தர்மத்தின் எல்லை எது
சுதந்திரமாய் விவசாயம் செய்வ தற்கும்,
-சூழ்ச்சியிலா வியாபாரம் முனைவ தற்கும்
இதந்தரு,நல் வாழ்க்கைமுறை இயற்கை யோடும்
-இணைந்தொன்றி அமைதியுற வாழ்வ தற்கும்
பதந்தராத நடைமுறைகள் விடுத லையா?
-பழிபாவம் கண்மறைத்து பதவி மோகச்
சுதம்வளரும் காடாக நாட்டை யாக்கிச்
-சுகம்வளரக் காண்போமா? சூது தேர்வீர்!
---[பதம்தராத=பக்குவம் கொடுக்காத]
---[சுதம்=நெருஞ்சி முள்]
கைவிளக்குச் சுடுமானால் அணைக்க வேண்டும்!
-கால்வைக்க அழுக்கென்றால் விலக்க வேண்டும்!
செய்வினைகள் தருமத்தை சீர ழித்தால்
-சிக்கிரமே அதை,உதறிச் செல்ல வேண்டும்!
மைவிழியாள் சூதாட்டப் பொருளாய் ஆக
-மனதிற்குள் தான்,தருமன் போல்,ந டித்துப்
பொய்விளக்கி மக்கள்னலம் போலக் காட்டிப்
-புரட்டுபவர் ஆட்சி,கைப் பிடுங்க வேண்டும்!