யாரடி நீ மோகினி

இயற்றும் இந்தக் கவியில்
மறந்துவிட்ட வார்த்தைகளுக்கு
சொந்தக்காரி அவளோ..

நான் கவிஞன் அல்லன்;
ஆனால் எப்படிப் பிறந்தாள்?
எனக்குள் கவிதையாய்..

தொடுவானச் சிவப்பெடுத்து
மாதுளைப் பூவிதழில் தோய்த்து
வர்ணம் சேர்த்தாளோ
வஞ்சி அவள் அதரத்திலே..

கருமேகம் குழைத்தெடுத்து
கரியிரவின் இருள் திருடி
மையழகு சேர்த்தாளோ
மடந்தை அவள் விழிகளிலே..

செவ்வல்லி இதழ் மேலே
பரிதி தன் கதிர்ப்பட்டு
மின்னும் பனித்துளி போலே
நாணல் அழகியாளவள் கன்னப்பருவும்
எனைக்கண்டு மின்னியதே..

நீர் சேரா நிலையில் நின்று
தளிர்க்கொடி இளைத்தாற் போல்
சிறுத்த அவள் சிருங்கார இடைக்கண்டு
சிறியேன் நானும் சில்லாய்த்தான் போனேனோ..

யார் இவள்; யார் தான் இவள்??

உன் நாமம் இன்னதென அறிய ஏன் ஆவல் கொண்டேன்?
என் நிலை இங்ஙனம் என்றும் நான் கண்டதில்லையே..

உடல் நொந்தேன்;உளம் வெந்தேன்
கருகிவிட்ட என் வைகறை;
சுண்ணம் பூசிய என் இரவுகள்;
இமை கிழித்த உறக்கம்;
உறக்கம் விழித்த கனவுகள்;
கனவுகள் தந்த நினைவுகள்;
நினைவுகளில் எல்லாம் நீதானடி..

ஈரேழுகோடி சென்மம்
கடந்து விட்டேன்;
தத்தையவள் முத்துச்சிரிப்பில்
நீந்திய அந்தநொடி;

எனைக்கடந்து என் அகவைத்திருடிய
மோகினியே..நீ யாரடி...

எழுதியவர் : இனியகவி (15-Mar-16, 1:08 pm)
Tanglish : yaradi nee mogini
பார்வை : 309

மேலே