என்னவள்
அன்றைக்கு ஆபிஸ்ல வேலை அதிகமா இருந்தது. வேலைய முடிச்சுட்டு வேளச்சேரிக்கு 10.30 மணி கடைசி ட்ரெய்ன் புடிச்சேன், 10.40 க்கு ட்ரெய்ன் வேளச்சேரிக்கு வந்தது. 2 நிமிஷத்துல எல்லாக் கூட்டமும் கலைஞ்சு போய்ருச்சு. 5 நிமிஷத்துல வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன்ல, ஒரு தெருநாய், 2 ரோந்து போலீஸ் தான் இருந்தாங்க.
நான் எப்போதுமே, 6 மணிக்கு வேலை முடிஞ்சதும், 7 மணிக்கு ரூமுக்கு போய், சமைப்பேன். இவ்ளோ தாமதமா போனது இல்லை. இன்னும் 20 நிமிஷமாவது நடக்கனும், ரூம்க்கு போக.
மேம்பாலத்த க்ராஸ் பண்ணி ராம் நகருக்குள்ள நடந்தேன், தூரத்துல ஒரு தெரு விளக்கு, அதுக்குக் கீழ நாய் படுத்துருக்கு. அவ்ளோ தான். ஆள் நடமாட்டமே இல்ல.
அப்போ எனக்குள்ள பல கேள்வி வந்தது. ஏன் 11 மணிக்குல எவனும் தெருல இல்ல. இட்லி கடை, டீ கடை னு எந்தக் கடையும் இ்ல்ல, மெடிக்கல் கடைய கூட பூட்டிட்டான். ஏன் நம்ம மதுரை மாதிரி இந்த ஊரு இல்லனு என்ன நானே கேட்டுட்டு இ்ருந்தேன். இதுனால தான் இந்த ஏரியால அடிக்கடி வழிப்பறி நடக்குது போல என யூகித்தேன்.
என்னோட செருப்பு சத்தமும், பேக் ஜிப் சத்தமும் தூங்கிட்டு இருந்த நாயைக் குரைக்க வச்சுருச்சு. நாய் சத்ததவிட என்னோட ஹாட்பீட் சத்தம்தான் என் காதுல கேட்டது. எதுவுமே தெரியாதமாதி்ரி பயந்துகிட்டே நடந்தேன்.
தனிமை, இருட்டு ரெண்டும் சேர்ந்தாலே யாரோ என்ன பின் தொடர்ந்து வர்ற மாதிரியே எனக்குப் பிரம்மை வரும். இதுல வழிப்பறி பயம் வேற. மூச்சு காற்று பலமாக வீச, மாவு அரைக்கும் இயந்திரம் போல் இதயம் துடிக்க, லேசாக வியர்வை எட்டிப்பார்த்தது. எப்படியோ தைரியத்த வரவழைச்சுகிட்டு, ரூம் கிட்ட வந்துட்டேன்.
"ஹலோ" என்று யாரோ தூரத்துல சொல்ற சத்தம் கேட்டுச்சு. திரும்பி பார்க்காம நடந்துட்டே இருந்தேன்.
"எக்ஸ்க்யூஸ் மி"
திரும்பி பாத்தேன். ஒரு பொண்ணு, கைல ஒரு பேக், தோள்ல ஒரு பேக்கோட நின்னுட்டு இருந்தா. அந்த இருட்டுல அவ முகம் சரியா தெரியல. என்னனு கேக்குறதுக்கு முன்னாடி அவளே, "இங்க லிட்டில் எல்லி ப்ளே ஷ்கூல் எங்க இருக்கு" னு கேட்டா.
"இப்டியே நேரா போனா, சின்னதா ஒரு பிள்ளையார் கோவில் வரும். அத தான்டி வர்ற ரைட் எடுத்து, அதுக்கப்பறம் செகண்டு லெஃவ்ட்ல ரெண்டாவது பிள்டிங் ஷ்கூல். பத்து நிமிஷம் ஆகும்."
