ஆதலால் மன்னித்துவிடலாம் ம்ம்
ஆதலால் மன்னித்துவிடலாம் ம்ம்
===============================
உறக்கத்தின்போது
இரு கால்களால் தலையணையை
அணைப்பது என்பது
உன் சம்மணங்காலிருப்புக்குள்
தலைவைத்துக் கிடப்பதின் இதம் என்பதைத்தவிர
வேறு என்ன சொல்லிவிடப்போகிறேன்
செங்காத்தின் அலைநெருடி
வெற்றிலைக்கொடி அசைந்ததும்
காந்தள் மலரின் நெடிவிரைந்து
அந்திசாயல் நுழைந்ததும்
சொல்லாமல் மூடிவைத்த காதலால்
எத்தனை சிவக்கிறேன் பார்
மெல்லிடை உடைய
பூக்களைத்தானே தழுவினாய் என்றேன்
நாணம் களைந்த கனவில்
என் நிழலோடு எப்படி புணர்ந்திட்டாய் ம்ம்
இப்போதெல்லாம்
உளறி உளறி பரலாடும்
எல்லா சோழிகளையும் திருடி
உன் இடுப்பிற்குப்பின்னால் மறைத்துவிட்டு
நீ செய்யும் கேளிக்கை அறிவேன்
விரலோடு விரல் துலக்கி
தோல்வியுறும் அயர்விற்குப்பின்
கலைந்துவிழும் கற்றைக்கூந்தலோடு
உன் மார்பில் என் முகம் சாயத்தானே திட்டமிட்டாய்
சாதித்துக்கொள் ம்ம்
கிறக்கத்தினால் உதடு வெடித்திடுகையில்
அதோ மரக்கிளையிலாடும்
மாம்பழத்தைப்பாரேன் என்றுச்சொல்லி
மிரளும் விலோதனங்களை திசைத்திருப்பிவிட்டு
இருபதின் அரும்புமுறிந்து
வயதெட்டிய இளமீசையின் ஓரிரு இழைகளாலும்
மாருதம் எத்தனை முயன்றும்
கலையாத கிராப்பு கேசத்தாலும்
மாம்பழக்கடி நிகழ்த்திவிடுகிறாயே
பிடிக்கவில்லைதான், ஆனால் என்ன
செல்லமாய் பெயர்வைத்து
என் பம்பரவிழிகளால்
ஆவலோடு இழுத்து விளையாடும்
டெட்டிபியர் அத்தானின் கம்பிளிப்பூச்சி மீசைதானே
ஆதலால் மன்னித்துவிடலாம் ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"