நீர் மேலாண்மையைத் தேடி நூல் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப திருமலை நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

நீர் மேலாண்மையைத் தேடி !
நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழர் ஆய்வு மையம், 1/825-4, அய்யப்பன் நகர், கிருஷ்ணா நகர்,
மதுரை – 625 014. விலை : ரூ. 50.

*****

நூலின் அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பதிப்பித்த தமிழர் ஆய்வு மையத்திற்கு பாராட்டுக்கள். அருளானந்தர் கல்லூரி முன்னை பேராசிரியர் முனைவர் இ. தேவசகாயம் அவர்களின் அணிந்துரை நன்று. தமிழ் ஆய்வு மையத்தின் தலைவர் சி.சே. இராசன் அவர்களின் பதிப்புரை நன்று.


நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. சிறப்பான தலைப்பை வைத்த நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர்

ப. திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்.


நீர் மேலாண்மையை நாம் கடைபிடிக்காததன் காரணமாகவே சென்னையில் பெருமழையில் பெரும் இழப்புகள் நேர்ந்தன. இனியாவது நீர் மேலாண்மையை நிர்வகிக்க முன்வர வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கும் நல்ல நூல்.


நீர் மேலாண்மையில் 550 தமிழ் மன்னர்கள் என்ற தலைப்பில் கி.பி. 739, கி.பி. 1221, கி.பி. 1251, கி.பி. 1283, கி.பி. 1286 வருடங்களில் மன்னர்கள் உருவாக்கிய ஏரி, மதகு, கால்வாய் பற்றி மிக நுட்பமாக குறிப்பிட்டுள்ளார்.


நூலாசிரியர் வழக்கறிஞர் என்ற போதும் தமிழ் இலக்கியங்களும் நன்கு படித்து உள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி உள்ளார்.


நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே !


என்றும் புலவர் குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் பகர்கிறார். இதன் பொருள், “நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ் பெற்று விளங்குவர்” என்பதாகும்.


இன்றைக்கு ஆள்வோர் புதிதாக ஏரி, குளம், கண்மாய் வெட்டாவிட்டாலும் இருக்கின்ற நீர் நிலைகளை அழியாமல் காத்தாலே பேருதவியாக இருக்கும்.



நீர்ச் சிக்கனம் குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். இன்றைய தேவை, நவீன கழிவறைகளில் நீர் விரையமாகி வருகின்றது. இதுகுறித்தும் சிந்திக்க வைத்தது நூல்.


நீர் சேமிப்பு குறித்தும் எழுதி உள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது உடனடியாக சட்டம் இயற்றி கட்டாயமாக்கி எல்லா கட்டிடங்களிலும் ஏற்படுத்திட வேண்டும். நூல் படிக்கப் படிக்க நீர் குறித்த பல சிந்தனைகள் மனதில் ஓட ஆரம்பித்தது. இது நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்களின் வெற்றி.

நீர் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நூல். அன்றே குளங்களில் மீன் பிடிக்கும் உரிமையை ஆண்டுதோறும் ஏலத்தில் விட்டது. வந்த பணத்தில் பாதியை புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையின் குளத்தை ஆழப்படுத்துவதற்கு செலவிட்ட வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.


நீர் நிலை பழுது பார்த்தல் என்ற பராமரிப்புப் பணி நடந்ததை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில் வரும் பாடலோடு விளக்கி உள்ளார்.


தமிழ்ப்பேராசிரியர் போல, நூலாசிரியர் நீர் மேலாண்மை தொடர்பான சங்கப்பாடல்கள் பல மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். பழங்காலத்தில் தமிழ் மன்னர்கள் எவ்வாறு திட்டமிட்டு நீர் மேலாண்மையை நிர்வகித்து வந்தார்கள் என்பதை அறிய பெருமையாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகளும் நினைவிற்கு வந்தன.


"1991இல் வளைகுடா போர் நடந்த போது அணைகள் மீது, அமெரிக்கர் குண்டு வீசி, குடிக்கக் கூட நீர் கிடைக்காமல் செய்தது. இராக் போரின் போதும் பாக்தாதின் நீர் அளிப்பு திட்டங்கள் தாம் முதலில் தகர்க்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு நேட்டோ நாடுகள் மீது குண்டு வீசி யூக்கோஸ்லோக்கியாவின் நீர் மாசுபடுத்தப்பட்டது."


