இயற்கை கற்றுத் தரும்

வரம்பு கொண்ட வயல்களில்
நீர்வளம் குன்றா பயிர்களில்
வண்ணத்துப் பூச்சி மட்டும்
தன்னிஷ்டம் போல் பயிர்கள்
ஒவ்வொன்றாய் தாவிக் குந்தி
தன்ஆனந்த சுகத்தை அனுபவிக்கிறது
இயற்கையின் தாலாட்டில் இசைந்து
தலையாட்டும் பயிர்களும்
இவ்வண்ணத்துப் பூச்சிகளின் ஸ்பரிசத்தையும்
அவை தம்மைக் கொஞ்சிக் குலாவும்
மகிழ்வையும் கணம் கணமாய்அனுபவித்து
இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு
உருவம் பருவம் ஏதும் இல்லா மென்மையின்
சுகத்தில் மிதக்கின்றன
இந்த பச்சை பசேல் பயிர்கள்
இனிவரும் தமது அறுவடைக் காலம்
என எண்ணி அச்சம் கொண்டதாக இல்லையே
ஏன் / நாளை என்பது நம் கையில் இல்லை
எதற்கு வீண் கவலை என்றும்
இன்று மகிழ்வோம், அதுவும் கூடி வரும்
வண்ணத்துப் பூச்சியுடனும் தாலாட்டும் காற்றுடனும்
ஆகா என்ன குதூகலம்/
இந்த அற்ப பயிருக்குள் இத்தனை ஆனந்தம்,
நினைப்பது எதுவும் நிச்சயமல்ல
நிச்சயமானதை நினைத்து மகிழ்வோம்

எழுதியவர் : பாத்திமாமலர் (11-Mar-16, 12:58 pm)
பார்வை : 344

மேலே