ஏய் என்னய்யா லூசு மாதிரி பேசுற

அடிவானத்தில்
வண்ணங்களை குழைத்து
கடற்கரையில்
ஒரு கானகம் தந்தது இயற்கை

நானும் அவளும்
உயிரினிலும் மேலாய்
அவளும் நானும்
ரத்தத்தின் ரத்தமாய்
காதல் சிலாகித்து
கவிதையாய் கிடக்கையில்

கறையில் தூக்கியடிக்கும்
அலையின் நுரைகளாய்
காண்போருக்கு
நாங்கள் வெறும்
சதைகளும் உடல்களும் தான்

நமக்கு நாமே என்றெல்லாம்
கண்ணாடி கோப்பையில்
பழரசமாய் தளும்பும்
முத்தங்களை இடம்பெயர்தலின்போது

வழிகளற்ற காட்டினுள்
தொலைந்துவிட்டதை போல
காட்சிகள் பலவற்றை
கனவுகளில் தொலைத்தோம்..

*

நம் தேசத்தில்
காதல் வெறும்
மணல்வீடுகள் தான்

எளிதில் களைக்கப்படலாம்
எளிதில் எரிக்கப்படலாம்

விரைவில்
தண்டவாளத்துக்கிடையே
என் பிணத்துடன்
என் கையெழுத்தில்
ஒரு கடிதத்தோடு
உங்களை சந்திக்க நேரிடலாம்
விபச்சார ஊடகத்தின் வாயிலாக

நம் தேசத்திலும்
காதலர்கள் வாழும்
காலம் வரும்
காத்திருப்போம்..
என தூக்கத்தில்
நான் உளறியபோது

'ஏய் என்னய்யா லூசு மாதிரி பேசுற,
சீக்கிரம் எழுந்திருயா'
என்று அதட்டும் மனைவியிடம்
எப்படி சொல்வது
இன்றைய கனவிலும்
என் பழைய காதலியென்று..

-கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (3-Mar-16, 8:03 pm)
பார்வை : 91

மேலே