வேறு நிலாக்கள் 31 - ஜி ராஜன்

ஆண்பிள்ளை அழக் கூடாது
*****************************************

எனது
தொப்புள்கொடி
துண்டிக்கப்பட்டபின்
உன் கைவிரலின்
பிடிப்பில்தான்
உலகை நேரிட்டேன்...

நான்
தடுக்கி விழுந்தபோது
அம்மா தரையை சபிக்க
நீதான் எனக்கு வானத்தை
காட்டி நிமிர்ந்தெழச் செய்தாய்...

அம்மா
நிலவைக் காட்டி
என் வயிறை நிரம்ப வைத்தாள்..
நீ எனக்கு
சூரியனை காட்டி
என் அறிவை பெருக்க வைத்தாய்...

அம்மா
தாலாட்டுப் பாடி
என்னைத் தூங்க வைத்தபின்..
உறங்கும் என் முகம் கண்டு
நீ கனவுகள் கண்டாய்...

அம்மா
நான் வீட்டுக்குள்
அவளைச் சுற்றிவருவதில்
உவகை கொண்டாள்..
நீயோ..
வெளியே
உலகம் என்னைச் சுற்றிவர
ஆசை கொண்டாய்...

வீட்டினுள்
நுழையும்முன்
அம்மா என் முகம் கண்டு
பசியின் அளவை எடைபோட ..
நீ என் முகத்தில்
கவலை ஏதும்
நிழலாடுகிறதா என்று
உன்னிப்பாய் கவனித்தாய் ..

வளர்ந்த பின்
உன் ஸ்பரிசத்தை
நான் உணர்வது
கல்லூரி விடுதியில்
நீ என் கையில் பணம்
திணிக்கையில் மட்டும்தான் ..
அன்று உன் வியர்வை வாசம்
அம்மா கொடுத்தனுப்பிய
முறுக்கின் வாசத்தை விட
என்னை நெகிழ்வித்தது...

என்னை விட
தங்கையிடம் அதிகம்
பாசம் காட்டுகிறாயோ
என்கிற என் சந்தேகம்
என் மகள் வந்த பின் நீங்கியது...
பெண்மையை மதித்து
அரவணைப்பது என்பதுதான்
ஆண்மைஎன்று நீ சொல்லாமல்
சொல்லியிருக்கிறாய்...

ஆண்பிள்ளை
அழக்கூடாது என்பாய்..

வாய்க்கரிசி போட்டு
சிதைக்கு தீ மூட்டியபின்
உன் உடலோடு
என் உயிரும்
பற்றி எரிகையில்
என்விரல்
பற்றி நின்ற
உன் பேரனின்
கண்களில் நீதான் வந்து
சொல்கிறாயோ ...
ஆண் பிள்ளை அழக்கூடாது...

எழுதியவர் : ஜி ராஜன் (20-Mar-16, 8:38 am)
பார்வை : 170

மேலே