"ப்ளீஸ், அந்த ஷ்கூல் வரைக்கும் என்னோட வர முடியுமா?"
"ஓகே. அங்க எங்க போகனும். "
"அங்க என்னோட அத்த வீடு இருக்கு, அங்க தான் போரேன்."
ஏன், இந்த நேரத்துல வர்றீங்க. உங்கள கூப்ட யாருமே வரலயானு கேக்கனும்னு தோணுச்சு, ஆனா அவளா சொல்றாளானு பாப்போம்னு கேக்காமலே இருந்தேன்.
அவளுக்கு பயம் வந்தத என்னால உணரமுடிந்தது. அவ என் பக்கத்துல வந்தது, எனக்கு கொஞ்சம் தைரியமா இருந்தது. எனக்கு துணைக்கு வந்த மாதிரி உணர்ந்தேன். ஏன்னா, நானும் பயந்து இருந்தேன். அப்போ எங்க முன்னாடி வந்து நின்னது கடவுள்(சித்தர்).
"லொள்னு" ஒரு சத்தம், அவ பயத்துல என் கைல இடிச்சு, என் கையோட ஒட்டியே நடந்து வந்தா, அந்த நேரம், நான் தேவலோகத்துக்கே போய்டேன். என்னோட பயத்த பரவசமா மாத்துனவ எனக்கு தேவதையா தெரிஞ்சா. அதுக்கு காரணமா இருந்த நாய், எனக்கு கடவுளா தெரிஞ்சது.
மனசே இல்ல சொல்றதுக்கு, இருந்தாலும் சொன்னேன், "பயப்படாதீங்க".
"தாங்ஸ்ங்க" என்றாள்.
நான் திரும்பி கடவுள பாத்து தாங்க்ஸ் சொன்னேன். அதுக்கப்பறம், நாங்க எதுமே பேசல, நான் அந்த தேவலோகத்தயே நெனச்சுட்டு இ்ருந்தேன்.
கொஞ்ச நேரத்துல அவ சொன்ன ஷ்கூல் வந்துருச்சு, திரும்பி பாத்தேன், அவள காணோம். என்ன ஆச்சுனு தெரியல. அந்த நிமிஷம் எனக்கு எதுமே தோணல. அப்டியே நின்னுட்டு இருந்தேன்.
ஒரு வேள, பி்ரம்மையா இருக்குமா? எங்க போனா? திரும்பி அங்க இங்கனு சுத்தி பாத்தேன். யாருமே இல்ல. அவ பேர் தெரியாது, ஏன் அவ முகம் கூட நான் நல்லா பாக்கல. கொழப்பத்துலயே நின்னுட்டு இருந்தேன்.
"உன்னை நானறிவேன், என்னையன்றி யாரறிவார். கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்." என்று என் அலைபேசி அலறி என்னை சுயநினைவிற்க்கு கொண்டுவந்தது.
"எங்கடா இருக்க?"
"பக்கத்துல வந்துட்டேன்டா, இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவேன்."
"வேகமா வா, சேந்து சாப்டுவோம்"
எதுமே சொல்லாம அலைபேசிய துண்டித்து, கடைசியா ஒரு தடவ சுத்தி பாத்தேன். அப்பறம் எங்கயுமே பாக்காம வேகமா நடந்துட்டே இருந்தேன். மனசுக்குள்ள அவள பாக்கனும் பாக்கனும்னு ஆசையா இருந்துச்சு. எனக்கு ஞாபகம் இருக்குறது அவளோட குரல் மட்டும் தான்.
ரூம்ல வந்து நடந்ததை சொன்னேன், தேவலோகத்த தவிர.
"மச்சி, அவ கால பாத்தியா? மோகினியா இருக்கும்டா" என்றான் ஒருத்தன்.
"அவ பாக்க எப்டி இருந்தா? அழகா இருந்தாளா?" என்றான் இன்னொருத்தன்.
"உண்மையாவே உன்கிட்ட ஒரு பொண்ணு வந்து பேசுசா? இப்டியே சுத்தி சுத்தி கேள்வியா கேட்டுட்டு இருந்தாங்க.
