தூரிகை மேகங்கள்

பிஞ்சுத் தொழிலாளர்கள் எங்களது நாட்டினில்,
என்றென்றும் குறையாத நிரந்தரச்சோகங்கள் !
கஞ்சிக்குபோராடும் நெஞ்சத்தில் நாள்தோறும்,
கண்கவர் வண்ணத்தில் சதிராடும் கோலங்கள் !
கன்னத்தில் காய்ந்துபோய் அழுக்காகி தடுமாறும்,
வன்முறை இல்லாமல் வடுவாகும் பாகங்கள் !
தேம்புவோர் தேகத்தை பாங்குடன் சீராட்ட,
பாசமாய் இல்லையே அன்புடை பாலங்கள் !
தலையேறும் பாரங்கள் கால்களை இடறிட,
தள்ளாடி வழிபோக எதனாலே சாபங்கள் !
கண்தூங்கும் நேரத்தில் கைகளில் கீறல்கள்,
கற்பனை எரித்திடும் தீராத பாவங்கள் !
மழலையின் உருவங்கள் உண்மையில் யாதெனில்,
எளிதிலே மறையாத தெய்வத்தின் ரூபங்கள் !
மாற்றுகள் இல்லையே அவர்களை காத்திட,
மாநிலம் எங்குமே அறிவிலா காகங்கள் !
மனிதராய் வாழ்கிற மனங்களில் என்றுமே,
இப்படிச்செயல்களால் தீராத கோபங்கள் !
எங்களின் குழந்தைகள் பிஞ்சிலே போரிட,
எவர்வந்து தீர்ப்பது அவர்களின் தாகங்கள் !
சிறுவர்கள் மட்டுமே நாளையின் தோழர்கள்,
அவர்களே மனிதத்தின் எதிர்கால தீபங்கள் !
கண்களில் மழைவர எப்போதும் ஏங்கிடும்,
அவர்களே எங்களது தூரிகள் மேகங்கள் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (15-Feb-16, 10:25 pm)
பார்வை : 45

மேலே