எரிதணலில் வேகும் மனம்_குமரேசன் கிருஷ்ணன்
நீ..நான்..நிலவு...வானம்
புரியவில்லை உறவுகளெனக்கு
என் இருள் வானில்
நீயேன் நிலவாய் தேய்ந்து
பிறையாய் வளர்கிறாய்...
குளித்து விட்டு வெயில் காய்கிறாய்
காய்ந்துகிடந்த நான் குளிக்கிறேன்
சிறு மழையில் நீயேன் சிக்குண்டாய்
பெருமழை பொழிகிறது என்னுள்..
உன் பாவாடைப் பூக்களுடன்
ரோஜாவுக்கு ஏனிந்த மல்யுத்தம்
நீ மல்லிகைப்பூ சூடியதால்
ரோஜாக்கள் கூட்டமாய்த்
தற்கொலைக்கு
முயல்வதாய் ஒரு சேதி...
நீ அழும்போது தானும் அழுது
நீ சிரிக்கையில் சிக்கிச்சிதறும்
நானும் உன் நிழல்தான்...
காதல்குளத்தில் வலைவிரித்து
உன் விழிமீன் தூண்டிலில்
சிக்குண்ட சிறு புழு நான்...
என் காதல் தோட்டத்து நிலவு நீ
உன் முகம் கண்டவுடன் மலரும்
சூரியகாந்தி நான்...
முந்திவந்த எனைமுந்தி
இரகசியமாய் உனை ரசிக்க
என்ன துணிச்சலிந்த
முந்திரிக்கொட்டைக்கு...
நீ ஊஞ்சலாடிய சுவடுகள் நாடியே
விழத்துவங்கியிருக்கக்கூடும்
ஆலம் விழுதுகள்...
என் மனக்கண்ணாடியில்
நீயேன் காதல் கல்லெரிந்தாய்
சிதறிக்கிடக்கும் சி(செ)ல்களெல்லாம்
உன் பிம்பங்கள்...
நீ மழைச்சரிவினை ரசித்துத்திரும்பிய
ஓர் பின்னிரவு மோதலில்தான்
பற்றியெரிந்தனவாம் மூங்கில்காடுகள்...
குட்டியாடுகளை மடிக்கிடத்தி
துயில்கிறாய்
உன் பருவத்தோட்டத்தை மேயும்
ஆடுகளாகிறேன் ..நான்..
பாம்புகள் கண்டு பயம்கொள்ள
நானொன்றும் பரீட்சித்தல்ல
உன் நீள் கூந்தல் வாசத்திலே
தினம் நான் துயில்கிறேன்..
குளிர்சாதனக் கூட்டிற்குள் பயணிக்கும்
இரயில் பயணி நான்..
என்கூட்டிற்குள் கொஞ்சம் வாயேன்
இளஞ்சூடு பரவட்டும் என்னுள்..
நீ மத்தாப்புக் கொளுத்துகிறாய்
பற்றி எரிகிறது காதல் தீ என்னுள்
புஸ்வானமாகிவிட்ட
என் கனவுகளை அறியாமலே...
குழம்புக்கு தயாராவது அறியாமலே
குதிக்கிறேன் உன் மனச்சட்டியில்
நெருப்பு மூட்டு வழக்கம்போல்
எரிதணலில் வேகுவது என்மனம்தானே...
காதல் நதியில் தத்தளிக்கிறேன்
மீன்கொத்தியாய் கொத்தி பறக்கிறாய்
விழுங்கிவிடு ..இறந்தாவது நான்
உறைகிறேன் உன்னுள்...!
---------------------------------------------------------------------
( இனிய காதலர் தின வாழ்த்துக்கள்)
குமரேசன் கிருஷ்ணன்