மக்களை அழிக்க நாட்டை அழிக்க முதலில் திட்டமிட்டு நீர் நிலைகளை அழித்த கொடூரங்களையும் நூலில் பட்டியலிட்டு உள்ளார். அன்றைய மனிதன் நீர் நிலைகள் காத்தான். ஆனால், நவீன மனிதனோ, நீர் நிலைகளை அழிக்கின்றான். எண்ணிப்பார்க்க வேதனையாக இருந்தது.


நீர்நிலைகளின் பெயர்கள் படித்த போதே பிரமிப்பாக இருந்தது. அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, உறைகிணறு, இலஞ்சி, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை, கட்டுங்கிணக் கிணறு, மறுகால், கண்மாய், வலயம், கால், கால்வாய், குட்டம், குண்டம், குண்டு, குமிழி, குமிழி ஊற்று, குளம், கூவம், கூவல், வாளி, கேணி, சிறை, சுனை, சேங்கை ஒவ்வொன்றுக்கும் விளக்கமும் எழுதி உள்ளார்.


வேறு எந்த மொழியிலும் நீர் தொடர்பாக இவ்வளவு சொற்கள் இருக்கவே இருக்காது என்று உறுதி கூறலாம். தமிழில் உள்ள ஒவ்வொரு சொற்களும் காரணப் பெயராகவே இருக்கும். பொருளின்றி ஒரு சொல்லும் இருக்காது.


நீர் மேலாண்மை யார் பொறுப்பு? அரசின் கடமைகள் என்ன? என்பதை பட்டியலிட்டு உள்ளார். ஆள்வோர் பின்பற்றினால் நாடு நலம் பெறும்.


இந்த நூலில் இவர் குறிப்பிட்டுள்ளவைகளை நடைமுறைப்படுத்தினால் சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளம் பாதிப்பு இனிமேல் வராமல் தடுக்கலாம்.


ஏரிகள், குளங்கள் அழிக்கப்படும் போது மக்கள் பொங்கி எழ வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைத்து உள்ளார்.


எத்தனையோ ஏரிகளும், குளங்களும் காணாமல் போய் விட்டன. இப்போது இருக்கின்ற நீர் நிலைகளையாவது தூர் வாரி பழுது நீக்கி பராமரித்து காத்து வர வேண்டிய கடமை, அரசுக்கும், மக்களுக்கும் உள்ளது என்பதை நூலில் நன்கு கட்டி உள்ளார்.


நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் எந்த ஒரு கட்டுரையையும் மேம்போக்காக எழுத மாட்டார். கட்டுரைக்கு வலு சேர்க்கும் நூல்களைப் படித்து ஆய்வு செய்து புள்ளிவிபரங்கள் சேகரித்து நன்மை, தீமை ஆராய்ந்து எழுதுவார்.


இந்த நூலும் ஆய்வின் வெளிப்பாடே. இந்த நூலிற்கு உதவிய நூல்கள் என்று 18 நூல்களையும் பட்டியலிட்டு உள்ளார். சமுதாயத்திற்க்கு பயன்படும் விதத்தில் தனது எழுத்தை பயன்படுத்தி வரும் செம்மையான எழுத்தாளர் ப. திருமலை. வாழ்க பல்லாண்டு.

தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று குரல் தந்த மனிதஉரிமை மாண்பாளர் ,நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது நூல் ஆசிரியருக்கு வழங்கிய செய்தி கண்டு மகிழ்ந்தேன் .பொருத்தமான மனிதருக்கு பொருத்தமான விருது வழங்கி உள்ளனர். பாராட்டுக்கள். தொடர்ந்து மண் பயனுற மக்கள் பயனுற எழுதுங்கள் இன்னும் உயர்ந்த விருதுகள் உங்களை வந்து அடையும் .

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (29-Jan-16, 9:01 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 705

சிறந்த கட்டுரைகள்

மேலே