காணவில்லை உறக்கம்

அதிகாலை நான்
விழித்த போது
உதறிப்போட்ட
எனது உறக்கத்தைக்
காணவில்லை

படுக்கையில்
தலையணைக்கடியில்
மடித்து வைத்த
போர்வைக்குள் ....
எங்கும்
தேடியாயிற்று

விடிந்த போது
கனவொன்றில் என்னை
முத்தமிட்டெழுப்ப
வந்தவள்
நீ மட்டும்தான்

ஒன்று
நீ
திருடிச்
சென்றிருக்க வேண்டும்
அல்லது
நீ குளித்து முடித்த
ஈரத்தில்
ஒட்டிக் கொண்டு
வந்திருக்க வேண்டும்

எப்படியாகிலும்
அது
உன்னிடம்தான்
இருக்க வேண்டும்

இன்று
முன்னிரவில்
உன் கனவில்
உன்னை நான்
முத்தமிட வரும்போது
அதை என்னோடு
அனுப்பி வைத்துவிடு

அல்லது

என்னை
உன்னோடு உறங்கவிடு .

எழுதியவர் : முகிலன் (18-Mar-16, 2:19 pm)
Tanglish : kaanavillai urakam
பார்வை : 187

மேலே