ஒரு சென்டிமீட்டர்- சீன மொழிச்சிறுகதை - பி ஷுமின் தமிழில் திஇராமீனா

தனியாக பஸ்ஸில் பயணம் செய்யும் போது பெரும்பாலும் டிக்கெட் வாங்குவதைப் பற்றி டாவ்யிங் கவலைப்பட மாட்டாள்.ஏன் கவலைப்பட வேண் டும்? அவள் பயணம் செய்யாமல் இருந்தாலும் கூட பஸ் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நிற்கும். டிரைவருக்கும் கண்டக்டருக்கும் வேலை இருக்கும். அதே அளவு பெட்ரோல் தான் செலவாகும்.

டாவ் யிங் சாமர்த்தியமாக இருக்க வேண்டும். கண்டக்டர் பொறுப்பான வராகத் தெரிந்தால் அவள் பஸ்சுக்குள் ஏறின உடனே டிக்கெட் எடுத்து விடுவாள். ஆனால் அவன் சிறிதும் கவனம் இல்லாதவன் போல இருந்தால் கனவில் கூட அவள் டிக்கெட் வாங்க மாட்டாள். அது அவனுக்குச் சின்ன தண்டனையாக இருக்கட்டும். அவளுக்கும் சிறிது பணம் சேரும் என்று நினைப்பாள். ஒரு தொழிற்சாலை கேண்டீனில் அவள் சமையல் வேலை செய்கிறாள். வெண்ணெயும், கோதுமையும் சேர்த்துச் செய்யப்படும் கேக் தயாரிப்பது அவள் வேலை என்பதால் நாள் முழுவதும் நெருப்பின் அருகே தான் இருப்பாள்.

இன்று தன் மகன் எக்சோ யீயோடு இருக்கிறாள். பஸ்சுக்குள் ஏறும் அவனைத் தொடர்ந்தாள். பஸ்சின் கதவு மூடும் போது அவள் ஜாக்கெட் அதில் சிக்கி பின்பகுதி கூடாரம் போல புஸ்ஸென்று விரிந்தது. ஒருவாறு அதைச் சரி செய்தாள்.

“அம்மா! டிக்கெட்” யீ கேட்டான். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பழக்க வழக்கங்கள் மீது அதிக கவனம். தன் கையில் டிக்கெட் இல்லாமல் இருப்பது அவனுக்குப் பயணம் செய்வது போல் இல்லை. பஸ் கதவின் பெயிண்ட் உரிந்த பகுதியில் ஒரு விரலின் அடையாளத்தோடு 1.10 எம் என்ற எண் இருந்தது.

யீ வேகமாக நுழைந்தான். அவனுடைய தலைமுடி காய்ந்து பசையற்றுத் தூக்கி ஒரு கட்டு போல இருந்தது. யிங் பணத்தை மிக கவனமாகச் செலவழித்தாலும் தன் குழந்தையின் உணவிற்குச் செலவாகும் பணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. அதனால் அவன் போஷாக்கு உடையவனாக, புத்திசாலியாக இருந்தான். ஆனால் தலைமுடி மட்டும் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருந்தது. தூக்கி இருந்த முடியைச் சரிசெய்து படிய வைத்தாள். அவன் மண்டை மென்மையானதாகவும், ரப்பர் போலவும் இருந்ததை அவளால் உணர முடிந்தது. இரண்டு சரிபாதி பிரிவுகள் சந்திக்கிற இடைவெளி ஒவ்வொருவரின் தலை உச்சியிலும் உண்டு. அது சரியாகச் சேரா விட்டால் ஒரு மனிதனின் நிலை பொருத்தமில்லாமல் போகும். அரைக்கோளங்கள் மிகச் சரியாக இருந்தாலும் அவை மூடிக்கொள்ள சிறிது நேரம் எடுக்கவே செய்யும். இது வாழ்க்கைக்கும் உரியது. அது திறந்தே இருந்தால் சிறு துவாரம் வழியாக உடலில் தண்ணீர் பாய்வதைப் போல வெளி உலகம் தெரியும். ஒவ்வொருமுறை மகனைப் பார்க்கும் போதும் கர்வமான பொறுப்பு உணர்ச்சியால் பெருமிதம் அடைவாள். அவள்தான் இந்த மென்மையான உயிரை உலகிற்குக் கொண்டு வந்தாள். இந்த உலகில் அவள் இருப்பு யாருக்கும் முக்கியமானதாகத் தெரியாமல் போனதை உணர்ந்தாலும் குழந்தைக்கு அவள்தான் உலகம். அதனால் எந்தக் குறையும் இல்லாத தாயாக இருக்க வேண்டும்.

யீன் உருண்டைத் தலைக்கும், டிக்கெட் தேவைப்படுவதற்கான உயரத்தைக் காட்டும் பெயிண்ட் செய்யப்பட்ட எண்ணுக்கும் இடையில் அவள் விரல்கள் இருந்தன. அவள் எப்போதும் எண்ணையோடு வேலை செய்ததால் நகங்கள் பளீரென்றும் வெண்மையாகவும் இருந்தன.

“யீ ! நீ இன்னமும் அவ்வளவு உயரமாக இல்லை. ஒரு சென்டிமீட்டர் குறைவாகவே இருக்கிறாய்” மென்மையாகச் சொன்னாள். அவள் குடும்பப் பின்னணி அப்படி ஒன்றும் உயர்ந்ததில்லை. கதைப்புத்தகங்களை அவள் படித்ததும் இல்லை. ஆனாலும் அவள் அன்பும் இரக்கமும் உடையவளாக தன் மகனுக்குச் சரியான உதாரணமாக இருக்க விரும்பினாள். இது சுயமுடையவளாகவும் , கண்ணியமானவளாகவும் அவளை உயர்த்தியது.

