ஏழ்மையின் எதிர்பார்ப்பு
ஏற்றம் தரும் வாழ்க்கை வேண்டாம் !
ஏசி அரை காற்றும் வேண்டாம் !
எதிர்பார்ப்பு எல்லாமே -
ஏளனமில்லா வாழ்வு மட்டும் !
உதிரஓட்டம் உள்ளவரை ;
உணவுக்கும் பஞ்சமில்லை !
ஏழ்மை என்ற எண்ணத்தை -
எதிர்த்து நாங்கள் போரிடுவோம் !
மாடிவீட்டு மவுசு இல்லை ;
மனமெல்லாம் மகிழ்ச்சிதானே !
மனை ஒன்று போதுமே -
மழையிலிருந்து காத்திடவே !
ஒய்யாரமாய் உடுப்பு வேண்டி -
ஒருநாளும் வேண்டியதில்லை !
ஓட்டை, ஒட்டு இல்லாத-
ஒழுங்கான உடை போதும் !
வித விதமாய் உணவும் வேண்டாம் ;
வியாதி வந்து வாடவும் வேண்டாம் !
வியர்வை சிந்தும் வேலைக்கு -
விரைவான கூலி போதும் !
கல்லும் மண்ணும் சுமக்கின்றோம் :
கள்ளம் கபடம் ஒன்றுமில்லை !
கால் வயிற்று கஞ்சிக்கே -
கவலைமறந்து சிரிக்கின்றோம் !