ஜோஸ் ரிசாலின் கடைசி கவிதை - மொழி பெயர்ப்பு 1
 
            	    
                விடை கொடு என் தாய் மண்ணே !
கதிரவன் இதமாய் தழுவும் நிலமே !
முத்துக்கள் விரவிய ஓரியன்ட் கடலே !
நாங்கள் இழந்துவிட்ட ஏதேன் தோட்டமே !
மார்பு புடைக்கும் மகிழ்வோடு 
வாடிய என் உயிரை உனக்கு பரிசளிக்கிறேன் 
இதே வாழ்வு உயிர்ப்போடு இருந்தபோதும்
அதை உன் பாதங்களில் சேர்க்க தயங்கியதில்லை  
யாதொரு வலியும் தயக்கமுமற்று 
போர்களத்தின் கோர உக்கிரத்தில் 
உனக்காக உயிரை நீத்தார் பலர் 
மண்ணை காக்க தன்னுயிரை 
கொடுக்க துணிந்தவனுக்கு 
சைப்ரசோ, லாரலோ......
வெண் லில்லியோ, வெட்டவெளியோ....
தூக்கு மேடையோ, போர் முனையோ....
எல்லா இடமும் ஒன்றன்றோ !  
நீண்ட அயர்வான இரவு தன் சாயமிழந்து 
பகலை முன்மொழியும் விடியலாக உடையும் 
அதிகாலையை தரிசித்தப்படி நான் மரணிப்பேன் 
அவ்விடியலில் .....
செவ்வானம் தன் சாயலில் 
சற்று பொலிவிழந்திருந்தாலும்,
என் குருதியைத் தொட்டு முலாமிடுங்கள் 
அதன் அடர்சிவப்பு நிறத்தை  
முளைக்கும் ஒளிக்கதிர்கள் பூசிக்கொள்ளட்டும் 
குறிப்பு :
ஜோஸ் ரிசால் பிலிப்பைன்ஸ் புரட்சித் தலைவர். மறுநாள் காலையில் மரண தண்டனை என்ற நிலையில் அவர் எழுதிய உணர்வு மிக்க கவிதையை மொழி பெயர்த்துள்ளேன். அந்த கவிதை மொத்தம் 14 பத்திகளைக் கொண்டது. அடுத்தடுத்த பதிவில் மீதமுள்ள பத்திகளின் மொழி பெயர்ப்பை பதிக்க உள்ளேன்.
	    
                
