ஞான வாசிட்டம் - 3

கோடையில் நீர்வரத்து குறைகின்ற ஆறென
அகவை பதினைந்தில் இராமன் மெலிந்திட
ஓரிரு வார்த்தையே பேசி ஒதுங்குதல்
காரணம் யாதென வினவிய தந்தைக்கு
யாதுமிலை என பதிலுரைத்தான் இராமனும் !
சிந்தனை வயப்பட்டே மனம் ஒன்றி
லயித்தது எங்கென யாரும் அறிகிலர்
கௌசிகன் அந்நேரம் அயோத்தி அவைக்கே
வந்து வேண்டினன் துணையாய் இராமனை
அரக்கர் தடுத்திடும் தவத்தின் நிறைவுக்கே!
தயங்கிய தசரதன் கௌசிகன் சினத்தினால்
சிதறும் அபாயம் உளதென்று அறிந்த வசிட்டர்
பரிந்துரைத்தார் இராமனின் அவசியத்தை
இராமனும் தன மனவோட்டம் எடுத்துரைத்தான்
காரணம் கேட்ட கெளசிகர்க்கே!
இராமன்:
எல்லாப் பொருளும் தீமை உடைத்தே
அன்றியும் இடர் சேர்வதற்கு இடமுடைத்து
அலையும் மனதின்கண் எல்லாம் ஒன்றாகி
நுகரும் இன்பம்தான் நாளும் வளர்ப்பதுவே
ஆன்மா விடுத்து அத்தனையும் பொய்யே ..
ஈதில் எவர் பெற்றார் எதனைஎன்றே
ஆராய்ச்சி செய்யுங்கால், வழிப்போக்கர்
கானல் நீரதனை நீரல்ல எனத்தெளிந்து
விரும்பாது வெறுப்பது போல்
எல்லாம் பொய்யே என வுணர்ந்தேன் ..
வெல்லவியலா புலப்பொருட்கள் இவை
தரும் துன்பந்தான் தாக்காமல் மீளும் வழி
தேடுகின்றேன் ..முதிர்ந்த மரம் தனக்குளே
தீயதனால் வேகின்ற நிலையானேன்
இம்மயக்கம் கழுத்திலே கட்டிய கல்லாக!
இவ்வுலகியல் துன்பங்கள் பதினொன்று
என வுணர்ந்தேன்.. செல்வம், வாணாள்
அகந்தை, மனம் , ஆசை, உடல், பால்யம்
இளமை, காமம், முதுமை , காலம்
என்பனவே யவை என்றறிந்தேன் !
பி.கு.: இனி இப்பதினோரு உலகியல் துன்பங்கள், அவற்றின் தன்மைகள் பற்றி அறிய..
- தொடர்வேன் .