பிதற்றுவதும் ஏனோ - கஸல் கவிதை
தெள்ளமுதாம் தாய்மொழியைப் புறக்கணித்தல் ஏனோ ?
அயல்நாட்டு மொழிமீது பற்றுவைத்தல் ஏனோ ?
தமிழ்பேசும் நபர்கண்டால் ஏளனமாய்ப் பார்த்தபடி
எள்ளிநகை யாடுவதில் ஆனந்தம் ஏனோ ?
தாய்மொழியை உள்மனதில் தாலாட்டி உறங்கவைத்து
அறியார்போல் உலகினிலே உலவுதலும் ஏனோ ?
நுனிநாக்கில் ஆங்கிலமும் திமிரான வீண்பேச்சும்
அலட்சியமாய்ப் பெரியோரை மதிக்காததும் ஏனோ ?
இல்லத்தில் தாயிருக்க அவள்மனதை நோகவிட்டு
கற்சிலையைக் கும்பிட்டுக் கண்ஒற்றல் ஏனோ ?
பெற்றெடுத்த அன்னையையும் தாய்மொழியும் மறந்துவிட்டு
நல்லோர்போல் அரிதாரம் பூசிடுதல் ஏனோ ?
இதயத்தில் தமிழினிக்க இறுமாப்பாய் உமிழ்ந்துவிட்டு
அரைகுறையாய் அயல்மொழியில் பிதற்றுவதும் ஏனோ ??