நினைவின் கீறல்

மறக்க நினைக்கும்
நிகழ்வுகளை
எப்படியெனும்
ஞாபகப்படுத்திவிடுகிறது
சன்னலோரப் பேருந்து பயணம்..
*
தண்டவாளமாய்
மௌனமித்து கிடக்கும் மனதில்
கடகடத்து
கடந்து விடுகிறது
ரயில் பெட்டியாய் நினைவுகள்..
*
எங்கோ எப்போதோ
எப்படியும்
எழுந்து கொண்டேயிருக்கிறது
ஒரு நினைவை பற்றிய
சில எண்ணங்கள்..
*
எல்லா மறதிகளிலும்
தொலைந்து போன
மிச்சங்களுக்கு
நினைவென்று பெயர்..
*
கனத்த மௌனங்களில்
அப்பிக்கொள்கிறது
நிறமற்ற நினைவுகள்..
*
ரகசியங்களைப்
பதுக்கி வைக்க
நினைவுகளே சிறந்தது..
*
சிறகை உதிர்க்கும்
பறவைக்கு தெரியாது
அது யாருக்கோ
நினைவின் சின்னமென்று...
*
படித்த கதையின்
பிடித்த பாத்திரத்தை போன்றது
நினைவுகள்
நிச்சயம் ஒரு படைப்பேனும்
தராமல் அழியாது...
*
நிஜங்களிலும்
நினைவுகளே பேசுகிறது
சில நினைவுகளுக்கு மட்டும்
ஊமை மொழி..

-கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (16-Mar-16, 8:31 pm)
Tanglish : ninaivin keeral
பார்வை : 127

மேலே