு மனதுடன் கவனிப்பாள்.

ஷ்ருதியின் செவிக்கு உணவாக இருந்த டியூஷனில், அன்று அவள் பார்வைக்கும் விருந்து கிடைத்தது. சட்டென்று அவள் பார்வை ஆண்கள் வரிசையில் அமர்ந்திருந்த அருண் மேல் விழுந்தது. ஒரு நொடி அருணும் (அண்ணலும்) நோக்கினான், அவளும் நோக்கினாள். ஆசிரியர் மின்சாரம் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், தன் உடம்பில் மின்சாரம் பாய்வதாய் உணர்ந்தாள் ஷ்ருதி. தன்னிலை படுத்திக்கொண்டு மீண்டும் பாடத்தில் தன் கவனத்தைச் செலுத்தினாள்.

தினம் ஒரு முறையாவது அருணை பார்ப்பது அவளை அறியாமல் வழக்கம் ஆயிற்று. ஆனால் அதில்விந்தை என்ன வென்றால் , அவள் பார்ப்பதை அவளே அறியாத பொது, அருண் அதை எப்படியோ உணர்ந்து சரியாய் பார்ப்பான். தினமும் அவர்களின் விழிகளின் சங்கமம் அழகாய் அரங்கேறியது. அவரவர் நண்பர்களுடன் இருக்கும் ஷ்ருதி, அருண் இருவருக்குமே விழிகளில் பேச மட்டுமே தைரியம் இருந்தது. எவ்வளவோ பேச ஏக்கம் நெஞ்சில் இருந்த போதும், பெயரை தெரிந்து கொள்ள கூட தைரியம் வரவில்லை.

கடைசி நாள் டியூஷனில், அவர்களது விழிகள் சந்தித்த வேளையில், அவளின் புத்தகத்தில் இருந்து ஒரு மயில் இறகு கீழே விழு வதை கவனித்தான் அருண். டியூஷன் முடிந்ததும் விரைந்து சென்று அதை பத்திரப் படுத்தினான். பிளஸ் டூ தேர்வில் ஷ்ருதி, அருண் இருவருமே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். சென்னையில் ஒரு நல்ல பல்கலைக்கழகத்தில் பீ.ஈ சேர்ந்தான் அருண். ஷ்ருதி திருச்சியில் தேசிய தொழில் நுட்பக் கல்லூரியில் பீ.ஈ படித்தாள்.

நாட்கள் சென்றது. வருடங்கள் உருண்டது. மேல் படிப்பிற்கு அயல் நாடு சென்றான் அருண். எங்கு சென்றாலும், அந்த மயிலிறகை தன்னோடு எடுத்துச் செல்ல அவன் ஒரு போதும் மறந்ததில்லை. அவனது சுக துக்கங்களை மயில் இறகோடு பகிர்ந்து கொள்வான். அவனுக்கே அசட்டுத்தனமாய் தெரிந்த போதும், மயிலிறகு அவனுக்கு ஆறுதல் அளித்ததை அவனால் மறுக்க முடிய வில்லை. படித்து முடித்து, நல்ல வேலையில் கை நிறைய சம்பாதித்த அருணுக்கு பெண் பார்க்கும் வேலையில் மும்மரமாய் இருந்தாள் அவன் தாய்.

