நடமாடும் நதிகள் - 32 - எழுத்தில் என் 800 ம் பதிவு

தளத்தின் பெண் படைப்பாளிகள் வாசகிகள் மற்றும் எல்லா மகளிருக்கும் இதயம் கனிந்த மகளிர் தின வாழ்த்து.

ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்துக்குள்ளும் ஊற்றெடுக்கும் சொல்லவொனா துயர அருவிகள் கண்ணீராகி கன்னவெளிகளில் நடமாடும் நதிகளாய் பாயக்கூடும் . இந்த நதிகள் பாய்வதற்கான பாதிப்புகள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன் ..

1)பிறந்தது பெண் குழந்தை.
சுரந்தது காம்பில் பால்.
கள்ளிச்செடிக்கு.
*************************
2)தையல் நிலையத்தில் வேலை
உடுதுணியில் போட்டிருந்தாள்
அதிகமாய் ஒட்டு..

*************************
3)மாதாந்தம் கூடுகிறது சந்தை
இன்னும் விலைபோகவில்லை.
முதிர்கன்னி.
**********************************

4)மகள் பள்ளிக்கூடம் போகிறாள்
அம்மா தண்ணியடிக்கிறாள்.
போதை தெளியும் கணவன்.

*******************************
5)மாமியார் தலையில் மல்லிகைப்பூ
மருமகளுக்கு மறுதலிப்பபு.
விதவை

****************************
6)வேய்ந்திருக்கும் பாதுகாப்பு வேலி
மேய்வதற்கு விளைந்த பயிர்.
பள்ளிக்கூட மாணவி.

******************************
7)ஊர் கும்மி அடிக்கிறது
அடிவாங்குகிறது மத்தளம்
வாழாவெட்டி.

********************
8)ஊருக்குப் பொதுசேவை.
பரிசு அவமானம்.
விலைமாது.

*********************
9)வானத்தைப் பார்த்தாள்
கருக்கட்டியிருந்தது மேகம்.
மடியைத் தடவும் மலடி.

*************************************
10)விளக்கில் எண்ணெய் இல்லை.
வீதியில் எரிகிறது
குடும்ப விளக்கு.

******************************
தொடரை நிருணயித்த திரு. ஜின்னா
தொடர்ந்து ஒருங்கிணைக்கும் திரு. முரளி
துல்லியமாய் பெயரிணைக்கும் திரு ஆண்டன் பெனி
தூரிகையால் முகப்பு படத்தைக் கவிதையாக்கிய திரு கமல் காளிதாஸ் உங்கள் நால்வருக்கும்
வாழ்த்துகள்

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (8-Mar-16, 2:06 am)
பார்வை : 724

மேலே