தமிழக தென்றலும் காமராசர் சுவாசமும் --முஹம்மத் ஸர்பான்

காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு, 1976 இல் இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது.

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.

ராசாசியின் தலைமையில் 1930 மார்ச்சு மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார். 1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாகப் பெற்றார்.

ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. (1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.)அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.

காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்

மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியை விடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (2. அக்டோபர் 1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார். லால் பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு. கே. பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரின் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964 இல் சவகர்லால் நேரு இறந்தவுடன் இந்தியாவின் தலைமை அமைச்சராக லால் பகதூர் சாசுதிரியை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார். 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

காமராசரைப் பற்றிய கருத்துக்கள்
---------------------------------------------------
“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு மகாபுருசர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி

"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராசர் சென்னை முதல் அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வாரென நான் நம்புகிறேன். -நேரு

“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" -பெரியார்.

“காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா காந்தி

"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை நான் பிள்ளையாகப் பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்." -சிதம்பரம் சுப்ரமண்யம்

"காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- ம. கோ. இராமச்சந்திரன்

"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."- கருணாநிதி

"காமராசர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், சுதந்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது." - மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தா

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (13-Feb-16, 9:52 am)
பார்வை : 370

மேலே