இல்லாள்

மடிப்புக் குலையாத
வண்ணப் புடவை
அலுவலகம் முடித்து
அந்தி சாயும் நாளொன்றில்
அவன் ஆசை ஆசையாக
அவள் பிறந்தநாளுக்கு
அளித்த பரிசுப் பொருகளை
ஞாபகப் படுத்திச் செல்ல ..

ஐந்தாறு பவுணில் தாலி
முதன் முதல்
அவனுடன் வாழ்வில்
இணைந்திட்ட நாளைச்
சொல்லிச் செல்ல

முற்றத்தில் பூத்துக் குலுங்கும்
குண்டு மல்லிப் பூக்கள்
அவன் ஆதரவாக
அவள் கூந்தலில் சூடி விட்ட
மாலைகளாய் மனதில்
வாசம் வீச

பூஜை அறையில்
சாமி மாடத்தில்
உள்ள குங்குமச் சிமிழ்
நெற்றியிலும் வகிட்டிலும்
அவள் பொட்டிட்ட நாட்களை
நினைவு படுத்திப் போக

அவள் அந்த வீட்டின்
ஒரு மூலையில்
அவள் குடும்பத்தாரால் மறைவாக
நிறுத்தி வைக்கப் பட்டிருந்தாள்
அவள் தங்கையின்
திருமணக் கோலத்தைக்
கண்ணால் கூட
பார்க்கமுடியாத ஒரு விதவையாக...

எழுதியவர் : சிவநாதன் (24-Mar-16, 12:43 am)
சேர்த்தது : சிவநாதன்
Tanglish : illaal
பார்வை : 633

மேலே