எரியும் மனசு

எரியும் மனசு எவருக்கும்
--பிறப்பின் பிரிவுகள் கண்டு !
சாதிமத கொள்கை வேறுபாடு
--ஏழை பணக்காரன் பாகுபாடு !
ஏற்றத் தாழ்வுகள் தழைத்திட்ட
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--என்றும் தொடரும் இங்கு !
பகுத்து அறியாத உள்ளங்கள்
--வகுத்து வாழாத இதயங்கள் !
தொடரும் மூட நம்பிக்கை
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--நிலை கெட்ட மாந்தரால் !
மாறா மடமை செயல்களும்
--தவறிடும் கடமை உணர்வும்
அழிவிற்கு அடித்தளம் ஆகும்
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--தடம் மாறிய அரசியலால் !
வன்முறை ஒன்றே வழியென
--வாழும் நீசர்கள் நாட்டில்
அறவழி நாளும் தேய்கின்ற
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--தரமிழக்கும் சமூகம் கண்டு !
வீழ்கிறது தமிழர் பண்பாடு
--பாழும் அந்நிய மோகத்தால்
மறையும் நமது கலாசாரத்தின்
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--ஊடுருவும் பகைவர் கண்டு !
தேசத்தின் சுவாசத்தில் வாழும்
--இனதுரோகம் புரியும் ஈனர்கள்
இன்பமுடன் உலகில் உலவும்
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--என்றும் காணும் இந்நிலை !
நிலையறிந்து நடை போடுவீர்
--நிம்மதியுடன் நம்மினம் வாழ !
ஓரினமென ஒற்றுமைக் காப்பின்
--நீரூற்றாகும் எரியும் மனசும் !
பழனி குமார்
( கடந்த பிப்ரவரி மாதம் 19 ம் தேதி நான் முகநூலில் பதிவிட்டது )