காட்சிப் பிழைகளோடு ரசனை உலா- 3- சந்தோஷ்

”பிறந்த குழந்தையாய் கதற விடுகிறது....
உன் நினைவுகளுக்குள் மூழ்கிவிட்ட என் உணர்ச்சிகள்.”

புதிதாக பிறந்த குழந்தை புதிய உலகைக் கண்டு கதறுவது எதற்காக.? இவ்வுலகில் வந்துவிட்டோமென்ற சந்தோஷக் கதறலா..? கருவில் சுகமாய் இருந்த சுகத்தை இழந்துவிட்டோமென்ற துக்கக் கதறலா? விடை காண முடியாத கேள்விகள் தான் பிறப்பும் இறப்பும்.அது போலத்தான் காதல் நினைவுகளும் ஏன் ? எதற்கு.? எனும் கேள்விகளுக்கு உட்படுத்த முடியாதவை. பிறந்த குழந்தையின் கதறலாய் தன் உணர்வுகள் காதலனின் நினைவில் மூழ்கிவிட்டதாக வர்ணிக்கும் தோழர் கிருத்திகா ரங்கநாதன்.

"நீ தவறி பார்த்த கணங்களின்
காட்சி பிழை நான்.... " என எழுதி.. தானே காட்சிப் பிழையானதாக குறிப்பிடுவது புதியதொரு ரசனை.

நிறைய சிந்தித்து இருக்கிறார். குறைவாக எழுதி இருக்கிறார்.

--

சந்தங்கள் கொஞ்சும் சொற்கள் கவிதையில் பந்தம் கொள்ளும் போது.. வாசிக்கும் வாசகன் அக்கவிதையை கொண்டாடத்தான் செய்வான். கொண்டாட வைத்த கஜல் கவிதை கொண்டு வந்து கொடுத்தவர் தோழர் உமை.

மெளங்கள் இசையாக்கப்படுமா.? ஆகும் காதலிலும் கஜலிலும் கவிஞர் உமையாலும் ..

”மன வாசல் நீங்காத புது மழையின் தோரணம்
என் மௌனங்கள் இசையாக உன் மொழிகள் காரணம் ”


கவிதையை கோயிலாக்கியவர்.. காதல் சோகத்தை பாயில் உறங்க வைத்துவிட்ட சிந்தனை காதலுணர்வுடையர்களின் இருதயத்தை கிள்ளியிருக்கும்.

”எனைத் தேடி நடை பயிலும் கவிதைகளின் கோயில்
உனைச் சேராமல் வீழ்ந்தேனோ காதல் எனும் பாயில்”

இசை வடிவத்தில் அசத்திய கவிஞர். புது கவிதை வடிவத்திலும் காட்சிப் பிழையை பிழையில்லாமல் கொடுத்திருக்கிறார்.

“வீணை மீட்டத் தெரிய
பத்து மயிலிறகு
போதும் என்றாய்
விளங்காமல்
இன்னும் விழித்துக்
கொண்டிருக்கிறேன்” பத்து மயிலிறகு எதுவென என் பத்து விரல்கள் கொண்டு தட்டச்சு செய்யும் போது கூட யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன் கவிஞரே. அகராதியில் ஏறாத அர்த்தங்கள். காதலில் காணக் கிடைக்கும் சொர்க்கங்கள்.

--

காதல் மயக்கத்திலிருக்கும் போது, எவ்வித வலியும் இன்பமே.
தோழர் முரளி அளித்த காட்சிப் பிழையில் இதை காட்டியிருக்கிறார்.

“முட்கள் கீறியபோதும் வலியிலுமே மயங்கிய
-----பூக்கள் புன்னகைத்தே மெலிதாய்

பொய்யெனும் போர்வைக்குள்ளே மறைந்தே சில
-----நிஜங்களும் உறங்கினதே இனிதாய் ” முட்களால் கீறப்பட்ட பூக்கள் புன்னகைக்கும். அது போலவே காதலிலும் சிறுசிறு மனக்காயங்கள் என்றாலும் அது ரணம் தராது என்கிறாரோ கவிஞர். பொய்யின் போர்வைக்குள் நிஜங்கள் இனிதாக உறங்கும். காதலிலும் அப்படித்தான் சில ஏமாற்றங்களை உறங்கவைத்திட வேண்டுமோ..? நல்லதொரு தத்துவம்.


“உள்ளிருக்கும் உந்துதலில் ஒரு கேள்வி
-----காத்திருத்தல் சுகமோ சோகமோ...?” சந்தேகமே இல்லை. சுகமான சோகந்தான் கவிஞரே.