“அம்மா! நான் உயரம் தான். நான் உயரம் தான்“ குதித்துக் கொண்டே கத்தினான். “அடுத்த முறை டிக்கெட் வாங்கலாம் என்று போன தடவை நீங்கள் சொன்னீர்கள். இது அடுத்த முறை. நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை” சொல்லி விட்டுக் கோபமாக அம்மாவைப் பார்த்தான். அவள் மகனைப் பார்த்தாள். ஒரு டிக்கெட்டுக்கு இருபது சென்ட் ஆகும். அது போகட்டும் என்று விட்டு விடக் கூடியதில்லை. அதை வைத்து ஒரு வெள்ளரிக்காய் , இரண்டு தக்காளி அல்லது இரண்டு பத்தை முள்ளங்கி அல்லது நான்கு நாட்களுக்கான கீரை வாங்க முடியும். ஆனால் யீ முகம் பாதி மலர்ந்த பூ சூரியனின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பது போல இருந்தது.

“உள்ளே செல்லுங்கள். நுழைவு வழியை மறைக்கக் கூடாது, பீஜிங்கில் இருந்து பா டிங் வரை நின்று கொண்டே போகும் ரயில் இல்லை இது. நாம் அடுத்த ஸ்டாப்பிங்கிற்கு வந்து விட்டோம்.” கண்டக்டர் கத்தினான். பொதுவாக இந்த மாதிரி பேச்சு அவள் டிக்கெட் வாங்குவதைத் தடை செய்யும். ஆனால் இன்று “இரண்டு டிக்கெட்” என்று கேட்டாள்.

கூர்மையாக யீ யைப் பார்த்த கண்டக்டர் “இந்தக் குழந்தை டிக்கெட் வாங்கு வதற்கு ஒரு சென்டி மீட்டர் உயரம் குறைவாக இருக்கிறது” என்றார்.

யீ தன்னை பல சென்டி மீட்டர் குறுக்கிக் கொண்டான். டிக்கெட் வாங்க வேண்டும் என்ற ஆசையை மிஞ்சும் குழந்தைத்தனம். இருபது சென்டுக்குள் சுய கௌரவத்தை வாங்குவது என்பது சிறு பிள்ளை செயல்தான். எந்தத் தாயும் தன் மகனை மகிழ்ச்சிப் படுத்தும் வாய்ப்பை இழக்க விரும்ப மாட்டாள். “நான் இரண்டு டிக்கெட்டுகள் வாங்க விரும்புகிறேன்” மென்மையாகச் சொன்னாள். யீ இரண்டு டிக்கெட்டுகளையும் தன் உதடுகள் அருகே பிடித்துக் காகிதக்காற்றாடி போல ஒலி எழுப்பினான்.

அவர்கள் பஸ்ஸின் மையப் பகுதியை அடைந்தனர். இங்கே இன்னொரு கண்டக்டர் அவர்கள் டிக்கெட்டை சோதிக்க இருந்தான். அவன் அவ்வளவு புத்திசாலி இல்லை என்று டாவ் யிங் நினைத்தாள். மகனோடு பயணிக்கும் போது எந்தத் தாய் தான் சரியான கட்டணத்தைத் தராமல் இருப்பாள்? எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் தன் மகன் முன்பு அவமானப் படவிரும்ப மாட்டாள்.

அவள் டிக்கெட்டைக் கொடுத்தாள். “இந்த டிக்கெட்டுக்களுக்கான பணத்தை கம்பெனியில் இருந்து நீங்கள் திரும்பப் பெறுவீர்களா?” கண்டக்டர் கேட்டான். “இல்லை” என்றாள். உண்மையைச் சொல்லப் போனால் இந்த டிக்கெட்டுகளை வேலை செய்யும் இடத்தில் சுற்றுலா போகும் போதோ, வெளியே செல்லும் போதோ பயன்படுத்துவாள். தன் சைக்கிளைப் பயன் படுத்திக் கொண்டு இந்த டிக்கெட்டைக் காட்டி பணத்தைத் திரும்பப் பெற்று விடலாம். அவளும் அவள் கணவனும் சாதாரணத் தொழிலாளர்கள் தான். எந்தச் சேமிப்பும் கண்டிப்பாகப் பயன் தரும். ஆனால் யீ புத்திசாலி. உடனே “அம்மா ! நாம் பிரத்யேகமாகப் போகும் இடங்களுக்கு எப்படி டிக்கெட் காசைப் திரும்பப் பெற முடியும்” என்று வெளிப்படையாக சப்தமாகக் கேட்டு விடுவான். குழந்தையின் முன்னால் அவள் எப்போதும் பொய் சொல்ல மாட்டாள்.

தாயாக நடந்து கொள்வது எப்படி என்று புத்தகங்களில் சொல்லப் பட்டவைகளைப் பின்பற்றுவது கடினம் தான். ஆனாலும் ஒரு நல்ல அம்மாவாகத் தன் மகன் முன்னே இருக்க அவள் முடிவு செய்தாள். அவளுடைய செயல்கள் எப்போதும் மென்மையானதும் அன்பானதும் ஆகும். உதாரணமாக அவள் எப்போதும் முலாம்பழம் சாப்பிட்டாலும் பழத்தைச் சாப்பிடுவாளே தவிர தோலின் அருகே ஒட்டியிருப்பதை நாசூக்காக ஒதுக்கி விடுவாள். பழத்துக்கும் தோலுக்கும் அப்படி ஒரு அதிக வித்தியாசம் இல்லாத போதும்.

