முடிவுறாக் கவிதைகள்

மீண்டும் ஒரு அழகான
கற்பனையை வீணடித்துவிட்டு
மெல்ல மெல்லத் தூர
விலகிக் கொண்டிருக்கிறது ஒரு கவிதை.


படிமங்களின் பூச்சுக்களிடையே
முகங்களைத் தொலைத்தவார்த்தைகள்
முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க
முகம் கொடுக்க முடியாமல்
மூடிக்குள் தன்னை
முடக்கிக் கொள்கிறது பேனா.


சாளரக் கம்பிகளூடே
தொலைவில் வானம்
விடியலுக்குத் தயாராகிறது..
மேசை இழுப்பறையுள்
மறுபடியும் இந்த முடிவுறாக்
கவிதைஉறங்கிக் கொள்ள
மௌனத்தை மட்டும் உன்
அஞ்சல் பெட்டிக்கு அனுப்பி வைக்கிறேன்.


ஓட்டவும் முடியாமல் விலகவும்முடியாமல்
நிலையில்லாமல் ஊர்ந்து கொண்டிருக்கும்
ஓர் நீர்த்திவலையை
தாங்கிய தாமரை இலையின்
தவிப்பாய் என்னோடு
பயணிக்கும் உன்மீதான
என் பிரியங்கள்..


இதைப்புரிந்து கொள்ளமுடியாத
இடை வெளிகளோடு
நகர்ந்து கொண்டிருக்கும்
நாட்கள் என்மீதான உன்
வெறுப்புக்களைச் சம்பாதித்தபடி ...

எழுதியவர் : சிவநாதன் (6-Mar-16, 7:22 pm)
பார்வை : 111

மேலே