உண்மைக்கு உறக்கமில்லை

உண்மைக்கு உறக்கமில்லை..!!

பள்ளிக்கு செல்வதாய் பொய்யுரைத்து
வேகாக வெய்யிலில்
வெட்டிப்பயல்களுடன்
மட்டை பந்து ஆடிய காலங்கள்..!

நயன்தார நடித்த படங்கள்
பார்த்த நேரங்கள் எல்லாம்
பள்ளியில் சிறப்பு வகுப்பு நேரங்களாக
திருத்தி திரிபு செய்யப்பட்டபோது
அறிந்திருக்கவில்லை
சீரழியப்போகும் வாழ்க்கையை..!

உண்மைக்கு பொய் போர்த்தி
திணறவிட்டபோது
உண்மை சபித்திருக்கக்கூடும்
"உருப்படாமல் போ"வென்று..!

தேர்விற்கான முடிவுகளில் ஒளிந்திருந்தது
உண்மையின் சாபம்..!

தினத்தந்தியிலிருந்து தெறித்து விழுந்து
கெக்கலித்து சிரித்தது ஓர் நாள்
உறக்கமின்றி தவித்த உண்மை..!

பொய் உரைத்தவனுக்கு
இனி உறக்கமில்லை..!

உணர்ந்தவன்
உண்மையிடம் மன்னிப்பு கேட்டு
மன்றாடியதில்
ஒட்டிக் கொண்டுவிட்டது
அவனிடத்தில் உண்மை..!

அவனை உயர்த்தியது
சில காலங்களின் விரயத்தில்..!

அனுபவங்கள் அடித்த அடியில்
உண்மையை பிடித்தபிடி விடாமல் அவன்
வெற்றிகளை தொட்டவண்ணம்..!

மனசாட்சியின் வடிவில் உண்மை
இன்னமும் அவனுள்
விழித்துக் கொண்டுதானிருக்கிறது
துன்பங்களை சேரவிடாமல்
விரட்டிக் கொண்டே...!


(குறிப்பு : 20-02-2015 அன்று பெரம்பூரில் கவி ஓவிய பத்திரிக்கை
நடத்திய கவி அரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. தலைப்பினை
அளித்து வாசிக்க பணித்த பத்திரிக்கை ஆசிரியர் திரு
இளைய பாரதி அவர்களுக்கு என் நன்றி)

எழுதியவர் : சொ.சாந்தி (25-Feb-16, 10:47 pm)
பார்வை : 72

மேலே