ஒருநாள் தான் பழம் சாப்பிடுவதைப் போல அவன் சாப்பிடுவதைப் பார்த் தாள். அவனைப் பார்த்த போது தலையில் ஒரு விதை ஒட்டிக் கொண்டி ருந்தது. “யார் உனக்கு இப்படி சாப்பிடச் சொல்லிக் கொடுத்தது? அதிலேயே முகத்தையும் கழுவிக் கொண்டு விடுவாயோ” என்று கத்தினாள். யீ பயந்து போனான். பழத்தைப் பிடித்துக் கொண்டிருந்த கை நடுங்கியது. ஆனால் கண்கள் மட்டும் எதிர்ப்பைக் காட்டின. உலகத்தில் குழந்தைகள் தான் பார்ப்பதைச் சரியாகச் செய்பவர்கள். அந்த அனுபவத்திலிருந்து அவள் உணர்ந்து கொண்டாள். தன் மகன் நல்ல பண்புகள் உள்ளவனாக இருக்க வேண்டும் என்றால் அவள் கவனமாக இருக்க வேண்டும். தானே ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் உணர்ந்தாள். இது மிகவும் கடினம் தான். விமானங்களைச் சிறிய துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவதைப் போலத்தான். ஆனால் உறுதியாக இருந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. இந்தத் தெளிவான அபிப்ராயம் இருந்ததால் அவள் வாழ்க்கை மிகவும் வெளிப்படையாகவும் சவாலாகவும் இருந்தது. முதல் முறையாக இன்று யீயை ஒரு பெரிய புத்தர் கோயிலுக்கு அழைத்துப் போகிறாள். அவன் புத்தரை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அங்குத் தரையைத் தொட்டு அவனை வணங்கச் சொல்ல மாட்டாள். அது மூட நம்பிக்கை என்று அவளுக்குத் தெரியும்.

ஒரு டிக்கெட் ஐந்து டாலர். இந்த நாட்களில் கோயில்கள் கூட வியாபார ஸ்தலங்களாகி விட்டன. லா சாங் அந்த டிக்கெட்டை அவளுக்குப் பரிசாகத் தந்திருந்தான். இதை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இன்று தான் கடைசி தினம். அவனுக்கு எல்லோருடனும் பரிச்சயம் உண்டு. “இதைப் பார்த்திருக்கிறாயா? பெரிய பத்திரிக்கை. சாதாரணமான ஜனங்களுக்குக் கிடைக்காது” என்று ஒரு பத்திரிக்கையைக் கண் முன்னால் போட்டுவிட்டுக் கேட்பான். எப்படி ஒரு சிறிய பத்திரிக்கையைக் காட்டி இப்படிச் சொல்கிறான் என்று அவள் நினைத்தாள். அவனிடமும் கேட்டாள். அவன் குழம்பினான். எல்லோரும் அப்படிச் சொல்வதாகச் சொன்னான். பத்திரிக்கையைப் பிரித்து ஒவ்வொரு தாளாக வைத்தால் சாதாரணப் பத்திரிகையை விடப் பெரிதாக இருக்கும் என்றான். அது சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது. டாவ் யிங்குக்கு அவனைப் பிடித்துப் போனது. அவனும் அவளை மரியாதைப் படுத்தும் வகையில் தன்னிடமுள்ள கோயில் டிக்கெட்டை அவளுக்குப் பரிசாகத் தந்தான். “ஒரு டிக்கெட்தானா?” என்று கேட்டாள். “கணவனை விட்டு விடு. மகனோடு போ 110 சென்டி மீட்டருக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது .உனக்குப் போக விருப்பம் இல்லையென்றால் கோயில் வாசலில் விற்று விடு. அதில் சில பழங்கள் வாங்கலாம்” என்றான் அவன் எப்போதும் இயல்பாகப் பேசுபவன்.

யீயோடு வெளியே போக முடிவு செய்து டாவ் விடுமுறை எடுத்தாள். நகரின் மையப் பகுதியில் அப்படிப் பசுமையான பகுதியைப் பார்ப்பது மிகவும் அபூர்வம் தான். அவர்கள் உள்ளே போவதற்கு முன்னாலேயே உற்சாகப் படுத்துவது போலே பசுமை காற்றில் பரவ எங்கோ மலைச் சாரல் அருவிக்கு வந்திருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது. யீ அம்மாவின் கையில் இருந்த டிக்கெட்டை பிடுங்கிக் கொண்டான். உதடுகள் இடையே வைத்துக் கொண்டு கோயில் கேட் இடையே பறப்பது போல ஓடினான். ஒரு சிறிய விலங்கு தாகத்தை தணித்துக் கொள்ள வேகமாக ஓடுவது போல இருந்தது.

திடீரென்று டாவ் யிங்குக்கு வருத்தமாக இருந்தது. கோயிலைப் பார்த்ததும் குழந்தைக்கு ஏற்பட்ட ஆசை அம்மாவை மறக்க வைத்து விட்டதோ என்று. உடனடியாக அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். மகிழ்ச்சியாக இருக்கத் தானே இன்று மகனை அழைத்து வந்திருக்கிறாள்.

நுழைவாயிலில் இருந்த காவலன் சிகப்பு பனியனும் கறுப்பு டிராயரும் அணிந்திருந்தான். அவன் மஞ்சள் ஆடையில் இருக்க வேண்டும் என்று ஏனோ அவளுக்குத் தோன்றியது. இந்தச் சீருடை ஒரு வெயிட்டர் போலக் காட்டியது.

யீக்கு என்ன செய்ய வேண்டும் என்று மிகச் சரியாகத் தெரிந்திருந்தது. கூட்டத்தில் அவன் போவது பெரிய அருவியில் ஒரு சொட்டுத் தண்ணீர் விழுவது போலத் தெரிந்தது. மரக்கிளையில் இருந்து ஒரு இலையை பறித்தபடி அந்த இளைஞன் அவன் வாயிலிருந்து டிக்கெட்டை எடுத்துக் கொண்டான். டாவ் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தாள். “டிக்கெட்” அந்த இளைஞன் அவள் வழியை மறித்தபடி கேட்டான். டாவ் தன் மகனை நோக்கிக் கையைக் காட்டினாள். அவன் அழகாக இருப்பதை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். “நான் உங்களிடம் டிக்கெட் கேட்கிறேன்” இளைஞன் சிறிதும் அசரவில்லை.

