தேவதூது

தினமும் போலத்தான் புலர்ந்தது இன்றும்
மற்றுமொரு காலை பொழுது
இன்னுமொரு சராசரி நாளின் துவக்கம்
என் விருப்பமின்றி என் அனுமதியின்றி
என்னைச் சுற்றிக் கொள்ளும் தினப்படி வாடிக்கைகள்
ஒளிரும் சூரியனின் வெப்ப வீச்சிலிருந்து தப்பி
ஒண்ட இடம் தரும் அதே மர நிழலில் தான் நின்றிருந்தேன்
கொஞ்சமாய் வீசிய கோடை காற்றின் வேகம் தாளாமல்
சுழன்று வீழ்ந்த காய்ந்த சருகில் இருந்தது
என் முந்தைய இளைப்பாரல்களின் மிச்சம்
பெருமூச்செறிந்து புலன்களை ஆசுவாசப்படுத்திய
நொடிகளின் ஏதோவொரு கணப்பொழுதில்
எங்கிருந்தோ பறந்து வந்ததந்த தேவதூது !
புதிதாய் பிறக்க வைத்து புத்துணர்வு பெறச் செய்து
என் உள் இருக்கும் என் பிம்பத்தை
எனக்குக் காட்டிச் சென்றது
நில்லாமல் ஓடும் உலக நியதியின்படி
என் ஓட்டத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்கிறேன்
இம்முறை பூமியில் பாதம் புதைத்து
ஒரு தளிரையேனும் துளிர்த்தெழச் செய்யும் வேகத்துடன்

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (16-Mar-16, 10:25 am)
பார்வை : 62

மேலே