கண்ணாடி மாளிகையும் ஊஞ்சல் சிறுமியும்
முன்பெல்லாம் அடிக்கடி கனவுகளில் காணும் அந்த கண்ணாடி மாளிகையை இப்போதெல்லாம் காண்பது என்பது அரிதாகி விட்டது. ஒரு வேளை என் கனவுகள் குறைந்திருக்கலாம். இல்லை அந்த மாளிகை வேறு ஒருவரின் கனவுக்கு குடி பெயர்ந்திருக்கலாம்.
எனக்கு அந்த மாளிகை மிகவும் பிடிக்கும். இதுவரை எந்தக் கார்ட்டூன் படங்களோ ஹாலிவூட் மூவிகளோ சித்தரிக்கத் தவறிய மாளிகை அது. சரளைக் கற் தூண்கள், கண்ணாடித் தரை, பளிங்கு ஜன்னல் என எத்தனையோ வர்ணனைக்கு மறந்த உவமானங்களைக் கொண்டது என் கனவு மாளிகை.
அந்த மாளிகையில் நான் அதிகம் விரும்புவது அங்கிருக்கும் ஊஞ்சலைத்தான். அந்த ஊஞ்சலில் எப்போதும் ஒரு சிறுமி ஆடிக் கொண்டிருப்பாள். அவள் முகத்தில் இந்த உலகத்தின் ஒட்டு மொத்த சந்தோஷத்தின் ரேகைகளும் படிந்திருக்கும். அவள் என்னைக் கண்டதும் வழக்கம் என்பது போல புன்னகைப்பாள். அந்த நேரங்களில் நான் அவளாகிப் போவேன். அவளின் ஒட்டு மொத்த சந்தோஷங்களையும் திருடி என் கன்னங்களில் பூசிக் கொள்வேன். பின்பு அந்த ஊஞ்சலும் நானும் சினேகிதமாகி விடுவோம். சிறிது நேரத்தில் என் கனவு கலைந்து விடும். ஆனாலும் அடுத்த நாள் அதற்கடுத்த நாள் என என் கனவு தொடரும். அந்தக் கனவு என் வாழ்க்கையோடு ரொட்டீனான விடயம் என்றாற் போல ஒன்றியதாய் மாறியிருக்கும்.
ஒரு நாள் வழமை போலவே அந்தக் கனவும் வந்தது. இப்போது அந்த சிறுமிக்கு பதிலாய் நான் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. அப்போது என்னை நோக்கி அந்த சிறுமி வருகிறாள். அவள் முகத்தில் சந்தோஷம் நிரம்பி வழிகிறது. அவள் எனைப் பார்த்ததும் எப்போதும் போல புன்னகைக்கிறாள். ஆனாலும் என்னால் அவளைப் போல சகஜமாய் புன்னகைக்க முடியவில்லை. நான் அப்படியே அமர்ந்திருக்கிறேன். அவள் என்னருகில் வந்து என்னை உற்றுப் பார்த்து விட்டு வருத்தத்துடன் நகர்ந்து விட்டாள். அன்று மட்டும் நான் வெகு நேரம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேன். என்னால் சிறிது நேரத்திற்குப் பின்னர்தான் உணர முடிந்தது. அந்தச் சிறுமிக்கு அப்பட்டமாய் என் பால்யத்து சாயல். அவள் வேற்று நபரல்ல. எனக்கு நெருக்கமான நான் தான். இதை உணர்ந்ததும் மனம் முழுக்க துக்கமும் வெறுமையும் ஒரு சேரப் பொங்கியது.
அன்றிலிருந்து அந்த மாளிகை பற்றிய கனவு வருவது குறைந்து இப்போது அடியோடு நின்றே விட்டது. ஆனாலும் மனம் முழுக்க அந்த மாளிகை மீண்டும் ஒரு முறை கனவில் வராதா என்ற ஏக்கம் வியாபித்து நிற்கிறது. என்னதான் முயன்றும் என்னால் கனவில் மட்டுமல்ல நிஜத்திலும் காண முடியவில்லை அந்த கண்ணாடி மாளிகையையும் ஊஞ்சல் சிறுமியையும்....