வகுப்பறை

• • • • • • • • • •
உயிர் அணுவை
அன்னையின் கருவறை சுமந்தது
மடி தவழ்ந்த பாதங்களை
அடி நகரப் பயிற்றுவித்தது
அன்னை தந்தை எனும் ஆசான்களால் !
வயதைந்தை அடைந்ததும்
தமிழ் அன்னையின் மடி ஏந்தியது
துடிப்புடன் கலை கவின்களை
வகுப்பறை படிப்பித்தது
ஆசான் எனும் அன்னை தந்தைகளால் !
பிள்ளைப் பருவமும்
பிறகான வளர்ச்சியும்
எல்லையற்ற நல்லுணர்வுப் பயிற்சியும்
பண்பு முதிர்ச்சியும் வழியும் அட்சயம் !
ஆரம்ப வகுப்பறைக்குள்ளும்
அம்மா பின் ஒழிந்தழுகை
அகன்று செல்லும் போதும்
தமிழ் அன்னை முன் வழிந்தழுகை !
அது ஆய கலைகளின்
ஆலய கர்ப்பக்கிரகம் !
கல்விப் புதையல்களின்
அற்புத பொக்கிஷம் !
காலத்தால் கடையப்பட்ட
ஓளிர் வைரம் !
சொல்லால் வாழ்த்தும்
ஆல் விழுது !
சோதனைகளால் உயரப்பறத்தும்
சுடர் ஏவுகணை !
மக்கு மரமண்டை செக்கு எருமை
தொக்கு நிற்கும் பட்டங்கள் பெருமை !
குட்டும் அடியும் குறையா அர்ச்சனையும்
பின்னே இனிக்கும் முழு நெல்லிக்கனிகள் !
ஆறென்ன அறு மூன்றென்ன
ஆசானாய் ஓய்வெடுத்த
அறுபது வயதென்ன
வகுப்பறைகள் கலைந்த பொழுதுகள்
ஏக்கத்தோடு வழியும் விழிகள்
முழுத் தாகத்தோடு தேடும் கால்கள் !
- பிரியத்தமிழ் -