--


”உனது சதைகளின்மீது
வதைபடும் விலைமதிப்பை
விட்டெறிந்து விழிதேடி வா ..! ” அடடே. சரி .யாரை அழைக்கிறது இந்த வரி..

”காமநாய்களின் களியாட்டத்தில்
பகடையாக இருந்தது போதுமடி ...

கணவனை இழந்தவளே ...
கண்ணாளனாய் நான் வருகிறேன் ...
உன் கண்ணீரின் ஓரமாய்
நான் வாழ்கிறேன் ..” கற்பை போல யாருக்கும் எவருக்குமாய் காதலை பொதுவில் வைப்போம் என்கிற புரட்சிகர மாற்றுச் சிந்தனையை தரமுயன்றிருக்கிறார் தோழர் திருமூர்த்தி.

இருக்கட்டும். கணவனை இழந்தவள் மீது காதல் கரிசனம் காட்டுவது யாரென நோக்கினால்..

“*ஓரினச்சேர்க்கை* ஒன்றும் பிழையல்ல ...!
உனது குங்குமமும்
எனது குறியும்
ஊருக்கு காட்சிப்பிழைகளாக இருப்பதிலும்
தவறில்லை ...! ” ஒரு தேர்ந்த திரைப்படத்தில் உச்சக்கட்ட காட்சியில் இருக்கையின் நுனியில் தள்ளும் உணர்வைக் கொடுத்தது இந்த வரி. சபாஷ்.. தோழர் திருமூர்த்தி.

விமர்சனத்திற்குரியது அல்ல இப்படைப்பு..!

---




”கயத்தாறென்றதும் கட்டபொம்மனுக்கு முன். உன் பார்வை ஞாபகம் எனைத்தாக்கும்..!
பார்வையாலேயே எப்படி தூக்கிலிடுகிறாய்...தூக்கு மரத்திற்கருகில் காத்திருந்தபடி நான்..! ”
காதலியின் பார்வையில் வீழ்ந்ததை குறிப்பிடும் தோழர் வேளாங்கண்ணி, கயத்தாற்றில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட வரலாற்றையும் குறிப்பிடுவது நிகழ்வுச் சுவை.

”உன்னில் காதல் உள்ளதென.மேய்ந்து கொண்டிருந்தேன் ஓர் ஆட்டுக்குட்டியாய்...!
அப்புல்வெளி நீவரைந்த ஓவியமென... அறியும்முன் நான் மரித்து விட்டிருந்தேன்.!!! ” காட்சிப்பிழை என்பதற்கு பொருத்தமான வரியிது. காதல் ஏமாற்றம். இதை.. காதல் புல்லை தேடிய ஆட்டுக்குட்டி... புல்லும் ஓர் ஒவியமென ஏமாந்தது போல உவமையாக்கியது அருமை


வாழ்த்துக்கள் கவிஞர் வேளாங்கண்ணி! . கவிதை பல அழகு சொற்களோடு இலக்கிய நாட்டியம்..!


---

மழைப் பெய்த பிறகு எழும் மண் வாசனை பெரும் ரசனை நுகர்ச்சி. ஆனால் மண் வாசனையை தோழர் கோபி சேகுவேரா எங்கு காண்கிறாரென வாசியுங்கள்

“அடிக்கடி நீ
மாராப்பு சரி செய்யும்போது
மனசெல்லாம் மண்வாசனை...”

கல்லூரி மாணவர்களுக்கு வார இறுதிநாட்களென்றால் குதூகலம். திங்கள் கிழமை எனில் ஒருவித சலிர்ப்பான வெறுப்பு உணர்வு.இந்த மாயை உணர்வுகளை கவிஞர் இப்படி கையாளுகிறார்

“வார இறுதி நாட்களாய்
நான் உன்னை கண்டேன்...
திங்கட்கிழமையாய்
உங்கப்பா முறைக்கிறார்...” முறைத்த திங்களிடம் முறையிடுங்கள் கவிஞரே. சம்மதமெனில் வாரமெல்லாம்.. வாழ்வெல்லாம் மண்வாசனைதான்.

உடல் துளைத்து... உயிர் துறந்தேன்...
உன் விழி தோட்டாக்களில்...
என் காதல் பொலிவியாவை
காப்பாற்றும் சேகுவேராவாய்.//. தோழர் சேகுவேராவை உவமையாக்கிய விதம் மிகவும் ரசனைக்குரியது.

வாழ்த்துக்கள் தோழர் கோபி.

--

கவிதைகளில் பெரும்பாலும் அறியப்படாத பல சொற்களை அறிமுகப்படுத்துவதும் ஓர் இலக்கிய சேவையாகவே கருதலாம். பிரபலமடையாத சொற்களை கவிதையினூடே வாசகர்கள் அறியத்தூண்டுவது ஒரு கவிஞரின் பொறுப்பு என்பதாக காட்சிப் பிழை அளித்திருக்கிறார் தோழர் கார்த்திக்.