“குழந்தை உன்னிடம் டிக்கெட் கொடுக்கவில்லையா?” அவள் குரல் அமைதியாக இருந்தது. அந்த இளைஞன் மிகவும் சிறியவன் என்று நினைத்தாள். இன்று விடுமுறையாக இருப்பதால் அவள் நல்ல மனநிலையிலும் இருந்தாள்.

“அது அவனுடையது. எனக்கு உங்கள் டிக்கெட் வேண்டும்” அவன் அதையே மீண்டும் சொன்னான். அவர்கள் இரண்டு பேர். இரண்டு டிக்கெட் வேண்டும்.

“குழந்தைகள் விதிவிலக்கம் என்று நினைத்தேன்.” குழம்பியவளாகச் சொன்னாள்.

“அம்மா! வேகமாக வாருங்கள்” யீ உள்ளேயிருந்து கத்தினான். “உம்.வருகிறேன்” என்று குரல் கொடுத்தாள். கூட்டம் கூட ஆரம்பித்தது. விளக்கைச் சுற்றும் விட்டில்கள் போல. அவளுக்கு பயம் வந்தது. இந்த அமளி முடிய வேண்டும். குழந்தை அவளுக்காக காத்திருக்கிறான்.

“அவனுக்கு டிக்கெட் வேண்டாமென்று உங்களிடம் யார் சொன்னது?” தன்னை நிறையப் பேர் பார்க்கிறார்கள் என்று தெரிந்து அவன் தலை உயர்த்திப் பேசினான்.

“அது டிக்கெட்டின் பின்புறத்தில் உள்ளது”.

“என்ன உள்ளது?” அந்த இளைஞன் நிச்சயமாக பயிற்சி பெற்றவன் இல்லை.

“110 செ.மீக்கு குறைவான குழந்தைகள் டிக்கெட் வாங்க வேண்டிய தில்லை என்று அதில் உள்ளது” டாவ் நம்பிக்கையாக இருந்தாள். சிறிது முன்னே போய் இளைஞன் அருகில் இருந்த பெட்டியில் இருந்து ஒரு டிக்கெட்டை எடுத்து திருப்பி அங்குள்ளவர்களுக்குக் கேட்குமாறு படித்தாள்.

“அப்படியே நில்லுங்கள்” இளைஞன் கோபம் அடைந்தான். அவள் அந்த பெட்டியைத் தொட்டிருக்கக் கூடாது என்று உணர்ந்தாள். கையை வேகமாக எடுத்தாள்.

“ஒ..! உனக்கு சட்டதிட்டங்கள் நன்றாகத் தெரியும்.அப்படித்தானே?” இளைஞன் இப்போது மரியாதை இல்லாமல் ஏகவசனத்தில் பேசினான். அவன் குரலில் இருந்த கேலி அவளுக்குப் புரிந்தது.

“உன் மகன் 110 செ.மீக்கும் அதிக உயரமானவன்” உறுதியாகச் சொன்னான்.

“இல்லை. அவன்அந்த உயரம் இல்லை” அவள் இன்னமும் சிரித்தபடி இருந்தாள். அங்கிருந்தவர்கள் அந்தத் தாயைச் சந்தேகத்தோடு பார்த்தார்கள். “அவன் அந்தக் கோட்டைக் கடந்து விட்டான். நான் நன்றாகப் பார்த்தேன்” உறுதியாகச் சொல்லி சுவரில் இருந்த சிவப்புக் கோட்டை காட்டினான். பெரிய மழைக்குப் பிறகு மண்புழு சாலையைக் கடக்கும் போது இருப்பது போல அது சிறிய கோடாக இருந்தது.

“அம்மா! ஏன் இவ்வளவு நேரம்? உங்களைத் தொலைத்து விட்டேனோ என்று நினைத்தேன்” அன்பாகச் சொன்னபடி தாயை நோக்கி ஓடி வந்தான். அவனுடைய மிகப் பிரியமான பொம்மையைப் பார்க்க வந்தது போல.

“இப்போது சாட்சி இருக்கிறது. உண்மை தெரிந்து விடும்” இளைஞன் லேசாகக் கலங்கினான். அவன் தன் வேலையைச் செய்கிறான். அவனுக்கு தான் செய்தது சரி என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இந்தப் பெண் ரொம்பவும் நம்பிக்கை யாக இருக்கிறாளே.டாவ் அமைதியாக இருந்தாள். யீக்கு இது மாதிரியான வேடிக்கை பிடிக்கும். இது எப்படி போனாலும் அவனை உற்சாகப்படுத்தும்.

“இங்கே வா” என்று இளைஞன் அழைத்தான். கூட்டம் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றது.

அம்மாவைப் பார்த்தான். அவள் தலை அசைத்தாள். கூட்டம் கவனிக்க தன் கோர்ட்டைச் சரிசெய்தபடி, கனைத்தபடி அவன் இளைஞனை நோக்கிப் போனான். கூட்டம் அவனை ஒரு கதாநாயனைப் போல பார்க்க அவன் புழு அருகே போனான். பிறகு…அந்தப் புழு அவன் காது வரை வந்ததைக் கூட்டம் பார்த்தது.

“எப்படி இது சாத்தியமானது?”

யீங் அவளுக்கு அருகில் இருந்தான்.அவள் கை அவன் தலையில் பலமாக சத்தத்துடன் விழுந்தது. அவன் அம்மாவை வெறித்தான். அழவில்லை.வலியால் அதிர்ச்சியானான். அதுமாதிரி அவன் அடிக்கப் பட்டதில்லை. கூட்டம் மூச்சு விட்டது.

