இறைவன் தந்த செல்வங்கள் --- பொருட்செல்வம்

தமிழ் வாழ்த்து :-

முத்தமிழே ! முக்கனியே ! முத்தெனவே நிற்கின்ற
வித்தகமே ! வியன்பொருளே ! விடிவெள்ளிச் செந்தமிழே !
மொத்துமுமாய் நீயெனவே மோதகமாய் வணங்குகின்றேன் .
சித்திரமாய் எமைநாளும் சீரெனவே காத்திடுவாய் .

அவையடக்கம் :-

முற்றத்துக் கவியரங்கம் முதலானக் கவியரங்கம்
பற்றுடனே கவிதைகளை பாசமுடன் வனைந்திடவே
உற்றவராய் அழைக்கின்றார் உலகறியச் செய்கின்றார் .
கற்றவர்கள் எல்லோரும் கருத்துடனே பங்கேற்போம் .

தலைமைக்கு வணக்கம் :-

தமிழ்ச்செல்வி தலைமையிலே தரமானக் கவியரங்கம்
அமிழ்தெனவும் நடத்திடவே அம்மையுனை வாழ்த்துகின்றேன் .
தமிழ்மீது கொண்டுள்ள தணியாதப் பக்தியினால்
தமிழ்மொழியில் வணக்கங்கள் தவறாமல் உரைக்கின்றேன் .


இறைவன் தந்த செல்வங்கள் --- பொருட்செல்வம்

உமையம்மை அருள்கொண்டு சம்பந்தர்க்கு
------ ஊட்டவரு நற்பாலும் பொருளே ஆகும் .
தமைமுழுதும் அர்பணித்துக் கொண்டு தொண்டர்
------ தயங்காமல் செய்தொண்டும் பொருளே ஆகும் .
சுமையாகச் சேர்த்திட்ட பொன்னும் காசும்
----- சுத்தமிலா வகைவந்த நிலமும் வீடும்
அமையாது ; பொருட்செல்வம் என்ற நோக்கில்
------- அத்தகையப் பொருளெல்லாம் அழிவின் சின்னம் .


பொருள்இல்லா மனிதன்ஒரு பொருட்டே இல்லை .
------ போகின்ற இடமெல்லாம் இருளாய்ப் போகும் .
மருள்நீக்கும் நல்லறிவு கொண்டோன் தானும்
------ மதிப்பின்றிப் பொருள்இன்றேல் போதல் கண்டேன் .
சுருள்பசியால் வயிறெல்லாம் சுண்டிப் போகச்
------- சுகமிழந்துத் தவிக்கின்ற அறிஞன் பல்லோர் .
இருளொத்த வறுமையினை இடித்துச் சாய்க்கும்
-------- இன்னோளியே பொருட்செல்வம் என்றல் சாலும் .


இன்பத்தை ஈனுகிற தாயாய் நிற்கும்
------ இவ்வுலக வாழ்வதனை இனியதாக்கும் .
வன்பாற்கண் வளம்சேர்க்கும் வழியாய் நிற்கும் .
------ வகையான வாழ்விற்கே ஊற்றாய் தங்கும் .
மன்பதையின் துயரெல்லாம் மாளச் செய்யும்
------- மனத்தாழ்வு தனையும் இதுமாற்றிக் காட்டும் .
என்பதெல்லாம் எள்ளளவும் மிகையே இல்லை
------- எதுவும் இந்தப் பொருள் தன்னில் ஆகும் என்பேன் .


பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையென்றே
-------- பொருத்தமுறச் சொல்லிய நற்பெரியோர் தம்மை
அருளாளர் என்றே நாம் போற்றல் வேண்டும் .
------- அருளுக்கும் பொருள் வேண்டும் என்பதாலே .
இருள்சூழ்ந்த இடத்தினிலே விளக்கம் வேண்டின்
-------- இதமான பொருள் ஒன்றே ஒளியாய் நிற்கும் .
உருள்கின்ற வாழ்க்கைத்தேர் உலவும் பாதை
------- உல்லாச வழியாதல் பொருளால் அன்றோ ???

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Mar-16, 11:23 pm)
பார்வை : 273

மேலே