இயற்கையைப் போற்றுவோம்

.

தன்னிலும் இருமடங்கு நீளக்
கோலினைக் கையில் ஏந்தி
முன்னிலும் முந்தும் ஆட்டுக்
குட்டியை மெல்லத் தட்டும்

தட்டும் இடையனின் பாதைப்
பச்சைச் சிறுவயல் வரப்பில்
கண்ணளந்திடுங் காட்சியில்
வண்னங்கள் மிகுந்திருக்கும்.

இருக்கின்ற மரகதப் போர்வை
கொண்ட வயல்களில் கொக்கு
அணியாய் அரைகச தூரத்துக்
கொன்றாய் அழகு செய்யும்

செய்யெனச் செல்லும் காற்றில்
வளராத நெல்லின் நாற்றும்
நீரதன் பரப்பில் வானைப்
பாரெனச் சொல்லி நிற்கும்

நின்றிடும் மரங்கள் எல்லாம்
அன்றைய பூவினை காயினை
தென்றலே எடுத்துச் செல்லென
நன்றியை அசைத்துக் காட்டும்

காட்டிடும் திசையில் எல்லாம்
கதிரவன் ஏத்தும் சூட்டில்
வாட்டம் அடைந்த உழவர்
மேட்டினில் ஏக்கம் பரவும்

பரவிடும் சுகந்தம் மெல்ல
இரவினிற் செய்த சோற்றில்
ஊற்றிய நீராய் ஊறிடும்
காயாய் வட்டிலில் ஏறும்

ஏறிடும் நாகம் ஊர்ந்து
பால் வைத்துளரா என்று
புற்றதன் கண்ணில் தலையைப்
படமுடன் விரித்து ஆடும்

ஆடியும் ஓடியும் ஆற்றில்
கூடிய காளையர் கூட்டம்
படித்துறை தன்னில் குளிக்கும்
பாவையரை ஒளிந்து ரசிக்கும்.

ரசிக்கக் கொடுக்கும் அன்னை
இயற்கை அவளே அறிவோம்
பசியும் பேராசையும் கொண்டு
அழிக்காமல் அவளைக் காப்போம்.

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (11-Mar-16, 4:08 pm)
பார்வை : 437

மேலே