அவன் கவிஞன்

எழுதுகையில்
அவன் ஞானி !
தொடக்கூடாத உச்சம் ஏதும்
இல்லை அவனுக்கு !
ஈரம் உலராத
பேரன்புடன் துளைக்கும்
கூரிய ஆயுதம் !
எதிர்மறையாக
சொல்லாத
வெறுப்பற்ற ஒரு
நேர் மறை இயக்கம்
ஒரு பார்வை இன்றி
பலமாக
வேரூன்றியவன் !
ஒரு கோணத்தில்
காலாதீதமானவன்
முடிவற்ற அற்புத
தேடல் ......
அவனது பிரக்ஞை
நுண்ணுணர்வு பொதிந்த
படைப்பம்சம் !
ஆழ்மனம் வாசனை
துளைத்து தோண்டப்பட்ட
ஆழ்துளைக் கிணறு
இருண்ட கானகத்துள்
தன்னைத் தொலைத்தவன்
வழியற்ற வழியில்
திரிபவன் !
திக்கோ அடையாளமோ
தெரியாதவன்
வழிகாட்டும் வாய்ப்பை
இழந்தவன்
மேன்மைப் பயத்திற்குள்
மூழ்கியவன்
பீதியற்ற பிரமை
பிடித்தவன் !
பயத்தின் பேயை
விரட்டுபவன்
புதிய கவிதையாய்
புனைய
வாழத் தொடங்கியவன்
அவன் ஒரு ஒளி எழல்
இமை விழிப்பு !
காலத்தின் கட்டாயம்
எதிர்கால உத்வேகம்
இறந்த கால பிரமை
நிகழ்கால விம்பம்
வெற்றுச் சொற்கள்
கொண்ட மெய்மையின்
தரிசனம் !
அர்த்தமின்மையில் தப்பி
ஓடிய மனிதனை
இளைப்பாற
போதிக்கும் புத்தன்
அகந்தை ஒழிக்கும்
கருணையின் விளை நிலம்
துயர் களையும் ஒரு
பெரிய புன்னகை !
அவன் ஒரு
சுயமான சுவை
என்றும் பிரகாசமானவன்
கற்பனையால்
நிறைத்துக் கொண்டவன்
அவனிடம்
எதற்கும் இடமில்லை
துயர் நுழைவதே இல்லை !
அவனுக்கு
குறையேதும் இல்லை
எல்லாம் ஏற்கனவே
நிறைந்து கிடக்கிறது
எழுத்துக்களால்
வரையும் ஓவியன்
எண்ணங்களால்
வடிக்கும் காவியன் !
- தமிழ் உதயா-