திருமரணம்
மரணப்படுக்கையில் கிழவன்.
கிழவி இட்ட நம்பிக்கை முத்தம் கண்ணீராக வழிந்தோடிய அந்த தருணம் ,
என்றோ நான் எழுதி மடித்த
காதல் கவிதையைப் பிரித்துப் பார்த்தேன்
திருத்தி எழுத!
காதல்!
வாழ்க்கை என்னும் அகராதியில்
வயது தரும் தேடல்!
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு பொருள்!
முதல் மீசை.
முதல் இச்சை.
கண்ணாடியில் ஓயாமல் விழும் பிம்பம்!
உனக்கு மட்டும் ஒலிக்கும் ஹார்மோன்களின் கச்சேரி தூங்காத கனவுகள் .
தூங்கிய நினைவுகள்!
என்ன? என்ற கேள்விக்கு புன்னகை
மட்டுமே பதிலாகும்.
காதல் அப்போது கெட்ட வார்த்தை.
காதல்!
நான் வாயிலிட்ட சிகரெட்டிற்கு
அவள் முறைத்துக்கொண்டே இட்ட தீ!
அவள் மனம் இரும்பியதால் அது என் இறுதி இழுவை!
விடுவித்தேன் சேர்த்து வைத்த புகையையும்
அவள் முகத்தில் மறைந்திருந்த
புன்னகையையும்!
காதல்!
திருமணச்சந்தையில் தகுதி பார்த்து
ஜாதி பார்த்து
நிறம் பார்த்து
சடாலென பிறந்து விடும் காதலை விட
காக்கை குருவிகளின் காதல் மேல்
என்று தெருக்களில் கத்திக்கொண்டு ஓடினேன் .
அதோ போகிறான் பைத்தியக்காரன் என்றார்
ஒரு தந்தை தன் மகனிடம் .
எங்கிருக்கிறாய் எனதருமை பைத்தியமே!
இவ்வுலகிற்கு நாம் பைத்தியம் என்றால்
இவ்வுலகமே நமக்கு பைத்தியம் தான் வா!.
நம்பிக்கை என்னும் அணியா தாலியோடு
நாம் தொடங்கும் வாழ்க்கை
இம்மண்ணில் பல பைத்தியங்களைப் படைக்கட்டும்!
காமம் இச்சை தீர்ந்தபின்
உலகம் சுற்றி ஓய்ந்தபின்
கோபம் தாபம் மறைந்தபின்
ஊடல் கூடல் குறைந்தபின்
பல பிரியா சண்டையிட்டு
கண்களால் தூது விட்டு
பூச்செண்டு தந்து தவறாமல்
பொய்கள் சொல்லி கவராமல்
காதல் என்று கரையாமல்
உயிரே என்று உருகாமல்
உடலைக் கடந்து உணர்வுகளில் தேடுவோம் காதலை .
கண் மறைக்கும் நிறைகளைத் தாண்டி குறைகளையும் காதலிப்போம் .
தள்ளாடும் வயது வரைக் காத்திருந்து மரணத்தில்
மணம் முடிப்போம் .
அது திருமரணம் என்றாகட்டும்!