“குழந்தையைத் தலையில் அடித்தது கொஞ்சமும் சரியில்லை.எப்படி ஒரு தாய் அப்படி நடந்து கொள்கிறாள். இன்னொரு டிக்கெட் வாங்கினால் என்ன? நம் தவறுகளுக்கு குழந்தைகளை அடிப்பது அநாகரிகம்” ஒவ்வொரு வருக்கும் ஓர் அபிப்ராயம் இருந்தது.

அவளுக்குக் கோபம் வந்தது. யீயை அடிப்பது அவள் நோக்கமல்ல. அவன் தலையைச் சரி செய்யவே நினைத்தாள். அவன் வழுக்கையாக இருந்தால் கூட இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் புழுவை தாண்டி இருப்பான்.

“யீ ! விரல்களால் நிற்காதே” கடுமையாகச் சொன்னாள்.

“இல்லையம்மா” அழ ஆரம்பித்தான். உண்மைதான். அவன் அப்படி நிற்க வில்லை. அந்தப் புழு அவனுடைய இமைகளைத் தழுவவதாக இருந்தது. இளைஞன் சோம்பல் முறித்தான். அவன் கண்கள் கூர்மையானவை. டிக்கெட் வாங்காமல் ஏமாற்றியவர்களில் சிலரைக் கண்டுபிடித்திருக்கிறான்.

“போய் டிக்கெட் வாங்கி வா” கத்தினான். கௌரவம் புழுவால் தகர்க்கப்பட்டு விட்டது.

“என் மகன் 110 செ.மீ விடக் குறைந்தவன்.” தனியாக நின்ற போதும் டாவ் உறுதியாகச் சொன்னாள்.

“காசு கொடுக்காமல் தப்பிக்க விரும்புபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். இவர்கள் எல்லாம் உன்னையும்,என்னையும் நம்புவார்கள் என்று நினைக்கிறாயா? இது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல். பிளாட்டினத்தால் உருவாக்கப்பட்ட சர்வதேச அளவுகோல்.பாரீசில் இருக்கிறது. அது உனக்குத் தெரியுமா?”.

அவளுக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டு மீட்டர் என்பது சென்டிமீட்டர் அவள் ஆடைக்குத் தேவை என்பதுதான். சர்வதேச அளவுகோல் எங்கே இருக்கிறது என்பதெல்லாம் தெரியாது. அவள் ஆச்சர்யப்பட்டதெல்லாம் புத்தர் சில நிமிடங்களுக்குள் அவள் மகனை எப்படி சில சென்டி மீட்டர்கள் வளரச்செய்தார் என்றுதான்.

“இப்போதுதான் பஸ்சிலிருந்து வந்தோம். அவன் அவ்வளவு உயரமாக இல்லை”.

“சந்தேகம் வேண்டாம். அவன் பிறந்த போது உயரமாக இருந்திருக்க மாட்டான்”. இளைஞன் பரிகாசம் செய்தான். கூட்டத்தின் மத்தியில் நின்று கொண்டிருந்த டாவ் முகம் அவள் டிக்கெட்டைப் போல வெளுத்திருந்தது.

“அம்மா!என்ன ஆயிற்று?” அளவு பார்த்து விட்டு வந்த யீ அம்மாவின் உறைந்த கையைப் பற்றிக் கொண்டு கேட்டான்.

“ஒன்றுமில்லை! அம்மா உனக்கு டிக்கெட் வாங்க மறந்து விட்டேன்“அவள் பேச முடியாமல் சொன்னாள்.

“மறந்து விட்டீர்களா? சொல்வதற்கு அழகாகத் தான் இருக்கிறது.உங்களுக்கு பையன் இருக்கிறான் என்பதையும் நீங்கள் ஏன் மறக்கக் கூடாது?“ இளைஞன் கேட்டான். சில நிமிடங்களுக்கு முன்னால் அவளிடம் இருந்த அமைதியான நம்பிக்கையை அவன் மன்னிக்கத் தயாராயில்லை

“உனக்கு என்ன வேண்டும்?” அவள் கோபம் அதிகமானது. குழந்தையின் முன்னால் தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

“உனக்கு தைரியம் தான். நீ கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த டிக்கெட் உனக்கு எப்படிக் கிடைத்தது என்பது கடவுளுக்குத் தான் தெரியும். டிக்கெட் இலவசமாகக் கிடைத்தது போதாதென்று இன்னொரு ஆளையும் நீ உள்ளே நுழைக்கப் பார்க்கிறாய். உனக்கு வெட்கம் இல்லையா? நீ தப்பித்து விட முடியும் என்று நினைக்கிறாயா? போ ஒரு செல்லுபடியாகும் டிக்கெட்டை வாங்கி வா” சுவரில் சாய்ந்து கூட்டத்தைப் பார்த்தபடி ஏதோ உத்தரவு போல சொன்னான்.

டாவின் கைகள் நடுங்கின. அவள் என்ன செய்ய வேண்டும்? இன்னொரு விவாதம் செய்ய வேண்டுமா? அவள் சண்டைக்கு வெட்கப்படுபவள் இல்லை. ஆனால் தன் குழந்தை இதில் சாட்சியாவதை விரும்பவில்லை. அவனுக்காக அவள் விட்டுத் தரத்தான் வேண்டும்.

“அம்மா டிக்கெட் வாங்கி வருகிறேன். நீ இங்கேயே இரு. ஓடி விடாதே” சிரிக்க முயன்றாள். வெளியே வருவது என்பது அபூர்வம் தான். என்ன நடந்தாலும் தன் பொறுமையை இழக்கக் கூடாது. எல்லாவற்றையும் சரி செய்ய முடிவு செய்தாள்.

“அம்மா! உண்மையாகவே நீங்கள் டிக்கெட் வாங்க வில்லையா?” நம்பாமலும் வியப்பாகவும் யீ அவளைப் பார்த்துக் கேட்டான். அவன் பார்வை அவளுக்கு பயம் தந்தது. அவள் அந்த டிக்கெட்டை இன்று வாங்க முடியாது. அவளால் தன் நிலையை மகனிடம் விளக்கவும் முடியாது.