ஷ்ருதி படிப்பு முடித்து பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்தாள். நடிகர் சுர்யா பாட்டு பார்க்கும் போதெல்லாம் ஏனோ அருணின் முகம் அவள் கண்முன் தோன்றும். பல வருடங்கள் கடந்தும் இன்னும் துளியும் அழியமால் நினைவில் இருந்தது அவன் முகம்.”இப்போ எங்க இருக்கானோ, எப்படி இருக்கானோ" என்று நினைத்து புன்முறுவல் புரிவாள். கடை குட்டி ஷ்ருதிகும் வரன் தேடிக் கொண்டிருந்தனர் அவள் பெற்றோர்.
"ஷ்ருதி, இந்த சனிக்கிழமை வீட்டுக்கு வந்துடு ம்மா.ஞாயிற்று கிழமை உன்ன பொண்ணு பாக்க வராங்க. பையன் பேரு அருண். அமெரிக்கால படிச்சுட்டு பெரிய எடத்துல வேல பாக்கறான். பாக்கவும் அழகா இருக்காம்மா.ரொம்ப நல்ல இடம்னு தரகர் சொன்னார். நான் வேணா தரகர பையன் போட்டோவ உனக்கு ஈமெயில் பண்ண சொல்லவா?" மூச்சு விடாமல் தொலைபேசியில் பேசினார் ஷ்ருதியின் அப்பா. "சரிப்பா. நான் வரேன். போட்டோ எல்லாம் வேணாம்ப்பா. அதான் நேர்லயே பாக்க போறேனே" என்றாள் ஷ்ருதி.காலத்தின் அழகிய கோலங்களின் ஒன்றாக ஷ்ருதி, அருண் இருவரது ஜாதகங்களும் பொருந்தி ஷ்ருதியை அருண் பெண் பார்க்கச் சென்றான்.

நேர் வகிடு எடுத்து தலை பின்னி , அதில் இரட்டை சரம் மல்லிகைப்பூ வைத்து, மொழி பேசும் விழிகளில் மையிட்டு, கரு நீலப் புடவையில் தேவதையாய் தோன்றினாள் ஷ்ருதி."பொண்ண நல்லா பத்துக்கோப்பா" என்றார் அருணின் அப்பா. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை ஷ்ருதி உடம்பில் மின்சாரம் பாய்ந்தது. அழகிய பெண்ணில் இருந்து தேவதையாய் ஷ்ருதி உருமாறி இருந்த போதும், அருணால் அந்த கண்களை கண்டு பிடிக்க முடிந்தது. இருவரும் சம்மதம் சொல்லவே இனிதாய் முடிந்தது அவள்களின் திருமணம்.

"ஷ்ருதி. உங்கிட்டஒரு விஷயம் கேக்கணும். சரி விடு. ஒன்னும் இல்ல" என்று மழுப்பினான் அருண். "என்ன நாலும் சும்மா சொல்லுப்பா" நாணத்துடன் சிணுங்கினாள் ஷ்ருதி. "நாம ரெண்டு பேரும் ஒன்னா டியூஷன் படிச்சோம், உனக்கு ஞாபகம் இருக்கா?பல வருஷம் ஆயிடுச்சி, எத்தனையோ பேர பார்க்கறோம். நம்ம அப்போ சின்ன பசங்களா வேற இருந்தோம். அதான் நீ மறந்துருப்பியோன்னு நெனைச்சு கேக்க தயங்கினேன்" என்றான் அருண்.
"இத சொல்லவா இவ்வளோ பில்டப் குடுத்தே. உன்ன போய் ஞாபகம் இல்லாமலா? நல்லா ஞாபகம் இருக்கு மின்சாரக் கண்ணா" என்றாள் செல்லமாக. "இன்னுமொரு மேட்டர் இருக்கு. சொல்லவா ? " பூரிப்புடன் சொன்னான் அருண். "மறுபடி பில்டப்பா. சரி சொல்லு" ஆர்வத்துடன் கேட்டாள் ஷ்ருதி."நீ டியூஷன்ல ஒரு மயிலிறகை தவற விட்டுட்ட. அத நான் இன்னிக்கு வர பத்திரமா வெச்சுருக்கேன் தெரியுமா?" காதலுடன் கொஞ்சிப் பேசினான் அருண். "எல்லாம் சரி தான். ஆனா அந்த மயில் இறகுக்கு பின்னாடி, என் வீட்டு போன் நம்பர் எழுதி இருந்தேனே அத ஏன் சார் இன்னும் பார்க்கல?" என்று சொல்லி கள்ளச்சிரிப்பு சிரித்தாள் ஷ்ருதி.

எழுதியவர் : ரம்யா ரெங்கராஜன் (19-Jan-16, 11:02 pm)
சேர்த்தது : ரம்யா ரெங்கராஜன்
Tanglish : mayil iragu
பார்வை : 350

மேலே