காதல் செய்வீர்

நமது கவியருவி குழுவில் நடந்த 'ஆதலினால் காதல் செய்வீர்' கவிதைப் பரிசுப் போட்டியில் மரபு கவிதைப்பிரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள
கவிஞர் கருமலைத் தமிழாளன் அவர்களின் கவிதை..

(மரபுக்கவிதை)
ஆதலினால் காதல் செய்வீர்
பாவலர் கருமலைத்தமிழாழன்

பெண்ணழகைக் கண்டுநெஞ்சுள் கவர்ச்சி யாலே
-----பெருகிவரும் ஆசையது காத லன்று
கண்ணெதிரில் பெரும்பணத்தில் புரளும் ஆணைக்
-----கண்டுமனம் மயங்குவது காத லன்று
கண்ணோடு கண்நோக்கி அன்பு தோன்றி
-----கலந்துநெஞ்சில் பிறப்பதுதான் உண்மைக் காதல்
மண்மீதில் எதிர்ப்புகளை வென்றே யிங்கு
-----மகிழ்வாழ்வைத் தருமந்தக் காதல் செய்வீர் !

பூங்காவில் திரையரங்கு சாலை யோரம்
-----புரிகின்ற விளையாட்டு காத லன்று
பாங்காகக் கல்விகற்கும் பருவம் தன்னில்
-----பழகுவதும் பேசுவதும் காத லன்று
ஓங்கிகுலம் தழைப்பதற்கே மனங்கள் ஒன்றி
----ஓருயிர்தான் ஈருடலை இயக்கி யிங்கே
தீங்கிழித்துச் சமத்துவத்தைத் திகழச் செய்யும்
-----தீந்தமிழர் களவொழுக்கக் காதல் செய்வீர் !

சாதிகளை உடைத்தெறியும் ! மதங்கள் சொல்லும்
-----சாத்திரத்தைக் கிழித்தெறியும் ! உயர்வு தாழ்வை
நீதியெனச் சொல்லிவைத்த கயவர் தம்மின்
-----நீசமொழி பொய்மைகளின் தோலு ரிக்கும்
வீதிகளில் நடந்தாலே தீட்டாம் என்று
-----விதித்திருக்கும் ஆணவத்தை ஓட வைக்கும்
போதிக்கும் பொதுமைதனை ஆத லாலே
-----பொழிகின்ற அன்பினிலே காதல் செய்வீர் !

முகந்தன்னைப் பார்த்துப்பொன் நகைகள் கேட்டு
-----மூட்டையாகத் தரப்பணத்தட் சணையைக் கேட்டு
சுகந்தன்னைத் தருகின்ற பெண்ணைச் சந்தை
-----சுழிமாட்டை விலைபேசல் போலப் பேசித்
தகவின்றிப் பெண்மையினைக் கீழ்மை செய்யும்
-----தன்னலத்துப் பேய்களுக்குப் பாடம் சொல்ல
அகமிணைக்கும் அன்பாலே காதல் செய்வீர்
-----அழுக்குமனப் பெற்றோரைத் திருந்தச் செய்வீர் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (24-Feb-16, 5:13 am)
பார்வை : 131

மேலே