கான் சூழும் கனவு காண் - காதலாரா
கான் சூழும் கனவு காண் - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உருவமற்ற கனவினுள்
உருண்டெழுந்து உசுப்பி
யாருமற்ற எம் தனிமையை
உளற வைக்க தோன்றும்
நெருப்புருவ மர உச்சிகளில்
வெறும் புருவம் விழிக்கிறது....
விழியின்றி தொடரும்
ஓராயிரம் உடல்களும் ...என்னுள்
மொழியின்றி படிப்பது
கருநிற கான் வழி...
கடக்கும் கால் நகம்
பதிக்கும் ஆழ் நகல்களில்
எனக்கான ஏடுகளை
முதல் முறை எழுதுகிறேன்
பாத வரியென பயமின்றி....
மஞ்சள் நிற மாய சாயலை
எம் பாதம் யாரிடம் பெற்றது...
வேற்றினமாய் படரும்
வெற்றசைவு உடல்களை
உற்றுப் பார்க்கையில்
உயிர் குடிக்கும் நீர்மம்
ஊற்றென சொட்டுகிறது...
பாதி தூரப் பாதையில்
ஓராயிரம் உடலும் ... உள்
ஊதி இரண்டாய் பெருத்தன..
நான் நானாக நடந்தேன்...
மீதி பாதை முழுக்க
மிருகத் தோற்ற மீசையுடன்
வெட்டுப் பட்ட மரங்கள்
வியர்த்துக் கிடந்தன....
நசுங்கிய நிலையில் நான்...
குகைக்குள் நுழையும் முன்
பகை உருவ உடல்கள்
பத்து மடங்காய் பருத்தன...
மஞ்சள் நிற பாதம் கடவாக
உறைந்து குனிந்து நுழைந்தேன்...
விரிந்த புதையலில்
வீரிய விதைகளை
எண்ணியே எடுக்க
அவைகளும் ஆயிரம்..
ஒரு விதை தொலைக்காது
என்னுடலுள் துளைத்தேன்
ஆயிரம் விதை கதையை....
வெளியேறிய மறுநொடி
வெறியேறிய வேற்றின உடல்கள்..
என் சதையாடு உறிஞ்சியெடுத்தது
ஆளுக்கொரு விதையை.....
என் எலும்பை வைத்து
கான் படைக்க
ஆத்மா எழுகிறது....
- காதலாரா..