“வா போகலாம்” அவள் யீயை தள்ளிக் கொண்டு போனாள். நல்ல வேளை குழந்தை எலும்பு பலம் உள்ளவன். இல்லாவிட்டால் விழுந்திருப்பான்.

“பார்க்கில் போய் விளையாடலாம்” மகனை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினாள். ஆனால் அவன் அமைதியாகி விட்டான். திடீரென்று அவன் வளர்ந்து விட்டான்.

நடக்கும் போது ஐஸ்கீரிம் விற்பவன் அருகே நின்று “அம்மா! சிறிது பணம் கொடுங்கள்!” என்றான். அவள் கொடுத்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையின் பின்புறம் இருந்த முதிய பெண்மணியின் அருகே ஓடினான். “என் உயரத்தைப் பாருங்கள்.” அவன் சொன்ன பிறகு தான் டாவ் உடல் உயரம், எடை காட்டக்கூடிய அளவுகோலோடு முதியவள் உட்கார்ந்திருந்தைப் பார்த்தாள். அந்தப் பெண்மணி அளவுகோலை மெல்ல விரித்தாள்.

“ஒரு மீட்டர்,பதினொன்று” என்று யீங்கைப் பார்த்துச் சொன்னாள். ஏதாவது பிசாசு அவளுடன் சண்டை போடுகிறதா? அல்லது ஒவ்வொரு முறை அவள் பார்க்கும் போதும் யீ உயர்கிறானா என்று வியந்தாள்.

யீயின் கண்கள் கசிந்தன. அவன் அம்மாவைத் திரும்பிப் பார்க்காமல் ஓடினான் ஒரு கணம் பறவையாய் காற்றில் பறப்பது போல ஓடி விழுந்தான். அவனைத் தாங்கிப் பிடிக்க அவள் போவதற்குள் எழுந்து ஓடி விட்டான். டாவ் பின் தொடர்வதை நிறுத்தி விட்டாள். அவள் பின் தொடர்ந்தால் அவன் விழுந்து கொண்டே இருப்பான். மறையும் தன் மகனின் நிழலைப் பார்த்து மனம் உடைந்தது “யீ !அம்மாவைப் பார்க்க மாட்டாயா? ”

அவன் நீண்ட நேரம் ஓடி விட்டு நின்றான். அம்மாவை அவள் பார்க்காத போது பார்த்தும். அவள் பார்க்கும் போது கண்களை விலக்கிக் கொண்டும்.

டாவுக்கு அந்தச் சம்பவம் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது.அவள் அந்த முதிய பெண்மணியிடம் போனாள். “நீங்கள் வைத்திருக்கும் அளவுகோல்”.

“என் அளவுகோல் உங்களை மகிழ்ச்சிப் படுத்தத்தான். உங்கள் மகன் உயரமாக வளர்வதை நீங்கள் விரும்பவில்லையா? ஒவ்வொரு தாயும் தன் மகன் உயரமாவதை விரும்புவாள். ஆனால் அவன் வளரும் போது உங்களுக்கு வயதாகி விடும் என்பதை நீங்கள் மறக்கக் கூடாது. என்னுடைய அளவுகோல் பொய்யானது. அவ்வளவு துல்லியம் இல்லாதது.” அவள் மென்மையாக விளக்கினாள். ஆனால் டாவ் இன்னமும் குழப்பமாகவே இருந்தாள்.

“என்னுடைய அளவுகோல் பழையது. மிகச் சரியான அளவு உடையது இல்லை. உடல் எடையை அவர்கள் இருப்பதை விடக் குறைவாகக் காட்டும். உயரத்தையும் சிறிது அதிகமாகத் தான் காட்டும். அப்படி நான் அதை அமைத்திருக்கிறேன். இந்த நாட்களின் நாகரிகம் என்பது உயரமாகவும், மெலிதாக இருப்பதும் தான். என் அளவுகோல் பொருத்தமானது” அந்த முதியவள் அன்பானவளாக இருக்கலாம். ஆனால் சாமர்த்தியமானவளும் கூட.

“ஓ…அதுதான் காரணமா?” யீ அந்தப் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் வெகு தூரத்தில் இருந்தான். கேட்டிருந்தாலும் அதிலுள்ள நியாயம் அவனுக்குப் புரிந்திருக்குமா?

யீ இன்னமும் அம்மாவை சந்தேகக் கண்களோடு தான் பார்க்கிறான். வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவன் உயரத்தை அளந்து பார்க்க வரும்படி கெஞ்சினாள். “வர மாட்டேன்! உங்களைத் தவிர எல்லோரும் நான் உயரம் என்று ஒப்புக் கொள்கிறார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள். நீங்கள் அளந்தால் குட்டையாகத் தான் தெரிவேன். நான் உங்களை நம்ப மாட்டேன்” அவள் கையில் உள்ள டேப் விஷப் பாம்பு போலானது.

“உங்கள் கேக்குகள் எல்லாம் கரிந்து போயிருக்கின்றன.” ஒரு வாடிக்கையாளர் கத்தினார். அவை கரிந்திருந்தன. அவள் குற்றமாக உணர்ந்தாள். தன் வேலையில் எப்போதும் மிக கவனமாக இருப்பாள். ஆனால் இந்த நாட்களில் பல சமயங்களில் கவனம் சிதறுவதை உணர்ந்தாள்.

அவள் இதிலிருந்து விடுபட வேண்டும். யீ தூங்கிய பிறகு அவனை நீட்டிப் படுக்க வைத்து அளந்தாள். ஒரு மீட்டர் ஒன்பது சென்டி மீட்டர்.

கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுத முடிவு செய்தாள். “அவர்களுக்கு கடிதம் எழுதுவதால் என்ன ஆகும் என்று நினைக்கிறாய்” என்று கணவன் கேட்கிறான். அதனால் ஏதாவது நடக்குமா என்று அவளுக்குத் தெரியாது. தன் மகனின் கண்ணில் உறைந்திருக்கும் பனிக்கட்டியை உருக்க அவள் ஏதாவது செய்தாக வேண்டும்.

அவள் கடிதம் எழுதி விட்டாள். தன் தொழிற்சாலையில் பணிபுரியும் “ரைட்டர்” என்ற பட்டப்பெயர் உடைய அவரிடம் காண்பித்தாள். அவர் சிறுசிறு கட்டுரைகள் எழுதுபவர். படித்து விட்டு “இது ஓர் அலுவலகச் செய்தி போல உள்ளது. உற்சாகம் தரும் செய்தியாக இல்லை” என்றார். அவள் ஒப்புக் கொண்டாள்.

“வலிமையான,உரிமைகளை வெளிப்படுத்தும் தன்மையில் செய்திகள் இருந்தால் தான் அது பத்திரிக்கை ஆசிரியரைக் கவரும். பிரசுரம் செய்யப்படும். செய்தி மனதைத் தொடுவதாக இருக்க வேண்டும். வருந்தும் சிப்பாய்கள் தான் எப்போதும் வெற்றி பெறுவார்கள் என்ற பழமொழியைக் கேள்விப் பட்டதில்லையா?“ என்றார். அவள் தலை ஆட்டினாள். கடிதம் இப்படித் தொடங்கட்டும்.” புத்தரின் சக்தி நிச்சயமாக எல்லையற்றது. கோவில் வாசலைத் தொட்டவுடன் ஒரு ஐந்து வயது சிறுவன் இரண்டு சென்டி மீட்டர் உயரமாகி விட்டான். அதே நேரத்தில் புத்தரின் சக்தி எல்லை உடையதும் தான். சிறுவன் வீட்டிற்குத் திரும்பிய பிறகு இரண்டு சென்டி மீட்டர் குறைந்து பழையபடி ஆகி விட்டான். “இது சரியாக இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த முறையில் யோசித்துப் பாருங்கள்“ என்றார்.

அவள் அந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருக்க விரும்பினாள். ஆனால் மறந்து போனது. சில மாற்றங்களைச் செய்து அனுப்பினாள்.

“ரைட்டர்“ மதிய சாப்பாட்டு நேரத்தில் வருவார். பிரேமுக்குள் வைக்கப்பட்ட படம் போல டாவ் முகம் சிறிய ஜன்னலில் தெரியும். ரசீதுகளைச் சேகரித்தபடி இருப்பாள். “ஒரு நிமிடம்“ என்று சொல்லி விட்டுப் போவாள். கேக்குகள் எரிந்திருக்கும் என்று அவருக்குத் தோன்றும். அதிகம் எரியாமல் இருந்த கேக்குகளை எடுத்து வந்தபடி அவருக்கு நன்றி சொல்வாள்.

“இது உங்களுக்கு. சர்க்கரையும் வெண்ணையும் அதிகமாக..“ இதுதான் ஒரு கேக் தயாரிப்பவர் தன் நண்பருக்கு நன்றி சொல்லும் வகையில் தரக் கூடிய மிகப் பெரிய பரிசு.

நீண்ட காத்திருப்புகள்…

டாவ் தினமும் செய்தித் தாள்களைப் படிப்பாள். சிறுசெய்தி, விளம்பரம் ,படம் என்று. ரேடியோவும் கேட்பாள். நல்ல குரலில் அறிவிப்பாளர் அவள் கடிதத்தைப் படிப்பார் என்ற கற்பனையில். பிறகு தபால் அலுவலகம் போவாள் தனது கடிதத்திற்கு மன்னிப்பு கேட்டு ஏதாவது பதில் வந்திருக்கிறதா என்று பார்க்க. நூறு விதங்களில் அவள் கற்பனை, ஆனால் உண்மை நிலை.

எல்லா நாட்களும் ஒன்று போலவே கழிந்தன. யீ கொஞ்சம் பழைய நிலைக்குத் திரும்பியது போலத் தெரிந்தான். ஆனால் அவன் அதை மறக்கவில்லை என்று டாவ் நினைத்தாள்.

கடைசியாக ஒரு நாளில் “தோழர் டாவின் வீடு எங்கே இருக்கிறது?“ என்று யாரோ கேட்டு வந்தனர்.

“வாருங்கள்.எனக்குத் தெரியும்“ யீ உற்சாகமாகச் சொல்லியபடி சீருடை அணிந்த இரண்டு முதியவர்களை அழைத்து வந்தான். “அம்மா! யாரோ வந்திருக்கின்றனர்“ என்றான்.

அவள் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாள். சோப் நுரை எங்கும்.

“நாங்கள் கோவில் நிர்வாகத்தில் இருந்து வந்திருக்கிறோம்.உள்ளுர் செய்தித்தாள் உங்கள் கடிதத்தை எங்களுக்கு அனுப்பி இருந்தது.உண்மையை விசாரித்து அறிய வந்திருக்கிறோம்“.

டாவுக்கு கொஞ்சம் பதட்டமாகவும் சோர்வாகவும் இருந்தது. முதலாவதாக வீடு அன்று அவ்வளவு சுத்தமாக இல்லை. சுத்தம் செய்ய நேரம் இல்லை. அவள் சோம்பேறி என்று அவர்கள் நினைத்தால் அவள் மீது நம்பிக்கை வராதே.

“யீ நீ விளையாடப் போ“ இதுவரையான டாவின் கற்பனைகளில் யீ உண்மையை தெரிந்து கொள்ள தன் அறையில் இருப்பான். இன்று அந்த நேரம் வந்து விட அவள் அவன் அங்கிருப்பதை அசௌகரியமாக நினைத்தாள். என்ன நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இவர்கள் அந்த இளைஞனை வேலைக்கு அமர்த்தியவர்கள். என்ன விதமான நியாயத்தை இவர்களால் தர முடியும்?

