கரையை தேடும் அலைகள்

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
அதோ
முத்தமிட ஆசை கொண்டு
எத்தனை பிரவாகத்தோடு ஆரவாரித்து
உன்னைத் தொடும் வானத்தில்
மெல்லிய குளிர் உஷ்ணத்தில்
தடவலின் ஈரத் தொடுகையோடு
வெளியே வருகிறான்
அந்த ஆதவன் ......
நீயோ விதவிதமாய் பூத்து
வானவில்லை வளைத்து
அத்துடன் நிறங்களையும் உறிஞ்சி
பெரும் பரபரப்புக்கு ஆளாகி
அடிமையாய்
விவேகமாகப் புலம்பி
பேரிரைச்சலோடு ஓடி வருகிறாய்
முளைத்து நிற்கும்
இரும்புப் பாறைகளை
மோதி உரசி உச்சி முகர்ந்த
சிலுசிலுப்பில் தவழ்ந்து
உஷ்ணம் தகிக்கிறாய்
அது போதாதா. .....
மீண்டும் ஏன் இந்த உயிர்த்தெழும்
உயிரோடு ஊடலும் ஊழலும். .!
எத்தனை சமுத்திரத்தில் நீ
விழுவதற்காகவே பூவலை
விரித்து ஆடுகிறது இந்த பூமி
ஆனாலும் நீ
இந்த கரை மண்ணை
தொட்டு இசைத்துக் கொண்டே
இருப்பதால் தான் அங்கிருந்து
ஆனந்தித்துக் கொண்டிருக்கிறது. ...
உனக்கு உயிரோட்டமான சிந்தனை !
எத்தனை ஆழத்தில் இருந்தாலும்
கரையின் கருணைத் தழுவலில் தான்
முழுமையடைந்ததாக எண்ணுறாய்
என் கண்ணீர் பட்டோ
நீ உப்புக் கரிக்கிறாய்
என் மூச்சுக்காற்றினை உள்ளெடுத்தா
பேரிரைச்சலோடு மூசுறாய்
என் கால் தடங்களை
கௌவிக் கொண்டோடிய
உன் புன்முறுவல்கள்
என் தாய்த்தேசத்தில் காத்திருக்கும்
என் எச்சங்களுக்கு
பாதை காட்டும் எனில் வா ........
என் பாதங்களை
இப்போதே எடுத்துச் செல் !
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (16-Feb-16, 6:34 am)
பார்வை : 191

மேலே