மனிதாபிமானம்

இல்லையிது இங்கெவர்க்கும் இல்லையென நாமும்
==இகழ்வதற்கு உரியதல்ல மனிதாபி மானம்
இல்லாத போதினிலும் இருப்பதனைக் கொண்டெதுவும்
==இயன்றளவு செய்வதற்கு உரியதன்றோ காணீர்.
அல்லலுற்று கிடப்பவர்க்கு அடிமனதில் தோன்றுகின்ற
==அன்பினூடே கைகொடுத்து ஆதரித்து பார்த்து
எல்லையில்லா ஆனந்தம் கொள்வதிலே வாழ்வதுதான்
==இரக்கமுள்ள மானிடரின் மனிதாபி மானம்.

ஆபத்து வேளைகளில் யாரென்று பாராமல்
==அவசரமாய் உதவுவதில் தோன்றுகின்ற கருணை
லாபத்தைப் பாராமல் லாவகமாய்க் கைகொள்ள
==லயிக்கின்ற மனந்தனிலே எழுகின்ற தாபம்
பாவத்தைச் சேர்க்காமல் பதைபதைத்து செயல்பட்டு
==பகுத்தறிவால் உயர்குணத்தின் பண்பொழுக விட்டு
சாபத்தை வாங்காத சாதனைகள் செய்மனிதன்
==சுயநலத்தைக் கைகழுவும் சூட்சுமமே மனிதம்.

பணத்தாலே ஒருவருக்கு பகட்டாக செய்யகின்ற
==பரிகார மல்லமனி தாபிமானம் நல்ல
குணத்தாலே பிறஉயிர்மேல் கொள்கின்ற பரிவாலே .
==குறைவிலா திருப்தியடை வதற்காக அன்பு
மணக்கின்ற மனதுக்குள் மலராக பூக்கின்ற
==மகத்தானத் தொண்டாகும். எதிபார்ப்பு விட்டு .
கணக்கற்று வளர்த்தெடுத்து காட்டிவிட முனைந்துன்னில்
==கரிசனமாய் நாட்டிந்த மனிதப்பூங் கன்று!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Feb-16, 2:55 am)
பார்வை : 425

மேலே