அறை எண் பதினாறு - பாகம் 3

........................................................................................................................

முன்கதைச் சுருக்கம்

(சசிகலா தற்போது தங்கமணி மருத்துவமனையின் டூட்டி டாக்டர். சஞ்சய் அவள் கல்லூரித் தோழன். சஞ்சய்க்கு தெரிந்த, சசிகலா அறியாத ரகசியம்- சஞ்சய்யின் பெற்றோர் அவன் சசிகலாவை காதலிக்கும் பட்சத்தில் அவளையே மணந்து கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டனர். (கூடவே இன்னொன்றும் சொன்னார்கள்.)

..........................................................................................................................................................................................

நாற்பது நாட்கள் ஓடிப் போனது. அன்று சஞ்சய்யின் அம்மா, தங்கமணி மருத்துவமனைக்குப் போன் செய்திருந்தார். சஞ்சய்க்கு பெண் பார்த்திருப்பதாகவும் அநேகமாக ஏதாவது தை முகூர்த்தத்தில் கல்யாணம் வைக்கப் போவதாகவும் சொன்னார்.

சசிகலா பெண்ணின் பேர், ஊர், பிற விவரங்களை ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
டாக்டர் பெண்- பேர் வித்யா, லண்டன் ரிடர்ன், இருக்கப்பட்ட குடும்பம், அவர்கள் ஜாதி.

ஒரு வாரம் கழிந்தது.

அன்றிரவு நோயாளிகள் அதிகமில்லை. ஏழு சர்ஜரி செய்யப்பட்ட நோயாளிகளை கவனித்து தூக்க ஊசி போட்டு விட்டு, டிஸ்சார்ஜ் சம்மரி எழுதி முடித்தபோது நடுநிசி தாண்டியிருந்தது. சசிகலாவுக்கு சஞ்சய்யை பார்த்து நாளானது போல் இருந்தது. அதே நிமிடம் கதவு தட்டப்பட்டது. சஞ்சய்தான். ஏகமாய்க் களைத்திருந்தான். மனதில் என்ன பாரமோ? அவளைப் பார்த்ததும் உற்சாகமானான்.

‘‘ஏய், சசிகலா, ’’ உற்சாகமாக அழைத்தபடி உள்ளே வந்தான் சஞ்சய். ‘‘டைரக்டரை வழியில பார்த்தேன். உன்னை ரொம்ப புகழ்றாரு.. உங்க பொண்ணு நல்ல சூட்டிகைன்னாரு.. நீ எனக்குப் பொண்ணா? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே. அதுக்குள்ள என் வயசுலயே எனக்கொரு பொண்ணு எப்படி வந்தா? ’’

பெருமிதமும் பிரியமும் பொங்க அவன் பேசினான்.

‘‘உட்கார்’’ என்றாள் அவள், தன் சேரை தூரமாக இழுத்தபடி. நன்றாக கையை காலை நீட்டி நாற்காலியில் சரிந்தான் அவன். கண்களை சுழற்றி விட்டு ‘‘ரூம் பிரமாதம்’’ என்றான்.

‘‘ஏது இந்தப் பக்கம்? ’’

‘‘அது... நான் ஒண்ணும் உன்னைப் பார்க்க வரல்ல. டாக்டர் ராஜ்குமார் அஞ்சு கேஸ் போட்டுருக்கார். பார்த்துக்கச் சொன்னார். அதான் வந்தேன். ’’

சசிகலாவுக்கு முதல் வாக்கியத்திலேயே பதில் கிடைத்து விட்டது. மேலும் டாக்டர் ராஜ்குமாரின் நோயாளிகள் முதல் தளத்தில் இருக்கிறார்கள். இரண்டாம் தளத்தில் அவள் அறை மாத்திரமே. எனினும் ஏதும் அறியாதவளாய்த் தொடர்ந்தாள்.

‘‘அத பார்த்துக்கத்தான் நான் இருக்கேனே?’’

‘‘அந்த அஞ்சு கேஸ்ல எங்க மாமாவும் ஒருத்தர். சாப்பாடு கொடுத்துட்டுப் போக வந்தேன். மாமா பையன் பைக்கில வந்தேன். என்னை டிராப் பண்ணிட்டு போயிட்டான். காலைல முதல் பஸ் பிடிச்சுப் போகணும்.’’

‘‘ஹையா, அப்ப நைட் இங்கதானா? ’’

‘‘சந்தோஷத்தைப் பாரு,’’ சசிகலாவின் குழந்தைத் தனத்தை ரசித்துச் சொன்னான் சஞ்சய்.

அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்த அதே சமயம் அவன் பிரசன்னமானது அவளைக் கிளர்ச்சியுறச் செய்திருந்தது. அது அப்படியே பழைய சினிமாப் பாடலாக, சன்னமாக வெளிப்பட்டது.

‘‘நிலவே, உனக்குக் குறையேது?-நீ
நினைத்ததும் கதிரவன் வரும்போது.
மலரே, உனக்குத் தடையேது?- மனம்
அருகினில் அருகினில் வரும்போது... ’’

‘‘ஆகா ’’ கண் மூடி ரசித்தான் சஞ்சய். அப்படியே சினிமாப் பாடல்கள் பற்றி பேச்சு திரும்பியது.

முக்கியமாய் ‘அத்திக்காய் காய் காயி’ன் சிலேடை வரிகள், ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்’ பாடல். பேச்சு பாட்டாக மாறி இருவரும் மாறி மாறி பாட ஆரம்பித்தனர். ஆண் உணர்வுகளை அவளும் பெண் பாடுகிற பகுதிகளை அவனும் லயித்துப் பாடினர். அது அவர்கள் டெக்னிக். அப்படிப் பாடினால்தான் யாரேனும் கேட்க நேர்ந்தால் பாட்டை மாத்திரம் ரசிப்பர்!

இரவுப் பணியில் டாக்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மற்றபடி நோயாளிகளுக்குத் தொந்தரவு கொடுக்காமல் அறைக்குள் பேசுவதோ, பாடுவதோ, செஸ், கேரம் விளையாடுவதோ, சத்தம் போட்டு படிப்பதோ குற்றமாகக் கொள்ளப் படுவதில்லை.

சற்றைக்கெல்லாம் புத்துணர்ச்சியோடு நிமிர்ந்து உட்கார்ந்தான் சஞ்சய். ‘‘சசி, நீ நல்ல டாக்டர் மாத்திரமில்ல, நல்ல மருந்தும் கூட.’’ சேரிலிருந்து எழுந்தான். ‘‘நான் மாமா ரூம்ல தங்கிக்கிறேன்’’

‘‘சஞ்சய்... வீணா வந்தா,’’

வீணா அவர்களுக்கு ஜூனியர். சஞ்சய்யை மடக்க சபதம் போட்டவள்.

‘‘வீணாத்தான் வந்திருக்கா, என்ன சொன்னா? ’’ - அவள் வந்தது வேஸ்ட் என்ற அர்த்தத்தில் சஞ்சய்.

‘‘உன்னை ‘மீட்’டணுமாம் ’’ - (சந்திக்கணுமாம்)

‘‘அவ தானே வீணா? நான்தானே அவளை மீட்டணும்; அவ எதுக்கு என்னை மீட்டணும்?’’ இருவரும் சிரித்தனர். எழுந்தவன் அமர்ந்து விட்டான்.

‘‘சசி, ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் பார். நீ இனிமே என்னைப் பார்க்க வராதே; என்கிட்ட பேசாதே’’

சசியின் கண்களில் குறும்பு மின்னியது.

‘‘ஆமாமா, மாப்பிள்ளையாகப் போற. அப்படியே உன் இதயத்துல சிந்தாம, சிதறாம ஒருத்தியை பதிக்கப் போறே. இடையில நானெல்லாம் என்னதுக்கு?’’

‘‘எவ்வளவு கரெக்டா தப்பா புரிஞ்சிட்டிருக்க?..’’ சஞ்சய்யின் குரல் ஐஸ்க்ரீமாய் குழைந்தது. அதில் வேறொன்றும் இருந்தது.

‘‘நான்தான் ஏற்கெனவே ஒருத்தியை அழிக்க முடியாதபடி இதயத்துல பதிச்சுட்டேனே; ’’ சொல்லி விட்டு சஞ்சய் தலை குனிந்து கொண்டான். ‘‘உன்னை பார்க்க வர வேண்டாம்னு சொன்னது நீ எதிர்ல வந்தா இந்த விஷயம் எனக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியமா இருக்காதுங்கறதாலதானே உன்னை விலகிப் போகச் சொல்றேன். இப்பப் பாரு, எனக்குத் தெரிஞ்ச ரகசியம் உனக்கும் தெரிஞ்சிடுச்சி.’’


தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (20-Jan-16, 12:37 pm)
பார்வை : 192

மேலே