அழகூட்டும் சுமைகள்

முன்னிருந்த அந்தணர்
ஓதிய மந்திரத்திடை
தந்த மங்கல நாண்
பதுமையென எந்தன்
பக்கத்திருந்தவள்
கழுத்தில் அணிந்தனன்.
அறுகு வீசியெமை
பெறுக நலமென
வாழ்த்தி முடிந்து
விருந்துண்டு சபையினர்
விட்டெமை ஏகினர்.
உறவு கூடிவர
ஊர்வலம் வந்து
கூடினோம் இணையென
குடிக்கெலாம் அறிவித்து
பொருத்தம் சோடியென
பெரியோர் வியக்க
நம்இல்லம் வந்திட
ஆராத்தி எடுத்து
வரவேற்றனர் பெண்கள்.
உபசாரம் முடிந்து
உறவெலாம் சென்றபின்
இரவான போதில்
மெள்ள அனுங்கிய
மென்குரல் கேட்டு
திகைப்புற்று வினவினேன்,
வலிகாலில் எனத்தன்
பட்டுப்பாதம் தூக்கிக்
காட்டினாள், பார்த்தனன்.
பல்லோர் வியக்கப்
பளிச்சிட்ட பட்டோலோ
மென்பாதம் புண்ணாக்கி
நொந்தனள்; நைந்தனள்!
அழகூட்ட நெய்த ஒளிர்
சருகைதான் உராஞ்சியதோ
ஊர்வலம் வருகையில்!
போகப் பொருளென
நிலைத்த கொள்கையில்
போட்டி அழகில்
அந்தஸ்தில் பெருகிட
கூட்டி அழகினை
காட்டிடும் எண்ணத்தில்
கூட்டினரோ துன்பத்தை
ஏற்றனரோ சுமைகளை!
ஏனிஃது?
அடிமையென நிலைக்கவோ
பெண்ணிற்கு
அழகூட்டும் சுமைகள்!
அப்படியே இரு கவிதை தொகுப்பில் இடம்பெற்ற கவிதை