தூது
தென் பொதிகையில் உயிர்பெற்று
தென்னங் கீற்றில் ஒலிப்பெற்று
சிறு துளையிலும் ஊடுருவி
சினுங்கி வரும் தென்றலே!
யாத்திரையாய் தொடங்கி இன்று
யாரைத் தேடி செல்கிறாயோ!
தேடிச் செல்லும் பாதையில்
தேன்மலரை வருடிச் சென்றாயே!
அந்தியில் உலவும் மங்கையை
அழகாய் தாண்டிச் சென்றாயே!
தாண்டிச் செல்லும் பூங்காற்றே
தூர தேசம் செல்வாயோ!
மாலையில் செல்லும் காற்றே
மங்கையின் நாயகனை காண்பாயோ!
மங்கையை வருடிய தென்றலே
மன்னவனையும் மெல்ல வருடுவாயோ!
வருடும் பொருட்டு சற்று
வட்டமிட்டு அங்கு நிற்பாயோ!
மன்னவனிடம் பையச் சென்று
மங்கையின் ஏக்கத்தை உரைப்பாயோ!
தயங்காமல் சற்று நின்று
தலைவனின் கூற்றை செவிமடுப்பாயோ!
உள்வாங்கிய செய்திகூற தாமதிக்காமல்
உற்சாகமாய் புறப்பட்டு வருவாயோ!
தூர தேசம் கடந்து
தூதை வந்து சமர்ப்பிப்பாயோ