அடுத்த நாள் காலைல எப்பயும் போல ஆபிஸ் தயாரானேன். அடுத்த தடவ அவள பாக்கும் போது, என்ன ஆச்சு, சொல்லாம எங்க போனனு கேக்கனும்னு தோனுச்சு.
வேளச்சேரில ட்ரெய்ன்காக நின்னுட்டு இ்ருந்தேன்."எக்ஸ்க்யூஸ் மி" அதே குரல், திரும்பி பாத்தேன். "அண்ணா, அனாதை ஆசிரமம்காக கேக்குறோம் உங்களால முடிஞ்சத குடுங்கன்னா" என்று ஒரு சின்ன பொண்ணு டொனேஷன் பாக்ஸ குலுக்குனா. ஒரு நிமிடம் அவளோ என ஏமாந்து போனேன். பின் இருபது ரூபாயை குடுத்து, அவள் கண்ணத்தை கில்லினேன். அவள் நினைப்பாவே இ்ருக்குறனால பி்ரம்மையா, இல்ல அவளே பி்ரம்மையானு தெரியல.
அன்னைக்கு வேலைய சீக்கிரமா முடிச்சுட்டு, 5.30 மணி ட்ரெய்ன்ல ஏறினேன். யாரோ என்ன கவனிக்கிற மாதிரியே எனக்கு ஒரு பிரம்மை. பெருங்குடி ஸ்டேஷன் தாண்டுனதும், ஒரு பொண்ணு என்கிட்ட வந்து, " சாரிங்க, நேத்து சொல்லாம போய்ட்டேன்".
அப்பதான், நான் உன்ன நல்லா பாத்தேன் நிஷா. எவ்ளோ அழகு தெரியுமா நீ. அந்த நிமிஷம் என்ன சுத்தி ஒரே வெளிச்சம். கண்ணுக்கு எட்டுன தூரம் வர என்ன சுத்தி எதுமே இல்ல, யாருமே இல்ல. ஒரே வெளிச்சம். எனக்கு முன்னாடி நீ நிக்கிற. நான் உன்ன ரசிச்சுகிட்டு இருக்கேன். நீ அடுத்து பேசுன எதுமே எனக்கு கேக்கல. நான் உன்னயே பாத்துட்டு இருந்தேன். ட்ரெய்ன் வேளச்சேரி வந்ததும், நீ...
டிங். டிங்க்.
காலிங் பெல் சத்தம் கேட்டு, நவின் கதவை திறந்தான். "வாங்க குமார் அங்கிள்" என்றான்.
"உங்க அப்பா எங்கடா?"
"மேல அம்மாவோட பேசிட்டு இருக்காரு"
"அம்மாவோடயா?" என ஆச்சர்யத்தில் குமார் கேட்டான்.
"டேய் நாகராஜ், என்ன பண்ற?"
"சும்மா என் நிஷாவோட"
"இன்னும், எத்தன நாளைக்கு டா நீ இப்படி கஷ்டப்படுவ, அவ தான் பத்து வருஷமா படுத்த படுக்கையா கோமா ல இருக்கா, டாக்டரும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு கைய விரிச்சுட்டாரு, அப்பறம்... " என்று அவன் பேசிகொண்டிருக்கும் போது,
"கஷ்டமா, எனக்கு கல்யாணம் ஆகி இன்னையோட 20 வருஷமாச்சு. கல்யாண நாள்ல எங்க முதல் சந்திப்ப இவகிட்ட சொல்லிட்டு இருந்தேன்"என்று கூறும் போது என் கண் கலங்கியது. என்னவளை பார்த்து, "இந்த பத்து வருஷம் நீ எனக்கு கஷ்டமா நிஷா. யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு நிஷா, ஒரு நாள், நீ என் மார்பில் உன் முகம் புதைத்திருப்ப, நான் இதே கதைய சொல்லி, இப்போது போல் எப்பொழுதும் உன்ன எல்லை கடந்து காதலிப்பேன்".
----- சாணக்யசித்தார்த்தன்