யாதுமாகி நின்றாய்

யாது மாகி நின்றாய்-- காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம்-- காளி
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் -- காளி
பொறி களைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.

இன்ப மாகி விட்டாய் -- காளி
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை யல்லால் -- காளி
பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் -- காளி
ஆண்மை தந்து விட்டாய்
துன்பம் நீக்கி விட்டாய் -- காளி
தொல்லை போக்கி விட்டாய்.


- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

எழுதியவர் : நரசிம்மன் பாரதி (9-Mar-16, 10:15 am)
சேர்த்தது : நரசிம்மன்
பார்வை : 1221

மேலே