“நாங்கள் அந்த இளைஞனை விசாரித்தோம். அவன் தான் சரியாக நடந்து கொண்டதாகச் சொல்கிறான். நாங்கள் சிறுவனின் உயரத்தைப் பார்க்கப் போகிறோம். அவனை வெளியே அனுப்ப வேண்டாம்“ என்று இருவரில் இளையவராகத் தெரிந்தவர் சொன்னார்.

யீ சுவரின் அருகே பவ்யமாய் நின்றான். அந்த வெள்ளைச்சுவர் மிக வெண்மையானதாக யீயின் ஓவியத்தை நிரப்புவது போல இருந்தது. சுவரில் அவன் சாய்ந்து நின்ற போது பழைய பயமான நினைவுகள் அவனுக்குள் வந்தன.

அவர்கள் இருவரும் மிகக் கவனமாக இருப்பவர்களாகத் தெரிந்தனர். யீ யின் தலைக்கு மேல் சுவரில் ஒரு கோடு வரைந்தனர். உலோகத்தால் ஆன டேப்பை தரையில் போட்டுக் கீழிலிருந்து அளவு பார்த்தனர். அந்த டேப் சூரிய ஒளியில் மின்னியது.

டாவ் அமைதியாக இருந்தாள்.

“என்ன அளவு?“

“ஒரு மீட்டர் பத்து சென்டி மீட்டர். அவ்வளவுதான்“ இளையவர் சொன்னார்.

“இது அவ்வளவுதான் என்கிற விஷயம் இல்லை. ஒரு மாதம் ,ஒன்பதுநாள் தாமதமாக நீங்கள் வந்திருக்கிறீர்கள் ஒரு மாதத்திற்கு முன்னால் அவன் இவ்வளவு உயரமாக இல்லை“.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் இந்த பேச்சை மறுக்க முடியாது.

ஐந்து டாலர் பில்லை அவர்கள் தந்தனர். அது ஒரு கவரில் இருந்தது. அவர்கள் தயாராகத்தான் வந்திருக்கின்றனர். கோவிலை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு அவர்கள் அந்தப் புழுவின் உயரத்தை அளந்து பார்த்து அது சரியான அளவில் வரையப்படவில்லை என்பதை உணர்ந்திருக்கின்றனர்.

“நீங்களும் உங்கள் மகனும் அன்று கோவிலுக்குள் போக முடியவில்லை அந்த சூழ்நிலையைச் சரியாக்க இது ஒரு சிறுகொடை“ இருவரில் மூத்தவர் மென்மையாகப் பேசினார்.

அவள் அசையாமல் இருந்தாள். அந்த நாளின் மகிழ்ச்சி திரும்பப் பெற முடியாதது.

“உங்களுக்குப் பணம் தேவையில்லை என்றால் இந்த இரு டிக்கெட்டு களையும் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்களும்,உங்கள் மகனும் எப்போது வேண்டுமானாலும் கோயிலுக்கு வரலாம்.“ இளைய மனிதர் சொன்னார்.

இது கொஞ்சம் ஆசையைத் தூண்டும் சந்தர்ப்பம் தான். ஆனால் டாவ் தலையாட்டி மறுத்தாள். அவளுக்கும் மகனுக்கும் அந்த இடம் இனி எப்போதும் சோகமான நினைவுகளைத் தான் தரும்.

“எதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்?“ இரண்டு பேரும் கேட்டனர்.

அவளும் இந்தக் கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொண்டாள். இயற்கையாகவே அவள் மென்மையானவள். அந்த இளைஞன் இன்று மன்னிப்பு கேட்க வந்திருந்தால் அவள் அவனை கண்டிப்பாக அவமதித்து இருக்க மாட்டாள்.

அவளுக்கு என்ன வேண்டும்?

அவள் யீயை அந்த அதிகாரிகளின் முன்பு தள்ளிக் கொண்டு போனாள்.

“தாத்தா சொல்லு“ என்றாள் யீயிடம்.

“தாத்தா“ அவன் இனிமையாகச் சொன்னான்.

“ஐயா! தயவு செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். டிக்கெட்டையும். அந்த இளைஞனை எதற்காகவும் தண்டிக்காதீர்கள். அவன் தன் வேலையைத் தான் செய்தான்“

அந்த அதிகாரிகள் குழம்பினர்.

டாவ் மகனை அணைத்துக் கொண்டாள். “ஐயா! அந்த நாளில் என்ன நடந்தது என்று என் மகனுக்கு நீங்கள் சொல்ல வேண்டும். அவன் அம்மா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை தயவு செய்து அவனுக்குச் சொல்லுங்கள்.“

பி ஷுமின்

பி ஷுமின் சீன மொழி பெண் படைப்பாளி. பதினாறு வயதில் இராணுவத்தில் சேர்ந்து மங்கோலியாவில் பணிபுரிந்தவர். ஒரு மருத்துவராக நாட்டு நலப்பணி செய்ததோடு மட்டும் இன்றி இடைப்பட்ட காலத்தில் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சீன இலக்கியத்தில் தலை சிறந்த எழுத்தாளராக மதிப்பிடப்படுபவர். அவர் படைப்புகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. சீனாவிலும், தைவானிலும் பல இலக்கிய விருதுகள் பெற்றவர். தன் அடையாளத்தை உணர்த்தும் ஒரு பக்குவப்பட்ட பெண்ணின் மன வெளிப்பாடு இச்சிறுகதை.இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் கரோலின் சுவா.

தி.இரா.மீனா

பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியை. கலை இலக்கிய இதழ்கள் ,பொதுஜன இதழ்கள் ஆகியவற்றில் சில கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் ஆகியவை வெளி வந்திருக்கின்றன.

எழுதியவர் : மீள் (20-Jan-16, 11:56 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 168

மேலே