புறநானூறு பாடல் 5 – சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை

இரும்பொறைக் குடியில் பிறந்த இச் சேரவேந்தனின் இயற்பெயர் ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் ஆகும். இவன் தன் அரசியலை கொங்குநாட்டுக் கருவூர் வரையில் நிலவச் செய்து அந்நகரில் அரசுகட்டிலேறி முடிசூடிக்கொண்ட சிறப்பினால் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை என அழைக்கப்படுகிறான்.

பல எருமைகட்கிடையே பரவி நின்று மேயும் பசுக்கூட்டம் போல, கருங்கற் பாறைகட்கிடையே பரவி யானைக் கூட்டம் காணப்படுகிறதென்பதை ’எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய’ என்றும், பகைவர்கள் எளிதில் நெருங்க முடியாத இயற்கையாகவே காடுகளாலும், யானைக் கூட்டத்தாலும் சூழப்பட்ட காவலும், செல்வமும் உடையது இந்நாடு என்கிறார் புலவர் நரிவெரூஉத்தலையார்.

சிறந்த மெய்ப்பொலிவு உடைய இந்த மன்னனின் தோற்றச்சிறப்பு இவனைக் கண்டார்க்கும் நன்மை செய்யும் சிறப்புடையது. நரிவெரூஉத்தலையார் என்ற சான்றோர்க்கு ஏற்பட்ட உடல்நோய் இம்மன்னனைக் கண்டு இவனது காட்சியால் நோய் நீங்கி நலமடைந்தார் எனக் கூறுவர். பண்டைய நல்லுடம்பு பெற்ற இச்சான்றோர் இம்மன்னனைப் பாடியது இப்பாட்டு.

இப்புலவர், கோப்பெருஞ் சேரல் இரும்பொறையைக் கண்டு அவனது தோற்றப் பொலிவை வியக்கிறார். செல்வக் குறைவாலும், சிற்றினச் சேர்க்கையாலும், மக்களிடம் அன்பும் அருளும் இல்லையென்றாலும் இத்தோற்றப் பொலிவு குறையுமென நினைந்து,

‘பெரும, நீ கானக நாடனாதலால் உனக்கு செல்வக் குறைவில்லை; ஆதலால் நீ, நரகத்திற்கு வழிவகுக்கும் நல்லறிவில்லாத தாழ்ந்தோருடன் சேராது, மக்களிடம் அன்பும் அருளும் கொண்டு நாட்டினை, குழந்தை வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பாயாக’ என அறிவுறுத்துகிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பிற்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல் 4

அருளு மன்பு நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்
குழவி கொள்பவரி னோம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. 8

(அளிது, இரக்கம், கருணை – Ruth)

பொருளுரை:

எருமை போன்ற வடிவுடைய கருங்கற்பாறைகளால் சூழப்பட்டு, அவற்றிற்கு இடையிலுள்ள இடங்களில் பசுமாட்டுக் கூட்டம் போல மேய்ந்து கொண்டிருக்கும் யானைகளைக் கொண்ட வலிமையுடைய காடுகளை அரணாக உள்ள நாட்டினையுடைய அரசன் நீதானே பெருமானே!

நீ இங்ஙனம் பகைவரால் அணுகப்படாத இயற்கையாகவே பெருஞ்செல்வத்தை யுடையவனாதலால் உனக்கு ஒரு யோசனை சொல்வேன், அதனைக் கேட்பாயாக!

அருளையும், அன்பையும் நீக்கி பாவச்செயல்கள் செய்து நீங்காத நரகத்தை தமக்கு இடமாக்கிக் கொள்ளும் நல்லறிவில்லாத தாழ்ந்தோருடன் சேராது, நீ காத்து வரும் தேசத்தை குழந்தையை வளர்ப்பாரைப் போலக் கவனமாய்ப் பாதுகாப்பாயாக! அத்தகைய கருணை மிக்க செயல் உனக்கு பெறுதற்கரிய அருமையுடைத்தது.

இப்பாடல் பாடாண்திணை ஆகும்.

பாடு + ஆண் + திணை = பாடாண்திணை.

பாடுதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண்திணை எனப்படும்.

துறை: தேசத்தைக் காப்பது குழந்தையைப் பாதுகாப்பது போன்றது என்பதால் இது செவியறிவுறூஉ துறையென்றும், அருளையும், அன்பையும் நீக்கி பாவச்செயல்கள் செய்து நீங்காத நரகத்தை தமக்கு இடமாக்கிக் கொள்ளும் நல்லறிவில்லாத தாழ்ந்தோருடன் சேராது நீ இருக்க வேண்டும் என்பதால் இது பொருண்மொழிக் காஞ்சி துறையென்றும் கொள்ளலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Feb-16, 9:32 pm)
பார்வை : 1358

மேலே