”மணல்போல் கொட்டிக்கிடக்குது மலரும் நினைவுகள் மனதிலே !
மனம்போல் உள்-குளியல்போடு பச்சைப்பஞ்சுருட்டான் போலே ! ”// காதல் நினைவுகளில் இன்ப உலாவும் உணர்வு. பச்சைப் பஞ்சுருட்டான் என்பது மணலில் குளிக்கும் ஒரு பறவை.

”இருக்கின்றாயே என்காதல் மழைக்காட்டின் இருவாச்சி நீயாக !
இருந்தும் கண்ணுக்கு அகப்படவில்லையே அக்காக் குயிலாக ! ”// காதலி என்றாலும் நெருங்க முடியாத உணர்வை வெளிப்படுத்தும் இவ்வரியில் இருவாச்சி மழைக்காட்டு பறவை, அக்காக் குயில் என்பது மனித விழிகளுக்கு புலப்படாத பறவை.


இதுபோல பல சொற்களை அறிமுகப்படுத்திய தோழர் கார்த்திகின் காட்சிப்பிழை. தகவல் அறை.

---


”மழை கொண்டு முளைக்கும் விதையல்ல காதல் ...
மனம் கொண்டு முளைக்கும் (க)விதையே காதல் ”.// என காதல் தத்துவத்தை விதைத்தவர் தோழர் மகாலட்சுமி ஸ்ரீமதி.


”என் கனவென்பது
உன் விழியில்
பிறக்கும் குழந்தை” // என்ற வரியில் காதலன் விழியை கருவறையாக்கி, கனவை குழந்தையாக்கி மிளர்கிறார் ஒரு கவிஞராக.

--


காதல் பிரியத்தையும், பிரிவின் சோகத்தையும் காட்சிப்பிழையில் கஜலாக்க முயன்றிருக்கிறார் தோழர் கயல் விழி. தேர்ந்த சிந்தனையிருந்தும் கவியாக்கத்தில் ஏதோ சிறு அவசரமிருப்பது போலிருந்தது. எனினும்


ஜன்னலோர நிலவடி நீயெனக்கு
அன்று
பெளர்ணமியாய் வந்தாய்...
இன்று ஏனடி
அமாவாசையானாய்.? // வேடிக்கை நிலா.. கானல் நீராய் போனது போல காதல் ஆனதே என ஏங்கும் வரியிலும்

”அழையா விருந்தாளியாய் உன் நினைவும்
அடுக்களைக்குள் பூனையாய் என் காதலும் அடம்பிடிக்கிறது
வெளியேற மனமின்றி. ” காதலை விட்டுவிடக்கூடாது எனும் பிடிவாத வரியிலும்

கவிஞருக்கான பாதையில் மின்னும் தோழர் கயல்விழியின் காட்சிப்பிழை.கடும் முயற்சி இல்லை.


--

“வாசலில் புள்ளி வைத்துப்போட்டேன் ஒரு சிக்கு கோலம்
உன்னிலிருந்து தள்ளி வைத்த‌தாலே உடைந்தது வாழ்க்கைப் பாலம் ”

இப்படியான வரிகளில் துள்ளலான சந்தக்கவிதையை ரசிக்க வைத்தவர் தோழர் புனிதா வேளாங்கண்ணி.

காதலிணை வஞ்சகம் செய்து ரணம் கொடுத்து பிரிந்தாலும்... ஊருக்கும் உலகத்திற்கும் அவர் வஞ்சக செயலை காட்டிக்கொடுக்காமலிருப்பதும் காதலில் ஒரு நியதிதான். இந்த நியதியை தோழர் புனிதா புனிதப்படுத்தும் வரியிது.

”அன்பை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன் மனதில் குத்தினாய் முள்ளாய்
உன்மேல் பழி வேண்டாமென்று என்னெஞ்சை ஆக்கினேன் கல்லாய் ”

” இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்”.எனும் வள்ளுவனின் வாக்கு நிறைவேற்றும் புனிதம் காதல் துரோகத்திலும் கூட..


கவிஞர் புனிதா வேளாங்கண்ணியின் காட்சிப் பிழை. கவித்துவமாய் அருமை. .

--

தோழர்களே..!
காட்சிப் பிழை திருவிழா உலா இன்னும் கொஞ்ச தூரம் தான்.
அடுத்த பாகத்தோடு நிறைவடையும்.


--
- இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (4-Feb-16, 7:34 pm)
பார்வை : 303

மேலே